சுழல் முடுக்கி ஒத்ததிர்வு
cuḻal muṭukki ottatirvu
ஒரு காந்தப் புலத்தில் மின் துகள்கள் சுருள் வடிவப் பாதைகளில் இயங்கும் போது, அவை ஒரு நொடியில் இடுகிற வட்டங்களின் எண்ணிக்கை அவற்றின் சுழல் அதிர்வெண் எனப்படும்.
ஒரு காந்தப் புலத்தில் மின் துகள்கள் சுருள் வடிவப் பாதைகளில் இயங்கும் போது, அவை ஒரு நொடியில் இடுகிற வட்டங்களின் எண்ணிக்கை அவற்றின் சுழல் அதிர்வெண் எனப்படும். சுழல் அதிர்வெண்ணிலிருந்து துகள்களின் மின்னுக்கும், நிறைக்கும் இடையிலுள்ள தகவை அளவிடும் ஆய்வுகள், சுழல் முடுக்கி ஒத்ததிர்வு (cyclotron resonance) ஆய்வுகள் எனப்படும். குறை கடத்திகள், உலோகங்கள் போன்ற மின் கடத்தும் படிகங்களில், இவ்வாய்வுகள் மிகுந்த பயன் தருபவை. இத்தகைய பொருள்களில், எலெக்ட்ரான்கள், துளைகள் ஆகியவற்றின் இயக்கங்கள், அவை கடந்து செல்லும் அணிக் கோவைகளின் காலாந்தர மின்னழுத்தத்தால் மிகுதியாகப் பாதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழ் நிலைகளில், மின் துகள்கள் பயனுறு நிறை (effective mass) என்னும் நிலையை அடைகின்றன. வெற்றிடத்தில் அவற்றுக்கு உள்ள நிறையிலிருந்து பயனுறு நிறை மிகுதியாக வேறுபட்டிருக்கும். பல சமயங்களில், படிகத்திற்குள் வெவ்வேறு திசைகளில் பயணம் செய்கிற போது, துகளுக்கு வெவ்வேறு பயனுறு நிறைகள் ஏற்படக் கூடும். வளிம நிலைப் பிளாஸ்மா மின்னிறக்கத்திலும், சுழல் முடுக்க ஓத்ததிர்வு காணப் படுகிறது. இத்தத்துவத்தைப் பயன்படுத்தும் சில வகைத் துகள் முடுக்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாய்வின் போது, கடத்தல் ஊடகம் H வலிமையுள்ள ஒரு சீரான காந்தப் புலத்தில் வைக்கப் பட்டு, υ என்னும் அதிர்வெண்ணுள்ள மின்காந்தக் கதிர்கள் அதன் மேல் பாய்ச்சப்படுகின்றன. υ = qH/2πmc என்னும் ஒத்ததிர்வு நிபந்தனை நிறைவு செய்யப்படும் போது, சில குறிப்பிட்ட கதிர் வீச்சுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உட்கவரப்படுவது காணப் படுகிறது. இந்நிலையில், கதிர் வீச்சின் அதிர்வெண், q மின்னும் m பயனுறு நிறையும் கொண்ட துகள்களின் ஓடு பாதை இயக்க அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கிறது. c என்பது ஒளியின் திசை வேகம். கதிர் வீச்சின் மின் புலத்தின் மூலமாகத் துகளின் ஓடு பாதை இயக்கம் முடுக்கப்படுவதன் காரணமாக, உட்கவர்தல் ஏற்படுகிறது. வட்டத் தள விளைவு அடைந்த ஒளியைப் பயன்படுத்தினால், மின்னின் குறியைக் கண்டு பிடித்து விடலாம். படிகங்களில் இவ்வாறு மின் குறியைக் கண்டு பிடிப்பதில் ஆய்வர் கவனஞ் செலுத்துவர். ஏனெனில், அவற்றில் மின் கடத்தல், எதிர் மின் குறியுள்ள எலெக்ட்ரான்௧ளாலோ, நேர் மின்குறியுள்ள துளைகளாலோ நடைபெறக் கூடும்.
ஒத்ததிர்வு நன்கு வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டுமானால், எலெக்ட்ரான்களும், துகள்களும், படிக அணிக் கோவையின் வெப்ப அதிர்வுகளாலோ, அதிலுள்ள மாசுகளாலோ சிதறப்படுவதற்கு முன்னர், தம் சுழல் முடுக்க வட்ட இயக்கத்தின் 1/2π பங்கை யேனும் நிறைவு செய்து விட வேண்டும். நடைமுறை ஆய்வுகளின் போது, ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஒர்ஸ்டெட் வரை வலிமையுள்ள காந்தப் புலங்கள் பயன் படுகின்றன. அப்போது, துகள்கள், 10-100 கிகா ஹெர்ட்ஸ் வரையான அதிர்வெண்களுடன் சுழல் முடுக்க இயக்கம் செய்யும். ஆனாலும், ஒரு மில்லியனில் சில பங்குகளுக்கும் குறைவான மாசு உள்ள படிகங்களை, ஒரு செல்லின் அளவிலான வெப்ப நிலைகளில் வைத்து ஆய்வு செய்யும் போதே, தெளிவும், செறிவும் மிகுந்த சுழல் முடுக்க ஒத்ததிர்வுகளைக் கண்டு பிடிக்க முடியும். உலோகங்களிலும், குறை கடத்திகளிலும் நிகழ்கிற ஒத்ததிர்வின் செயல் முறைகள் வெவ்வேறு வகையானவை. தூய்மையான, மிகக் குறைந்த வெப்ப நிலையிலுள்ள குறை கடத்திகளில் கடத்தல் எலெக்ட்ரான்கள், துளைகள் ஆகியவற்றின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். இவ்வாறு, மைக்ரோ இலைக் கதிர் வீச்சு குறை கடத்தி ஊடகத்திற்குள் ஒரு சீராக ஊடுருவும். எனவே, எலெக்ட்ரான்கள், துளைகள் ஆகியவை தம் ஓடு பாதை முழுதும் கதிர் வீச்சுக்கு ஆளாகின்றன. இங்கு ஒத்ததிர்வு என்பது ஓர் எளிய, சமச் சீர்மையான உட்கவர்தல் முகட்டின் வடிவத்தில் காணப்படும்.
ஆனால், உலோகங்களில் அனைத்து வெப்ப நிலைகளிலும், கடத்தல் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கை பெரும் அளவில் இருக்கிறது. அவை புறப் பரப்பிலுள்ள ஒரு சிறிய தொலைவுக்கு மேல், மின் காந்த ஆற்றல் ஊடுருவி உட்புகுவதைத் தடுத்து விடுகின்றன. புறப் பரப்பில், கதிர் ஊடுருவும் பகுதியில் செறிவு மிக்க மறைப்பு மின்னோட்டங்கள் (shielding curr®nts) பாய்கின்றன. உலோகத்தின் தட்டையான புறப் பரப்புக்கு நுட்பமாக இணையான திசையில் காந்தப் புலம் அமையும் போது, சுழல் முடுக்க ஒத்ததிர்வு எளிதாக ஏற்படுகிறது. புறப் பரப்புடன் மோதாத வகையில், அப்பகுதியில் ஓடு பாதைகளைப் பெற்றுள்ள எலெக்ட்ரான்கள் அல்லது துளைகள், அடுத்தடுத்த துடிப்புக் கிளர்வுகளைப் பெறுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளில் ஏற்படும் சுழல் முடுக்க ஒத்ததிர்வுகளில் nυ = qH/2πmc (n=1, 2, 3,……) என்னும் வரிசையான ஓத்ததிர்வுகள் அடங்கியிருக்கும்., அவற்றின் உண்மையான வடிவம் மிகவும் சிக்கலாக இருக்கக் கூடும். ஆனாலும், காந்தப் புலத்தை உலோகப் பரப்புக்குச் செங்குத்தாக அமைத்து, ஒத்ததிர்வைக் காண முடியும். இவ்வடிவியல் அமைப்பில் ஓர் உலோகத்திலுள்ள மின் கடத்துந் துகள்களுக்கும் வட்டத் தள விளைவு செய்யப்பட்ட கிளர்வூட்டும் கதிர் வீச்சைச் செலுத்த முடியும்.
ஒரு தனியான மின் துகள் காட்டும் மறு விளைவாகச் சுழல் முடுக்க ஒத்ததிர்வை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மின் துகள்களைக் கிளர்வூட்ட வேண்டியுள்ளது. மின் காந்தக் கதிர் வீச்சுக் காரணமாக, அவற்றில் ஏற்படும் நிகரமான மறு விளைவு, அவை இயங்குகிற ஊடகத்தின் ஒட்டு மொத்தமான மின் கடவா தன்மையை ஓரளவு பாதிக்கக் கூடும். இவ்வாறு, பல வகையான புதிய அலைப் பரப்புச் செயல் முறைகள் காணப்படக் கூடும். அவை சுழல் முடுக்க இயக்கத்துடன் தொடர்பு கொண்டவையாயிருக்கும். சுழல் முடுக்க இயக்கத்தின் போது, மின் காந்த ஆற்றல், சுருள் வடிவப் பாதைகளில் பாயும் துகள்களால், திண்மப் பொருளின் ஊடாகக் கடத்தப்படுகிறது. இக்கூட்டுக் கிளர்வுகள், பொதுவாகப் பிளாஸ்மா அலைகள் எனக் குறிப்பிடப் படுகின்றன. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட உள்ளீடு அதிர்வெண்ணுக்குச் சுழல் முடுக்க ஒத்ததிர்வுகளுக்குத் தேவைப்படுகிற காந்தப் புலங்களை விட மிகு வலிவுள்ள காந்தப் புலங்கள் உள்ள போது மட்டுமே பிளாஸ்மா அலைகள், கடத்தும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்வதாகக் காணப்பட்டுள்ளது. இத்தகைய கிளர்வுகளில் வட்டத் தள விளைவான அலைக் கிளர்வு மிக எளிதாகக் காணக் கூடியது. அதற்கு ஹெலிகான் (helicon) என்று பெயர். அது காந்தப் புலக் கோடுகளின் வழியாகப் பயணம் செய்கிறது. அயனிக் கோளத்தில் உள்ள பிளாஸ்மாவும் அதே போலச் செயல்படுகிறது. அதற்குச் சீழ்க்கை (whistler) வகை என்று பெயர். அது ரேடியோ ஒலி பரப்புகளைக் குலைப்பதாக அடிக்கடி காணப்படுகிறது. உண்மையில், திண்ம நிலைக் கடத்திகளிலும், வளிம நிலைப் பிளாஸ்மாவிலும் காணப்படுகிற ஒத்ததிர்வுகளுக்கும், அலைகளுக்கும் இடையில் ஏறத் தாழ முழுமையான நேரிணையான தன்மை (correspondence) காணப்படுகிறது. திண்மப் பொருள்களை விடப் பிளாஸ்மா போன்ற அடர்த்தி குறைந்த அமைப்புகளில், துகள்களுக்கிடையில் ஏற்படக் கூடிய மோதல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளமையால், பிளாஸ்மாக்களில் சுழல் முடுக்கி ஒத்ததிர்வுகளை எளிதாகக் காண முடிகிறது. இத்தகைய அமைப்புகளில், இயங்கும் அயனிகளுக்குப் பெருமளவிலான ஆற்றலை ஊட்டக் கூடிய ஒரு வழி முறையாக ஒத்ததிர்வு உதவுகிறது. அணுக் கருப் பிணைவு இடை வினைகள் நடைபெறுவதற்கு இத்தகைய பெரும் ஆற்றல் ஊட்டம் ஓர் இன்றியமையாத நிபந்தனை ஆகும். —கே. என். ராமச்சந்திரன் நூலோதி. M.L.Pondya and R.P.S.Yadav, Elements of Nuclear Physics,Kedar Nath & Ram Nath Publication, Meerut, 1985.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 558)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7xjczhf/
தமிழ்“சுழல் முடுக்கி ஒத்ததிர்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/n7xjczhf/APA
Oliyon Research. (2026). சுழல் முடுக்கி ஒத்ததிர்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n7xjczhf/MLA
"சுழல் முடுக்கி ஒத்ததிர்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/n7xjczhf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment