காசுமீரச் சைவ சமயம் கி.பி. 9–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காசுமீரத்தில் தோன்றியது. அது வேதத்தை மேற்கொள்- ளாது, சாதி, நாடு முதலிய எல்லைகளை நோக்காது, மக்கள் எல்லோரும் சகோதரர்கள் என்பதையும் எல்லாத் தோற்றமும் அடிப்படையான நுண்பொருளின் பருப்பொருளாகும் என்பதையும் வலியுறுத்தியது. சிவசூத்திரத்திற்கு ஆசிரியரான வாசுகுப்தர் (கி.பி. 825) என்பார் ஆகமக் கொள்கைகளைச் சாத்திர முறையில் விளக்கிய முதல்வராவர். சோமநந்தர் உண்மைப் பொருளைப் பிரமாணங்களைக் கொண்டு ஆராய்ந்தார். சோமநந்தரின் மாணவர் உத்பலாச்சாரியார் (கி.பி. 900–950). இவர் மற்றைய சமயக்கட்சிகளோடு வேறுபட்ட பலவகைப் பௌத்தக் கட்சிகளை நுணுகி ஆராய்ந்து குறை கண்டார். அக்காலத்தில் பௌத்தம் காசுமீரத்தில் அதிகாரத்திலிருந்ததால் ஒருமைக் கொள்கைச் சைவத்தைப் பௌத்தர்கள் மறுத்தனர். அதற்கு மறுப்பாக உத்பலாச்சாரியார் ஈசுவர பிரத்யபிக்ஞா காரிகையையும் அதன் இரண்டு விருத்தியுரைகளையும் செய்தார். உத்பலாச்சாரியார் (Utpalachari) கருத்துப்படி சிவன் உண்மைப் பொருள், எல்லையில்லாத தன்னறிவுடையவர்; வரையறை செய்யமுடியாத தன்னுரிமையுடையவர்; எங்கும் நிறைந்தவர்; உருவமற்றவர்; நிலையானவர். அவரன்றி வேறொரு பொருளுமில்லை. உலகு வெளியே இருப்பதுபோலத் தோன்றினாலும், அது அவருடைய உணர்விலேயே அமைந்திருக்கிறது. கடவுள் தம் எண்ணத்தினால் உலகைத் தோற்றுவிக்கிறார். கண்ணாடியில் உருவங்கள் தோன்றுதல்போல உலகம் கடவுளிடமிருந்து தோன்றினாலும், வேறுபட்டிருப்பது போல் காணப்படுகிறது. அவரிடமிருக்கும் சக்தியினாஸ் ஆன்மாக்களும் அவற்றின் அனுபவங்களும் ஏற்படுகின்றன. கடவுளிடமிருந்து ஏற்படுகிற தோற்றங்களினால் கடவுள் பாதிக்கப்படுவதில்லை. உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ளுதலே (Recognition) விடுதலையடையும் வழி என்று உத்பலாச்சாரியார் கூறுகிறார். மேலும் இவர் 36 தத்துவங்களையும் ஒப்புக்கொள்கிறார். இவர் சிவ தோத்ராவளி, ஈசுவர சித்தி, அசதபிரமாதிரி (Ajadapramatri), இசுபந்தபரதீபிகா (Spanda Paradipika) என்ற நூல்களும் எழுதியிருக்கிறார். எஸ்.இல துணை நூல்கள் Kachur, Durga Prasad, Utpala, The Saint Mystic of Kashmir, A monograph, Poona, 1945. Kaw, R.K., The Doctrine of Recognition (Pratyabhina Philosophy), Visheshvaranand Institute, Hoshiarpur, Punjab, 1967. Sharma, L.N., Kashmir Saivism, Bharatiya Vidya Prakasham, Varanasi, 1972.