அழகியல் சார் உளவியல் என்பது இயற்கையிலும் மனிதனின் படைப்பிலும் காணப்படும் அழகுபற்றி ஆய்ந்தறியும் ஓர் அறிவியல் துறையாகும். செயற்கை அழகு, மனிதனின் கற்பனைத் திறனுக்கு ஏற்ப இயற்கையொடு இயைபுற, எண்ணத்திலும் காட்சியிலும் சொற்களிலும் அமைக்கப்படுவது ஆகும். இத்தகைய இயற்கையிலும் கற்பனையிலும் காணப்படும் அழகு, ஓர் அடிப்படைக் கோட்பாடின்றி அமைதல் இயலாது. இவ்வழகுக் கோட்பாடும் அழகுணர்வின் தத்துவமும் அழகியலின் அடிப்படைகள் ஆகின்றன. இயற்கையிலும் கற்பனையிலும் அழகிற்கு அடிப்படையாகும் காரணிகளையும் எத்தகைய கலைப் படைப்புகள் மக்களை மகிழ்விக்கவல்லன என்பதை- யும் அறிவியல் முறையில் ஆராய்வது அழகியல்சார் உளவியல் (Aesthetic Psychology) ஆகும். உலகில் உள்ள பொருள்களிலும் நிகழ்ச்சிகளிலும் அழகு, இனிமை, நலம், வளம், சிறப்பு என்னும் மதிப்பீடுகள் எந்த அடிப்படையில் செயற்படுகின்றன என்று ஆராய அழகியல்சார் உளவியலுக்குச் சில அடிப்படை விதிகள் தேவைப்படுகின்றன. அழகியலின் அறிவியல் விளக்கங்கள் அழகியல்சார் உளவியல் துறையினுள் அடங்குவனவாகும். எப்பொருளும் காண்பவரின் மனப்பாங்கிற்கும் மனநிலைக்கும் ஏற்ப, அழகுடையதாகவோ அழகற்றதாகவோ இருக்கிறது. காண்பவருக்கும் காணப்படும் பொருளுக்கும் நடுவில் இடைவெளி இருப்பதாக உணர்ந்தால்தான் இத்தகைய அழகுணர்வு ஏற்படும். இத்தகைய இடைவெளியை உள இடைவெளி அல்லது உளத்தொலைவு (Psychological Distance) எனக்கொள்ளலாம். கிரேக்க மொழியில் அழகியல் (Aesthetics) என்னும் சொல் புலன்காட்சியைக் குறிப்பிடும். உலகில் காணப்படும் காட்சிகளின் அழகினை உய்த்துணர்தலே, அழகியலுக்கு அடிப்படை என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ (Plato) கருதினார். அழகிலை எடுத்துக்காட்டும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் ஒரு பொதுவான நல்லியல்பு உள்ளது. மனிதன் அழகுடைய பொருள்களில் ஈடுபட்டபின் அழகிய அமைப்புகளில் ஈடுபடுகிறான். இந்த நிலைக்குப் பின் மனிதன் அழகு என்னும் கருத்தையே துய்க்கும் நிலையை அடைகிறான். ஒழுங்கும் அமைப்பும் அழகுக்கு அடிப்படையானவை. இக்கருத்துகளைப் பிளேட்டோவின் ‘உரைக்கோவை’ (Symposium) என்னும் நூலிற் காணலாம். கிரேக்க இலக்கியத்திற் காணப்படும் மெய்ப்பொருட் கோட்பாடுகள், அழகியலுக்கு அடிப்படையாக அமைந்தன. மகிழ்ச்சியை ஒரு பொருளில், எழுத்தில் அல்லது ஒலியில் சித்திரிப்பது கலைஞனின் குறிக்கோள் ஆகும். பொருள், மனிதன், நிகழ்ச்சிகள் போன்றவற்றை நுட்பமாக மெய்போல் படைப்பதே கலை ஆகும். இதில் பார்த்துச் செய்தலின் கூறுகள் இருந்த போதிலும் ஒரு பொதுவான முழுமைத் தத்துவம் இருத்தல் வேண்டும். இக்கருத்தையே அரிசுடாட்டிலும் (Aristotle) வற்புறுத்தினார். ஐரோப்பாவில் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சமய, ஒழுக்கவாதிகளும் அறிவியலாரும் அழகியலுக்குப் புறவய அடிப்படையைக் கொடுத்தனர். கான்ட்டு (Kant) போன்ற சிந்தனையாளர்கள் பொருள்களால், எழுத்துப் படைப்பால், காட்சியால் மக்கள் உள்ளத்தில் எழுவதே அழகு என்றும், அறிவுக்கும் கற்பனைக்கும் பொருந்திய நிலையில் இருக்கும் பொருள்களே அழகுடையனவாகக் கருதப்படல் வேண்டும் என்றும் கூறினார்கள். அழகுடைய பொருள்களைப் படைப்போரின் உள்ளத்தில் அறிதல்சார் இயங்கு முறையில் (Cognitive Process) எழும் கலையே அழகியலின் அடிப்படை ஆகும் என்று குரோசே (Croce) கருதினார். அழகியல்சார் அனுபவம் மகிழ்வு தரக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது இன்பவாதக் (Hedonistic) கோட்பாடு ஆகும். அழகியல்சார் பயன் மதிப்பு உடன்பாடாகவும், மகிழ்ச்சியின்மை எதிர்மறைப் பயன்மதிப்பாகவும் இருக்கின்றன. இத்தகைய கருத்தினைச் சார்சு சந்தாயனா (George Santayana) தம் “அழகுணர்வு” (Sense