இது ஒரு சில வகை நுண்ணுயிர்களால் மேற்கொள்ளப் படுகிறது. ரைசோபிய வகைப் பாக்டீரிய, கூட்டு வாழ்க்கை அல்லது இணை வாழ்க்கையுடன் தழைச் சத்தை நிலைப் படுத்துகிறது. காற்றில் கலந்திருக்கும் தழைச் சத்தைப் பெற்று, மண்ணில் தழைச் சத்தின் அளவு கூடுவதற்கு, இவ்வகைப் பாக்டீரியா வழி வகுக்கிறது. தழைச் சத்தை நிலைப் படுத்தும் நுண்ணுயிர்கள் (symbiotic nitrogen fixing bacteria). ரைசோபிய வகைப் பாக்டீரியாக்கள் பயறு வகைகளில் வேர்த் தூவிகள் மூலம் உட்செல்கின்றன. பாக்டீரியா பெருக்கமடைந்து ஏற்படும் தூண்டுதலால், பயிரின் வேர்ப் பகுதியில் திசுவறைப் பெருக்கம் மிகுதியாதல் (hyperplasia) திசுவறைப் பெரிதாதல் (hypertrophy) போன்ற மாற்றங்கள் நிகழ்வதால், வேர் முடிச்சுகள் தோன்றுகின்றன. அவ்வேர் முடிச்சுகளில் பாக்டீரியா தங்கிருக்கிறது. பாக்டீரியா காற்றில் கலந்திருக்கும் தழைச் சத்தைப் பெற்றுப் புரதம் போன்ற தழைச் சத்துக் கூட்டுப் பொருள்களை உண்டாக்குவதால், பயிருக்குத் தழைச் சத்து கிடைக்கிறது. பயிரில் உள்ள உணவுப் பொருளைப் பாக்டீரியா எடுத்துக் கொள்கிறது. எனவே, பயிரும், ரைசோபிய வகைப் பாக்டீரியாவும் ஒன்றோடொன்று இணைந்து வாழ்கின்றன. பயறு வகை ரைசோபியப் பாக்டீரியா மண்ணில் இயற்கையிலேயே கலந்திருக்கிறது. ஆனால், இது திறன் வேறுபடும். அவற்றின் திறனுக்கு ஏற்றவாறு, அந்நிலத்தில் பயிரிடும் பயறு வகைச் செடிகளில் ஏற்படும் வேர் முடிச்சுகளின் எண்ணிக்கையும், அளவும் வேறு படுகின்றன. நிலத்தில், மிகத் திறனுள்ள ரைசோபியம் இருப்பது மட்டுமன்றி, அதன் எண்ணிக்கையும் மிகுதியாக இருத்தல் வேண்டும். இல்லையாயின், வேர் முடிச்சுகளை மிகுதியாகத் தோன்றுவதில்லை. எனவே, ஒவ்வொரு பயறு வகைகளுக்கும் ஏற்ற திறனுள்ள பாக்டீரியா செயற்கை ஊடகத்தில் வளர்க்கப் படுகிறது. வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் குதிரை மசால் வகைப் பாக்டீரியா, எ-டு: ரைசோபியம் மெலிலோட்டி. பட்டாணி போன்ற பயிர்களில் வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் பட்டாணி வகைப் பாக்டீரியா, எ–டு: ரைசோபியம் லெகுமினோசாரம். அவரையில் வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் அவரை வகைப் பாக்டீரியா. எ–டு: ரைசோபியம் பேசியோலை. மணப்புல் (clover) வகைச் செடிகளில் வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் மணப்புல் வகைப் பாக்டீரியா. எ–டு: ரைசோபியம் டிரைபோலி. சோயாப் பயறு போன்றவற்றில் வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் சோயாப் பயறு வகைப் பாக்டீரியா. எ–டு: ரைசோபியம் ஜப்பானிகம். லூபின் போன்ற பயிர்களில் வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் லூபின் வகைப் பாக்டீரியா. எ–டு: ரைசோபியம் லூபின். தட்டைப் பயறு, நிலக் கடலை போன்ற பயிர்களில் வேர் முடிச்சுகளைத் தோற்றுவிக்கும் தட்டைப் பயறு வகைப் பாக்டீரியா. எ–டு: ரைசோபியம் வகை. ஒவ்வொரு வகை ரைசோபிய பாக்டீரியாவும் பெரும்பாலும், அவ்வவ்வகைப் பயிர்களிலேயே முடிச்சுகளைத் தோற்றுவிக்கும். இத்தகைய இயல்புகளைக் கருதி, அவ்வகைப் பயிருக்கான பாக்டீரியா ஆய்வகங்களில் வளர்க்கப்பட்டு, ரைசோபிய வளர் கலவைகள் (rhizobial cultures) உழவர்களுக்கு வழங்கப் படுகின்றன. ரைசோபிய வளர் கலவை தயாரித்தல். பயறு வகைச் செடிகளில் உள்ள வேர் முடிச்சுகளில், சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் திசு வளர்ப்பு நுணுக்கத்தின் (tissue culture technique) மூலம் ரைசோபிய பாக்டீரியா பிரித்தெடுக்கப் படுகிறது. அதன் பின், பிற நுண்ணுயிர்களின் கலப்பில்லாமல் வளர்க்கப் படுகிறது. மிகுதியான வேர் முடிச்சுகளைப் பயிர்களில் தோற்றுவிக்கும் திறனுள்ள ரைசோபிய வகை, கீழ்க் காணும் செயற்கை முறைகளில் பெருக்கப் பட்டுப் பயன் படுத்தப் படுகிறது. மண் மக்கு வளர் கலவை. மண் மக்கில் கரிமப் பொருள்கள் மிகுதியாகக் கலந்துள்ளமையால், ரைசோபியா வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. மண் மக்கைக் காய வைத்த பின், தூளாக்கி 60 அல்லது 100 வலைக் கம்பியில் கொட்டிச் சலிக்கப் படுகிறது. அதன் கார–அமில நிலை (PH) 6.8–7.0 இருத்தல் வேண்டும். மண் மக்குத் தூளை அமுக்க வெப்ப மூட்டியில் (autoclave) வைத்து, வெப்பத்தால் தொற்று நீக்கிய பின் (sterilization) ரைசோபிய பாக்டீரியக் கலவையுடன் கலக்கப் படுகிறது. இதன் ஈர நிலை 50% இருப்பதற்கு ஏற்ற முறையில், பாக்டீரியக் கலவையை ஊற்ற வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மண் மக்குக் கலவை 100 அல்லது 200 கிராம் அளவில் பாலித்தீன் பைகளில் பிற நுண்ணுயிர்க் கலப்பு நிகழாதவாறு அடைக்கப் படுகிறது. ஏறத் தாழ 72 மணி நேரத்திற்குப் பின்பு, இம்மண் மக்குக் கலவையைப் பயன் படுத்தலாம். இக்கலவையில் 1 கிராம் அளவுக்கு ஏறத் தாழ 50 கோடி பாக்டீரியா உள்ளமை கண்டறியப் பட்டுள்ளது. கடற்பாசி ஊடக வளர் கலவை. ஏறத் தாழ 300 மி.லி. அளவுடைய புட்டிகளில் 100 மி.