இராமதாசர், சமர்த்த
irāmatācar, camartta
மகாராட்டிரத்தில் தோன்றி, சத்திரபதி சிவாசி மன்னனுக்கு அரசியல் – அருளியல் குருவாக விளங்கிச் சிறந்த சமய சமுதாய ஞானியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த ஒரு மகான்.
மகாராட்டிரத்தில் தோன்றி, சத்திரபதி சிவாசி மன்னனுக்கு அரசியல் – அருளியல் குருவாக விளங்கிச் சிறந்த சமய சமுதாய ஞானியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த ஒரு மகான். இவர் மகாராட்டிரத்தில் மராட்வாடாப் பகுதியைச் சேர்ந்த சம்பு (Jamb) என்னும் ஊரில் கி.பி. 1608–ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ‘குல்கர்னி’ (Kulkarni) எனப்படும் அரசாங்க அலுவலராக விளங்கினார். தந்தை பெயர் சூர்யாசிபட்டு; தாயார் பெயர் இராணுபாய். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணன் என்பதாகும். இவர் தமையனார் பெயர் கங்காதர். இளமையிலிருந்தே இல்லற நாட்டம் இல்லாதிருந்த இவர், திருமணம் செய்து கொள்ளாது துறவியாகவே வாழ்ந்தார். இராமபிரானே இவருக்குக் குருவாக விளங்கினார் என்றும், அதனால் இவர் ‘இராமதாசர்’ எனப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. பிற்காலத்தில் இவருக்கு இப்பெயரே நிலைத்த பெயராக வழங்கலாயிற்று. ஆன்மிக நாட்டம் மிகுந்து விளங்கிய இவர், நாட்டிலுள்ள பல்வேறு தலங்களுக்கும் புனிதப் பயணம் செய்ய விரும்பி காசி, அயோத்தி, மதுரா போன்ற இடங்களுக்குச் சென்றார். இவர் பலகாலம் மலைப் பகுதிகளில் தனிமையில் வாழ்ந்துள்ளார். பஞ்சவடி என்னுமிடத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் இராமபூசை செய்தார்.
சத்திரபதி சிவாசி இவருடைய பெருமையை உணர்ந்து, இவரைக் காண விரும்பிப் பலமுறை சாப்பல் (Chaphal) பகுதிக்குச் சென்றும் காண இயலாது மீண்டார். இறுதியில் சிருங்கன் வாடி (Shringan wadi) என்னுமிடத்தில் இவரைக் கண்டு வணங்கினார். சிவாசி மன்னரின் வேண்டுகோளை ஏற்று, இவர் சத்தாராவிற்கு அருகிலுள்ள சச்சன்கடு (Sajjangad) என்னும் ஊரில் தங்கியிருந்தார். சத்தாரா மாவட்டத்திலுள்ள சாப்பல் என்னும் இடத்தில் மடம் ஒன்றினை நிறுவி, இராமச்சந்திர மூர்த்திக்கு ஓர் ஆலயத்தினை எழுப்பினார். நாட்டின் பலபகுதிகளில் மடங்களும் அனுமன் கோயிலும் அமைக்க ஏற்பாடுகள் செய்தார்.
சத்திரபதி சிவாசியின் குருவாக விளங்கிய இவர், நாட்டு மக்களிடையே சமய சமுதாயப் பற்றும் எழுச்சியும் ஓங்கி விளங்குமாறு தொண்டு புரிந்தார். இவரது அறிவுரையால் ஆன்மிக உணர்ச்சியும் சமயப் பற்றும், சமுதாய நாட்டமும் சிறந்து விளங்கிய சிவாசி, ஆற்றல் மிக்கதோர் இந்துப் பேரரசினை உருவாக்கிச் சிறப்பொடு திகழ்ந்தார்.