of Beauty) என்னும் நூலிற் குறிப்பிடுகிறார். அழகு என்னும் பொருள் பற்றி நுண்கலை வல்லுநர்கள், மெய்ப் பொருளியலார், இலக்கியப் பேரறிஞர்கள் போன்றோர் பல ஆராய்ச்சிகள் செய்துள்ளனர். நுண்கலைகளின் தோற்றம் அழகின் அடிப்படையில் அமையப் பெற்றது என்றும், வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் வாழ்ந்த மக்கள், தாம் வாழ்க்கையில் பயன்படுத்திய அடையாளங்களும் முறைகளுமே கலைகளாக மாறியுள்ளன என்றும் சமூகவியலார் கூறுகின்றனர். அழகை உணரும்பொழுது உள்ளத்தில் எழும் மனவெழுச்சியே மகிழ்ச்சியாகின்றது. அழகும் மகிழ்ச்சியும் இணைபிரியாதனவாகும். ஆயினும், இன்பியல் மட்டுமே அழகுணர்வுக்கு அடிப்படையென்று திட்டவட்டமாகக் கூறமுடியாது. துன்பியலும் அழகின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதனை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகளிலும் துன்பியல் வகைகள் மக்களால் பெரிதும் விரும்பப்படுவதிலிருந்து உணரலாம். கருத்தழகுமிக்க பாடல்கள் உள்ளத்தை வருத்துவனவாக அமைகின்றன. நாடகங்களில் சிறந்த துன்பியல் காட்சிகள் அழகுணர்ச்சியுடன் அமைக்கப் பெற்றவையே ஆகும். ஆதலின் துன்பியல் அழகுணர்வு போன்றே மகிழ்வுணர்வும் அகவயப்பட்டதாகும். அழகியல்சார் மகிழ்ச்சி மேம்பாடுற்ற மகிழ்வுணர்வைக் குறிக்கிறது. பிராய்டைப் (Freud) பின்பற்றும் உளப்பகுப்பியலார்கள் கலையை உண்டாக்குவதற்கும் துய்ப்பதற்கும் பால் உந்தலே அடிப்படைக் காரணம் என்று கருதினார்கள். ‘அறிதல்’ பற்றி ஆய்வு செய்த பிரிட்டிசு உளவியலாளரான இசுபியர்மேன் (Spearman) என்பவர், பொருள்களிடையேயுள்ள தொடர்புகளைக் கண்டுபிடிப்பது அறிதல் இயங்கு முறையில் மிகவும் இன்றியமையாததாயிருப்பதால், அறிதலும் ஆக்கச் செயலே என்றும், அதனால் பொருத்தமில்லாத தொடர்புகளை நீக்கிவிட்டுப் பொருத்தமான தொடர்புகளைக் காண்பதே, கலை ஆக்கத்திற்கும் அனுபவத்திற்கும் அடிப்படை என்றும் கூறுகிறார். ஒரு பொருளைக் காணும்போது மகிழ்வு உணர்வு உண்டாவதற்கு, அப்பொருள் நன்மைதரும் பொரு- ளாக இருப்பதோ இன்பந்தரும் நிகழ்ச்சிகளுடன் தொடர்புடையதாக இருப்பதோ, அப்பொருளுடன் உண்டாகும் ஒத்துணர்வோ காரணம் ஆகும். அழகுடைய பொருள்கள் உள்ளத்தில் எழுப்பும் உணர்வுகளை அவற்றிற்கே உரியனவாக எண்ணி மகிழ்வதும் ஒத்துணர்வின் பாற்படும். மக்களிடையே காணப்படும் அழகு அனுபவம் பற்றிய வேறுபாடுகள், இயற்கையான புலன் வேறுபாடுகள், காட்சி வேறுபாடுகள் ஆகியவற்றின் விளைவாகும். கார்ல் சீசோர் என்ற அமெரிக்க உளவியலார் இசையைப் பயில்வதற்கும் நுகர்வதற்கும் வேண்டிய அடிப்படையான புலன் ஆற்றல்களை அளந்தறிவதற்கான சோதனைகளை வகுத்துள்ளார். ஆயினும் கலை ஆக்கத்திற்கும் அனுபவத்திற்கும் புலன் ஆற்றல்களை விட உருவக் காட்சி ஆற்றலே மிகவும் இன்றியமையாதது என்பது அறியப்பட்டுள்ளது. கசுதவு பெக்னர் (Gustav Fechner, கி.பி. 1801–1887) என்னும் உளவியலறிஞர் பரிசோதனை அழகியல் என்பதைத் தோற்றுவித்தார். நிறம், உருவம், ஒலிபோன்றவைகளைத் தேர்ந்தெடுத்தலைப் பற்றியும், ஒரு முழுமையின் பல பகுதிகளும் புலன் காட்சியை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றியும் பெக்னர், சோதனைகள் நிகழ்த்தியுள்ளார். இவர் ஓவியம், இசை ஆகியவற்றைக் கொண்டு நிகழ்த்திய சோதனைகளின் முடிவுகளையொட்டி மக்களிடையே அமைந்துள்ள பலவகைப்பட்ட மனப்பாங்குகளைக் கண்டுபிடித்தார். ஆனால் இவருடைய ஆராய்ச்சி முடிவுகளைப் பல அறிவியலார்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. துணை நூல்கள் Arnbeim, Rudolf., “Art & Visual Perception”, Berkeley University of California Press, 1954. Valenhae Charles, W., “Experimental Psychology of Beauty”, London, Mathuea, 1962.