லி. வீதம் கடற்பாசி கலந்த ஈஸ்ட்–மேனிட்டால் ஊடகத்தை ஊற்றி, வெப்ப அமுக்கமூட்டியில் வைத்துத் தொற்று நீக்கிய பின், புட்டிகளைத் தட்டையான நிலையில் படுக்க வைக்க வேண்டும். ஊடகம் கெட்டியானதும், உட்புகுத்தும் கம்பியால் (inoculating needle) ரைசோபிய பாக்டீரியா, ஊடகத்தின் மேற்பரப்பில் தடவப் படுகிறது. இவற்றை 72 மணி நேரத்தில் பயன் படுத்தலாம். நீர் ஊடக வளர் கலவை. கடற்பாசி கலவாத ஈஸ்ட் மேனிட்டால் நீர் ஊடகம் கொண்ட புட்டிகளில் பாக்டீரியா வளர்க்கப் பட்டுப் பயன் படுத்தப் படுகிறது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நீர் ஊடக வளர் கலவையைக் கொண்டு செல்தல் எளிதாக இல்லாமையால், இம்முறை பெரும்பாலும் கடைப் பிடிக்கப் படுவதில்லை. விதையில் உட்புகுத்தல். ரைசோபிய வளர் கலவை தயாரித்த பின், 15 நாள்களில் ரைசோபிய பாக்டீரியா பெருக்கமடைந்து, மிகுதியான எண்ணிக்கையை அடைகிறது. ஏறத் தாழ 45 நாள்களுக்குப் பின், அவற்றின் திறன் குறைகிறது. எனவே, வளர் கலவை தயாரித்த 45 நாள்களுக்குள், அதனைப் பயன் படுத்துவது இன்றியமையாதது. ஒவ்வொரு விதையிலும் ஒட்டியுள்ள ரைசோபிய எண்ணிக்கைக்குத் தக்கவாறு, அவற்றின் திறன் மாறுபடும். ஒவ்வொரு விதையிலும் குறைந்தது 10,000 ரைசோபிய பாக்டீரியா இருப்பது சிறந்த பயனைத் தரும். மண்மக்கு வளர் கலவையுடன் தேவையான அளவு நீர் அல்லது வெல்லக் கரைசலைச் (jaggery solution) சேர்த்துப் பசை போன்று பிசைந்த பின், விதைகளைக் கொட்டி கிளற வேண்டும். அதன் பின், உலர வைத்து விதைகளை விதைக்க வேண்டும். வளர்ப்புப் புட்டிகளில் (culture bottles) சிறிதளவு மோனோ கால்சியம் பாஸ்ஃபேட் கலந்த நீரை ஊற்றி கலக்க வேண்டும். மோனோ கால்சியம் பாஸ்ஃபேட்டிலுள்ள பாஸ்ஃபரஸ், ரைசோபிய பாக்டீரியா மண்ணில் கலப்பதற்கு ஊக்கமளிக்கிறது. புட்டியைக் குலுக்கி, உள்ளிருக்கும் பாடீரியக் கரைசல் நீரில் கரைந்ததும், மீண்டும் அத்துடன் நீர் ஊற்றிக் கலக்கி விதைகளில் ஊற்ற வேண்டும். விதைகளுடன் ரைசோபியக் கரைசலைக் கலந்த பிறகு, 24 மணி நேரத்தில் விதைக்க வேண்டும். இல்லையாயின், பாக்டீரியா பெரும்பாலும் அழிந்து விடுகிறது. ஒரு சில பூசணக் கொல்லி அல்லது பூச்சி கொல்லி கலந்த விதைகளில் பாக்டீரியக் கலவையைக் கலந்தாலும், பாக்டீரியா அழிந்து விடுகிறது. எனவே, இத்தகைய விதைகளில் பாக்டீரியக் கலவையைக் கலக்காமல், மரத் தூள் அல்லது தவிடு போன்றவற்றில் கலந்து, விதைப்பதற்கு முன்னால், உழவுச் சாலில் தூவலாம். ஆயினும், நிலத்தில் நேரடியாக ரைசோபியக் கலவையைச் சேர்ப்பதை விட விதைகளுடன் கலந்து விதைத்தல் மிகவும் பயனுள்ளது. —கா.சிவப்பிரகாசம் துணை நூல். R.S.Singh, Plant Diseases, Oxford and IBH Publ.Co., Calcutta, 1968.