இராமதாசர் சிவாசிக்கு எழுதிய ஒரு மடலில் ‘துயர் துடைக்கும் கணபதியையும், அம்பிகை சரசுவதியையும், புனிதமிக்க அருளாளர்களையும், குடும்பத் தெய்வத்தையும், இராமபிரானையும் வணங்குவாயாக. அறிவாளியாக இருப்பவன் மகிழ்ச்சியுடன் விளங்குவான்; உன் உழைப்பும் முயற்சியும் ஆட்சியில் நற்பயன் அளிக்கும்’ என்று அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு சமயம் சிவாசி மன்னர் தம் ஆட்சிப் பெருமையெல்லாம் தம் குருவாகிய இராமதாசரையே சாரும் எனக்கூறி, ஆட்சியினை அவருக்கு அளிக்க முன் வந்தார். அதனை ஏற்க மறுத்த இராமதாசரின் அறிவுரைப்படி, அவர் அளித்த காவித்துணியினையே தம் கொடியாகக் கொண்டு சிவாசி நாட்டை ஆட்சி புரிந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவரை ஒருவர் காணும்போது ‘இராம் இராம்’ என்று கூறி வணங்கும் முறையினையும் இராமதாசர் உருவாக்கினார்.
இராமதாசர் தம்முடனேயே இருக்க வேண்டும் என விரும்பிய சிவாசி, அது இயலாது போகவே, சத்தாராவிற்கு 8 கல் தொலைவிலுள்ள பரலி (Parali) என்னும் கோட்டையினை அவருக்கு அளித்தார். அதில் சில காலம் தங்கிய இராமதாசர் அங்கே மாருதிக்கு (அனுமனுக்கு) ஒரு கோயில் எடுப்பித்தார்.
ஆன்மிகம், அரசியல், சமயம், சமுதாயம் ஆகியன பற்றிச் சிறந்த அறிவுரை பகரும் பல நூல்களை இராமதாசர் எழுதியுள்ளார். அவருடைய நூல்களில் ‘தாச போதம்’ (Dasabodha) என்னும் நூல் தலை சிறந்ததாகும். இது ‘இராமதாசர் வழங்கிய அறிவுரை’ என்றும், ‘ஓர் இறையடியார் வழங்கிய அருளுரை’ என்றும் பொருள்படும். குரு சீடர் உரையாடல் வடிவில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் உணர்த்தும் அடிப்படைப் பொருள் தெய்வபக்தியாகும். சிவ, சீவ இயல்புகளும் பிற ஆன்மிகக் கருத்துகளும் இதில் விளக்கப்பட்டுள்ளன. இருபது அதிகாரங்களாக அமைந்துள்ள இந்நூல், மகாராட்டிரத்தில் பகவத்கீதைக்கு அடுத்தபடியாகச் செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.
தம் வாழ்வின் இறுதி நெருங்குவதனை உணர்ந்த இராமதாசர் தம் மாணவர்களை அழைத்து, ‘என் பூத உடல் அழியினும், ஆன்மா அழியாது; எப்போதும் இங்கேயே இருக்கும்; நீங்கள் துயர் கொள்ள வேண்டாம்; என் நூல்களைப் படியுங்கள்; அவை முத்தி நெறியினைக் காட்டும், அழியும் உடம்பின் மீது ஆசையை அகற்றுங்கள், தீய வழிச் செல்லாதீர், உங்களுக்கு நற்கதி காத்திருக்கிறது. எப்பொழுதும் இராம நாமத்தினை ஒலித்துக் கொண்டே இருங்கள், என்று அறிவுரை கூறினார். இவர் ‘இராம் இராம்’ என்னும் மந்திரத்தை ஒதிக்கொண்டே சச்சன்கடு என்னுமிடத்தில், கி.பி. 1682–ஆம் ஆண்டில் ஒரு நாள் நண்பகலில் காலமானார். சிவாசி மன்னர் இறந்த பின் இரண்டு ஆண்டுகள் கழித்து இராமதாசரின் இறப்பு நேர்ந்தது. இவருடைய உடல் பரலிக்கு அருகில் தீமூட்டப்பெற்றது. பின்னர் இவரது அத்தி சாப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜி.க.
துணை நூல்கள்
Rawlinson, H.G., Shivaji the Maratha, Delhi, 1915.
Sathiyanatha Iyer, History of India. S. Viswanathan, Madras, 1976.
Kincaid, C.A. & Parasnis, D.B., History of the Maratha People, Madras, 1931.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 120)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n6qr7kn3/
தமிழ்“இராமதாசர், சமர்த்த”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/n6qr7kn3/APA
Oliyon Research. (2026). இராமதாசர், சமர்த்த. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n6qr7kn3/MLA
"இராமதாசர், சமர்த்த." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/n6qr7kn3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment