சாலை போடும் முறைகள்
cālai pōṭum muṟaikaḷ
பொது வாழ்வில் சாலைகள் மிகவும் இன்றியமையாதவையாகும்.
பொது வாழ்வில் சாலைகள் மிகவும் இன்றியமையாதவையாகும். இச்சாலைகள், நீண்டநாள் உழைக்கும் பொருட்டுச் சிறப்பான முறைகளில் போடப்பட வேண்டும்.
மண் சாலை. இது குறைந்த செலவில் உருவாகக் கூடிய சாலையாகும். மணல், குறுமணல், களிமண் ஆகியவை கலந்த மண்ணால் அமைக்கப் படுவது. மிகுந்த அளவில் விரிவடையக் கூடிய களிமண்ணையும், சாலை அமைக்கும் முன்னர் அவ்விடத்தில் உள்ள முட்செடி, புதர், மரம், செடி ஆகியவற்றையும் நீக்க வேண்டும். தூய்மைப் படுத்திய பின்பு, சாலை அமைக்கப் போகும் நீள, அகலங்களை வண்ணம் பூசிய மரக் குச்சிகளையும், முளைக் கம்புகளையும் நிறுத்தித் தெளிவாகத் தெரியுமாறும், இயற்கையாக உள்ள தரையின் மீது உருளையை உருட்டிச் சாலை இறுக்கமடையுமாறும் செய்ய வேண்டும். தேவையான அளவு இறுக்கமாக இல்லாவிட்டால் 50 செ.மீ. ஆழத்திற்கு மண்ணைக் கிளறி விட்டு, நீர் சேர்த்துப் பின்னர், தேவையான அளவு இறுக்கமடையச் செய்யலாம்.
சாலை உருளையைப் பயன்படுத்தி, அழுத்தம் கொடுக்கும் போது மண் அடுக்கின் கனம் 25 செ.மீக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஓர் அடுக்கு முழுமையாக இறுக்கம் அடைந்த பின்னரே, அடுத்த அடுக்குச் சாலைப் பொருள்களைச் சாலையின் முழு அகலத்திற்கும் பரவலாகப் போட வேண்டும். சாலையின் தேவையைக் கணக்கிட்டு நீர் சேர்க்க வேண்டும். ஏறத்தாழ 95% உலர் அடர்த்தி அடையும் வரை சாலையை இறுக்கமடையச் செய்ய வேண்டும். முழுமையாக இறுக்கமடைந்த பின்னர், சில நாள் உலர வைத்த பின்னரே, ஊர்திகளை அனுமதிக்க வேண்டும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> கூழாங்கல் சாலை. இது கனரக ஊர்திகள் செல்லக் கூடிய, குறைந்த செலவில் அமைக்கக் கூடிய, அனைத்துத் தட்ப வெப்ப நிலையிலும் ஓரளவு பயன்படக் கூடிய, நாள் ஒன்றுக்கு 400 ஊர்திகள் வரை செல்லக் கூடிய சாலை ஆகும். கூழாங்கற்களும், நொறுக்கப்பட்ட கற்களும் தூய்மைப்படுத்தப்பட்ட பின் பயன்படுத்தப்பட வேண்டும். சாலையின் இரு பக்கங்களிலும் கற்களைக் குவித்துச் சேர்த்த பின்னர், சாலை சம அளவில் குழி போல் வெட்டப்பட வேண்டும். சாலை உருளையைப் பயன்படுத்தி வெட்டப்பட்ட குழியை அழுத்தம் அடையச் செய்ய வேண்டும். பின்னர், 10 செ.மீ. கனத்திற்குச் சீராகக் கற்களைப் பரவலாக இட வேண்டும். பெரிய கற்கள் சாலையின் மையத்திலும், சிறு கற்கள் சாலையின் ஓரத்திலும் இருக்குமாறு அமைத்தால், சாலையின் நடுப்பகுதி மேடாக அமையத் தேவையான சரிவு கிடைக்கும். பின்னர், சாலை உருளையைப் பயன்படுத்தி, ஓரத்திலுள்ள கற்களை இறுக்கமடையச் செய்ய வேண்டும். முன்னும், பின்னும் உருளையை உருட்டி, இணை கோடுகளில் நடுப்பகுதியை நோக்கி உருளையை உருட்ட வேண்டும். தேவையான இறுக்கம் அடையும் வரை இடையிடையே நீர் தெளித்து உருட்ட வேண்டும். மேற்புறம் மணலைத் தூவி, உருளையை உருட்டி, உலர்ந்த பின்னரே ஊர்திகளை அனுமதிக்க வேண்டும்.
