இலஞ்சியென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்ற உலாப் பிரபந்தமாகும். இதனை மேலகரம் பண்டாரக் கவிராயர் இயற்றியுள்ளார். இவர், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலத் தல புராணம் முதலியவற்றை இயற்றிய மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயரின் முதல் மகனாவார். பண்டாரமென்பது முருகக் கடவுளின் பெயர்களுள் ஒன்று. இவர் வேறு நூல் இயற்றியதாகக் தெரியவில்லை. இலஞ்சி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குற்றாலத்திற்கு வடக்கே அமைந்துள்ள முருகன் தலமாகும். இவ்வூர், திருக்குற்றாலத்திற்குரிய பரிவாரத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு இருவாலுகநாயகரென்னும் பெயரில் சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். இப்பெருமான் திருவுரு, அகத்தியரால் அமைக்கப் பெற்று வழிபடப் பட்டதாகும். இத்தலம் பிரமதேவர் முதலியவர்கள் பூசித்துப் பேறு பெற்றது என்பது கூறப்படுகிறது. இத்தலத்தினை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் புகழ்ந்து பாடியுள்ளார். இத்தலத்திற்குரிய தலமரம் மகிழ மரமாகும். இலஞ்சி என்பது மகிழ மரத்தினைக் குறிக்கும் பெயர். பொய்கைகள் நிறைந்தமையானும் இவ்வூர் இப்பெயரினைப் பெற்றது என்பர். இந்நூல் தொடக்கத்தில் 2 காப்புச் செய்யுளையும் இறுதியில் ஒரு வாழ்த்துச் செய்யுளையும் கொண்டு 460 கண்ணிகளால் எளிய இனிய நடையில் அமைந்துள்ளது. உலாவுக்குரிய இலக்கணங்களைப் பெற்று விளங்கும் இந்நூல், இத்தலம் முருகவேளால் படைக்கப்பட்டது, பழமையுடையது, தென்னாரிய நாட்டைச் சார்ந்தது, கந்தர்சட்டியில் திருத்தேர் விழா நடைபெறும் சிறப்புடையது, சித்திரநதியினைக் கொண்ட பெருமையுடையது என்பன போன்ற பல செய்திகளைக் கூறுகிறது. விழாக் காலங்களில் 7 நாள் நடைபெறும் தேர்த்திரு நாளில் முருகன் பிரம தேவராகவும், திருமாலாகவும், உருத்திரமூர்த்தியாகவும், மகேசுவரராகவும், சதாசிவமூர்த்தியாகவும் திருக்கோலங் கொண்டு உலா வரும் செய்திகள் இதனுள் கூறப்பட்டுள்ளன. மடந்தைப் பருவத்தில் முருகவேளைத் துதித்து யாழ் வாசித்த செய்தி கூறுமிடத்தே, இசைதநூற் செய்திகளும் காந்தாரி, காம்போதி, கல்யாணி, தேவ காந்தாரி, மோகனம், முராரி முதலிய 15 இராகங்களின் பெயர்களும் கூறுப்பட்டுள்ளன. தெரிவைப் பருவத்தில் முருகனுக்குரிய மலை கந்த மாதனம், நாடு தென்னாரிய நாடு, நகர் இலஞ்சி, ஆறு சித்திராநதி, யானை ஐராவணம், படை வேல், கொடி சேவல், முரசு மும்முரசு, மாலை கடம்பு, ஆணை குமரன் துணையென்னும் ஆணை ஆகியன தசாங்கங்களாகக் கூறப்பட்டுள்ளன. பேரிளம் பெண் பருவத்தில், இப்பருவப் பெண் கடம்பமரக் கன்று ஒன்றினைக் கொணர்ந்து நட்டு அதற்கு முருகக் கடவுளின் பெயரிட்டு வளர்த்து. அது மலா்ந்த பிறகு அம்மலரை முருகவேளுக்குச் சூட்ட எண்ணினாள் என்னும் செய்தி காணப்படுகிறது. இந்நாலுள் காணப்பெறும் ‘பாவனைத்தும், வாசிதீர் காசுபெற மண்டலத்தில் சொன்னவனை’ (151–2) என்பது போன்ற பகுதிகளால் முருகக் கடவுளே திருஞானசம்பந்தராகத் தோன்றினார் என்னும் கொள்கையுடையவர் பண்டாரக் கவிராயர் என்பது தெரிகிறது. திருமுருகாற்றுப்படை இயற்றிய நக்கீரர் (66), கந்தரனுபூதி இயற்றிய அருணகிரிநாதர் (205) ஆகியோரைப் பற்றியும், கந்தபுராணத்தைப் பற்றியும் (113) அமைந்த செய்திகள் பல இந்நூலுள் காணப்படுகின்றன. கதிர்காமம், கந்தமாதனம், குன்று தோறாடல், சோலைமலை, திருச்செந்தூர், திருத்தணிகை, திருப்பரங்குன்று, திருமலை, திருவாவினன் குடி, திருவேரகம், வள்ளியூர், வேள்விமலை ஆகிய முருகன் தலங்கள் பற்றிய குறிப்புகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. இந்நூல் டாக்டர் உ.வே. சாமிநாதையரால் 12.1.1935–இல் எட்டுப் பிரதியிலிருந்து பதிப்பிக்கப் பெற்றது.