நீர் இணைப்புக் கற்சாலை. அடிப்பகுதியில் பெரிய கற்களை இட்டுச் சாலை உருளையை உருட்டி இறுக்கமடையச் செய்த பின்னர், பொடிக் கற்களையும், இணைப்புப் பொருள்களையும் அடுக்கடுக்காகப் போட்டு அமைக்க வேண்டும். இது 8—30 செ.மீ. கனமுடைய சாலையாகும். பெரிய கற்களை இதற்குப் பயன்படுத்தும் போது அவை வலிமை, வடிவம், புற அமைப்பு, அளவு, ஒத்த தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். கற்களைச் சாலையின் இரு புறமும் குவித்து 7.5 செ.மீ. தடிமனுக்கு இட்டு அமைக்க வேண்டும். மேற்பரப்புச் சமமாக இருக்கும் போது, அளவுகோலின் உதவியுடன் சீர் செய்ய வேண்டும். சாலை உருளையைப் பயன்படுத்தி இறுக்கம் அடையச் செய்ய வேண்டும். அதிர்வு உருளையையும் பயன்படுத்தலாம். ஓரத்திலிருந்து நடுப்பகுதி நோக்கிச் சாலை உருளையை உருட்டி நகர்த்த வேண்டும். இறுக்கமடைந்த பின்னர், சிறு கற்களை நிரப்பி, இடைவெளிகளை மூடி உருளையால் உருட்ட வேண்டும். பின்னர், மிகுதியாக நீரைத் தெளித்து, உருளையை உருட்ட வேண்டும். நீர் மிகுதியாகச் சேர்ப்பதால், காற்று வெளியேறி ஈரமான சிறு கல் தூள்கள் படிந்து, இறுக்கமடையப் பிணைப்பு ஏற்படும். அதன் மீது, இணைப்புப் பொருள், நிரப்பும் பொருள் ஆகிய குறுமணலை மெல்லிய அடுக்கில் பரவலாகப் போட வேண்டும். மீண்டும் நீர் தெளித்து, உருளையால் உருட்ட வேண்டும்.
இதனால், சிறு மண் உருளையில் ஒட்டாமல் விழுந்து விடும். தேவையான அளவு அழுத்தம் கொடுத்துச் சாலை இறுக்கமடைந்த பின்னர், 12 மணி நேரம் உலர வைத்து 6 மி மீ. கனத்திற்கு மணல் சேர்ந்த மண்ணைத் தூவி, மீண்டும் நீர் தெளித்து இறுக்கமடையச் செய்ய வேண்டும். பின்னர், சில நாள் உலர வைத்த பிறகே ஊர்திகளை அனுமதிக்க வேண்டும். களிமண் மிகுதியாக உள்ள இடங்களிலும், குறைபாடு உள்ள மண்கள் நிறைந்த இடங்களிலும் சாலை அமைக்க, அவற்றுடன் உறுதியும், கடினத் தன்மையும் அதிகரிக்கக் கூடிய பல்வேறு சாலைப் பொருள்களை இணைத்துச் சாலைக்கு வலிமை கூட்ட வேண்டும்.
குறிப்பிட்ட ஆழத்திற்குக் களிமண்ணை அகற்றிய பின்னர், 1% சுண்ணாம்பு கலந்த மண்ணை அடிப் பகுதியாக அமைக்க வேண்டும். சுண்ணாம்பு, களிமண்ணின் பிசின் தன்மையைக் குறைக்க வல்லது. முதல் அடுக்குச் சாலையாகக் களிமண்ணுடன் 2—3% சுண்ணாம்பு சேர்த்துச் சாலை அமைக்க வேண்டும். அடுத்த அடுக்கில், 2—3% சுண்ணாம்பு சேர்த்து வலிவூட்டிய மண்ணுடன் தேவையான அளவு நீர் சேர்த்து இறுக்கம் அடையச் செய்ய வேண்டும். பின்னர், பெரிய கற்கள் அருகில் கிடைக்குமாயின் நீர் இணைப்புக் கல் சாலை அமைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிடில், மேலும் 3—6% சுண்ணாம்பு சேர்ந்த மண்ணை இரு அடுக்குகளாக அமைத்துச் சாலை போட வேண்டும். அல்லது, 3—5% சிமெண்ட் பொருள்களான வலிவான சாம்பல், சுண்ணாம்புக் கல், சுக்காங்கல் ஆகியவற்றை இணைத்துச் சாலை அமைக்க வேண்டும். தேவையான அளவு நீர் சேர்த்து உருளையை உருட்டி, இறுக்கம் அடையச் செய்ய வேண்டும். சாலையின் மேற்பரப்பில் மணல் கலவையை மெல்லிய அடுக்காகத் தூவி உலர வைத்த பின்னர், ஊர்திகளை அனுமதிக்கலாம்.
பாலைவனம் போன்ற இடங்களில் சாலை அமைக்க, மண்ணுடன் சிமெண்ட், சுண்ணாம்பு சேர்க்க இயலாது. மேலும், நீர் மிகக் குறைவாக உள்ள இவ்விடங்களில் பாலைவன மணல் இறுக்கமடைவது மிகக் கடினமாகும். ஆதலால், நிறமியுடன் கலந்த அடர்த்தி மிகுந்த குழம்பு போன்ற திண் சுதைப்பால், கலவையை மணலுடன் சேர்த்துச் சாலைப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும். குளிர்ச்சியூட்டப்பட்ட ஃபார்மால்டிஹைடு என்ற பொருளை மணலுடன் சேர்த்துச் சாலைப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
தார்ச் சாலை. இது நீர் இணைப்புக் கற்சாலையை முதலில் அமைத்த பின்னர், அதன் மேற்பரப்பை நிறமி, தார்,புகைக்கீல,கருங்காரை போன்ற பொருள்களைக் கற்பொடிகளுடன் கலந்து மேல் அடுக்காக அமைக்கும் சாலையாகும். தார் சூடாகக் காய்ச்சப்பட்டுக் கற்களுடன் கலந்து சாலை அமைப்பதும் உண்டு. கற்கள், மணல், நிறமி ஆகியவை கற்காரைக் கலவையாகத் தயாரிக்கப்பட்டுச் சாலை அமைக்கப்படுவதும் உண்டு. வெறும் நிறமியும், இணைப்புப் பொருளும் காய்ச்சப்பட்டு, சூடான நிலையில் கற்சாலையின் மேற்புற அடுக்காகவும் ஊற்றப்படலாம். மணலைக் கருங்காரையுடன் கலந்தும் பயன்படுத்தலாம். தார், மணல், கல் சேர்ந்த கலவையைக் கற்காரையாகப் பயன்படுத்தித் தளம் அமைத்தும் தார்ச்சாலை அமைக்கலாம்.
மேற்புறச் சீரமைப்பு எனப்படுவது, ஒன்று அல்லது இரண்டு அடுக்குகளாக நிறமியும், வேதிக் கலவையும் ஒட்டும் பொருள்களாகச் சூடான நிலையில் பூச்சுப் போல் அமைவது ஆகும். இதை அமைக்கும் போது, தட்ப வெப்ப நிலை 16°Cக்குக் குறையாமல் இருக்க வேண்டும். நிறமி 163—177°C வரை சூடாக்கப்பட்டுச் சீராகத் தெளிப்பான் மூலம் தெளிக்கப்பட வேண்டும். மேற்புறப்பூச்சுப் போட்டவுடன், அது இறுக்கமடையும் வரை சாலை உருளையால் உருட்ட வேண்டும். 24 மணி நேரத்திற்குப் பின்னர், சாலையைப் பயன்படுத்தலாம்.
கற்காரைச் சாலை. மாறுபாட்டுப் பகுதி கட்டும் முறை, தொடர்ந்து கட்டும் முறை என இரு முறைகளில் இச்சாலையை அமைக்கலாம். குறிப்பிட்ட தொலைவை ஒரு பகுதியாகக் கொண்டு ஒன்று விட்டு ஒரு பகுதியைக் கட்டிக் கொண்டு செல்வது முதல் முறை, விடுபட்ட பகுதிகளை ஒரு வார இடைவெளிக்குள் மீண்டும் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். தொடர்ந்து கட்டும் முறையில் சாலை நீளவாக்கில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பக்கமாகச் சாலையில் கற்காரைத் தளத்தைக் கட்ட வேண்டும். பின்னர், மறு பக்கத்தைத் தொடர்ந்து கட்டவேண்டும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> கற்காரைச் சாலை அமைக்கும் போது, உலர்ந்த தட்ப வெப்ப நிலை 4—40°C வரை இருக்கலாம். அடித்தளத்தைச் சீராகவும், இறுக்கமாகவும், உறுதியாகவும் அமைக்க வேண்டும். மேற்பரப்புக் கடினமாக இருக்க வேண்டும். ஓரங்களில் சாலையின் அகலத்தை விட 30செ.மீ. அளவு தூய்மை செய்யப்பட வேண்டும். கற்காரை ஒட்டும் வகையில் அடித்தளம் வடிவமைக்கப்பட வேண்டும். கற்காரையைச் சாலையின் அகலத்திற்குள் தடுத்து நிறுத்த அச்சறைச் சட்டமும், முட்டுத் தாங்கியும் அமைக்க வேண்டும். கல், மணல், சிமெண்ட், நீர் ஆகியவற்றை எந்திரத்தில் இட்டுக் கலவை தயார் செய்ய வேண்டும். ஆய்வு மூலம் கற்காரையின் தரத்தைச் சோதித்த
பின்னர் அடித்தளத்தில் பரவலாகக் கொட்ட வேண்டும்.
கற்காரையைச் சீராகவும், இடைவெளி இல்லாமலும் பரப்ப வேண்டும். இதை 90 செ.மீ. உயரத்திலிருந்து தளத்தில் கொட்ட வேண்டும். கலவை எந்திரத்திலிருந்து எடுத்த கற்காரையை 20 நிமிட நேரத்திற்குள் அடித் தளத்தின் மீது போட வேண்டும். கற்காரைக்கு இறுக்கமும், அழுத்தமும் கொடுக்க அதிர்வு தண்டுகள் பயன்படுத்தலாம். அதிக அதிர்வு கொடுக்கப்பட்டால், சாந்து, நீர் ஆகியவை பிரிந்து மேற்புறமாக வர வாய்ப்பு உண்டு. ஆதலால், சரியான அதிர்வு கொடுத்து அனைத்து இடத்திலும் கற்காரை சீராகப் படியுமாறு செய்ய வேண்டும்.
அளவுகோல் பயன்படுத்திக் கற்காரை உலரும் முன்னர், தளத்தில் தடிமன், சரிவு முதலியவற்றைச் சரி செய்ய வேண்டும். ஏதாவது ஓரிடத்தில் பள்ளம் அமைந்தால், அவ்விடத்தை உடனடியாகச் சற்றுப் பெரிய பள்ளமாக மாற்றிப் புதிய கற்காரையால் நிரப்பிச் சீர் செய்ய வேண்டும். இத்தகைய சீரமைப்பு வேலைகளை, கலவை கலந்த 75 நிமிடத்திற்குள் முடிக்க வேண்டும். இரண்டு அடுக்காகச் சாலை போட வேண்டி இருந்தால், முதல் அடுக்குக் கலவை போட்டு இறுக்கமடைந்த 30 நிமிடத்திற்குள்ளாக அடுத்த அடுக்கை அமைக்க வேண்டும்.
சாலையின் மேற்பரப்பு, ஓரம், சரிவு ஆகியவற்றைச் சரி பார்த்த பின்னர், சாலையின் மேற்பரப்பில் உராய்வுக்கெனத் தேவையான அளவு சொர சொரப்பு ஏற்படுத்த வேண்டும். அதற்குக் குச்சிகள் நிறைந்த பூச்சுக் கோல் அல்லது பெருக்குமாறு பயன்படுத்தலாம். சாலை போட்டு முடித்த பின்னர், துணி, சாக்கு முதலியவற்றை நீரில் நனைத்து நீர் கசியும் வகையில் சாலையின் மீது போட்டு மூட வேண்டும். தொடர்ந்து, 24 மணி நேரம் இவ்வாறு ஈரம் கொடுத்த பின்னர், துணிகளையும், சாக்குகளையும் நீக்கி விட்டு, சாலையின் மீது மண் வரப்பு அமைத்து, அதில் நீர் தேங்கி நிற்கச் செய்ய வேண்டும். குறைந்தது 14 நாளுக்கு நீர் ஊட்டம் கொடுத்த பின்னர், பயன்படுத்தலாம்.
—ஏ.எஸ்.எஸ். சேகர்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 162)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nd4j7yn4/
தமிழ்“சாலை போடும் முறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nd4j7yn4/APA
Oliyon Research. (2026). சாலை போடும் முறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nd4j7yn4/MLA
"சாலை போடும் முறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nd4j7yn4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment