அழகப்பா பல்கலைக் கழகம்
aḻakappā palkalaik kaḻakam
கல்வித் துறையில் மிகவும் பின்தங்கிய இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் பலவற்றை நிறுவிய வள்ளல் அழகப்பரின் நெடுங்காலக் கனவு, 1985 மே திங்கள் ஒன்பதாம் நாள் அழகப்பா பல்கலைக் கழகமாக உருக்கொண்டது.
கல்வித் துறையில் மிகவும் பின்தங்கிய இராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி நிலையங்கள் பலவற்றை நிறுவிய வள்ளல் அழகப்பரின் நெடுங்காலக் கனவு, 1985 மே திங்கள் ஒன்பதாம் நாள் அழகப்பா பல்கலைக் கழகமாக உருக்கொண்டது. இப்பல்கலைக் கழகம் தமிழகத்தில் பதினோராம் பல்கலைக் கழகமாகும். பிற கல்லூரிகளை இணைத்துக் கொள்ளாமல் தனியொரு முழுப் பல்கலைக் கழகமாக (Unitary University) அழகப்பா பல்கலைக் கழகம் இயங்கும்.
அழகப்பா பல்கலைக் கழகம் மாணவர்களுக்கு அளிக்கும் உயர் கல்வி, தகுந்த வேலை வாய்ப்புக் கிடைப்பதற்கு உறுதுணையாதல் வேண்டும் என்னும் நோக்குடன் செயற்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பாகக் காரைக்குடியில், பல்வகைக் கல்விப் பணிகளை ஆற்றும் சீரிய நோக்கத்துடன் 1947–ஆம் ஆண்டு டாக்டர் அழகப்பா கல்வி அறக்கட்டளை நிறுவப்பட்டது. அவ்வாண்டிலேயே தமிழகத்தின் அந்நாள் கல்வி அமைச்சர் மாண்புமிகு தி.சு. அவினாசிலிங்கம் அவர்களால் அழகப்பா கலைக் கல்லூரி தொடங்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1950-ஆம் ஆண்டில் அழகப்பா ஆரிசியசர் பயிற்சிக் கல்லூரி மைசூர்ப்பல்கலைக் குழக இணை வேந்தர் டாக்டர் சி.ஆர். ரெட்டி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இப்பயிற்சிக் கல்லூரியுடன் இணைந்த நன்முறை உயர்நிலைப் பள்ளி 1951–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1956-ஆம் ஆண்டில் அழகப்பா உடற் கல்விக் கல்லூரி, மைசூர் அரசப் பிரமுகர் செய சாமராச உடையார் அவர்களால் தொடங்கப்பட்டது. இவ்வாறு கலையும் அறிவியலும் இணைந்த பல்வகைக் கல்வி நிலையங்கள் படிப்படியே தோன்றி, இறுதியில் இன்றைய அழகப்பா பல்கலைக் கழகம் அமைவதற்கு வழி வகுத்தன. அழகப்பா கல்வி அறக்கட்டளை, தன்னிடமிருந்த கல்வி நிறுவனங்களிற் சிலவற்றையும், கல்லூரி விடுதிகளையும் மற்றைய உடைமைகளையும் பல்கலைக் கழகம் தோன்றுவதற்காகத் தமிழக அரசின்பால் ஒப்படைத்தது. தமிழக அரசும் இப்பல்கலைக் கழகம் நிறுவப்படுவதற்கான சட்டத்தை 1985-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் நிறைவேற்றியது.
அழகப்பா கலைக் கல்லூரி (முதுகலை வகுப்புகள்), அழகப்பா கல்வியியல் கல்லூரி, அழகப்பா உடற் கல்விக் கல்லூரி ஆகியவற்றைக் கொண்டதாக இப்பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர் டாக்டர் (திருமதி) இராதா தியாகராசன் ஆவார்.
கணிதம், இயற்பியல், வணிகவியல், தமிழ் ஆகிய முதுகலைத் துறைகளையும், கல்வித்துறை, உடற்கல்வித்துறை ஆசியவற்றையும் கொண்டது இப்பல்கலைக் கழகம், இத்துறைகள் அனைத்திலும் எம்.பில் (M.Phil) ஆய்வு வகுப்புகள் தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கல்வித் துறையிலும் உடற் கல்வித் துறையிலும் பிஎச்.டி. (Ph.D.) பட்ட வகுப்புகள் தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்றும், புதிதாகத் தொழில் துறைசார் வேதியியற் கல்வியை (Industrial Chemistry) விரைவில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.
தென் மாநிலங்களில் உடற் கல்வித் துறையில் எம்.பில்., பி.எச்டி., போன்ற பட்டங்களுக்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் முதல் பல்கலைக் கழகமாக அழகப்பா பல்கலைக் கழகம் விளங்கும். மேலும், இப்பல்கலைக் கழகத்தில் தென்னகத்தின் பழமையான விளையாட்டுகள், தற்காப்புக் கலைகள் ஆகிய சிலம்பம், மற்போர், களரிப் பயிற்று போன்றவற்றில் ஆய்வுகள் நிகழ்த்தப்படும். யோகாசனம் மற்றும் பல்வகை வழி முறைப் பயிற்சிகள் (பிராணாயாமம்) ஆகியவற்றைக் குறித்த ஆய்வுகளும் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.
கல்வியியல் துறையில் எம்.பில்., பி.எச்டி., போன்ற பட்டங்களுக்கான ஆய்வுகள் விரைவில் தொடங்கப்படும். கல்வியியல் கல்லூரியுடன் நன்முறை மேல்நிலைப் பள்ளியும் இணைக்கப்பட்டுள்ள பல்கலைக் கழகமாகத் தென் மாநிலங்களில் திகழும் பல்கலைக் கழகம் இது ஒன்றே.
தனக்கே உரிய தனித் தன்மைகள் பலவற்றைக் கொண்டே பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டத்தின் பல்வகைப் பழங்கலைகள், பழக்க வழக்கங்கள், பழமொழிகள், பேச்சுவழக்கு, சமய நம்பிக்கைகள், கல்வெட்டுகள், நாட்டார் பாடல்கள், கதைகள், வரலாறு முதலியவற்றை நுணுகி ஆய்வதற்கான முயற்சிகள் இப்பல்கலைக் கழகத் தமிழ்த் துறையினால் மேற்கொள்ளப்படும். கம்பனின் பள்ளிப்படையாகிய நாட்டரசன் கோட்டையைத் தன்னுள் கொண்ட இம்மாவட்டத்தில் தொடர்ந்து பல்லாண்டுகளாகச் சிறப்புற நடத்தப்பட்டு வரும் கம்பன் விழாக்களுக்கு அணிசேர்க்கும் வகையில், தமிழ்த் துறை கம்பனைப் பற்றிய விரிந்த பல ஆய்வுகள் மேற்கொள்வதைத் தன் தலையாய குறிக்கோளாகக் கொள்ளும். இம்மாவட்டத்தின் அண்மைக்கால வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற மருதுபாண்டியர், வேதநாச்சியார் போன்றோரைக் குறித்த சிறப்பாய்வுகளும் வரலாற்றறிஞரின் துணையோடு நிகழ்த்தப் பெறும்.இரா.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 916)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n3mjtemf/
தமிழ்“அழகப்பா பல்கலைக் கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/n3mjtemf/APA
Oliyon Research. (2026). அழகப்பா பல்கலைக் கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n3mjtemf/MLA
"அழகப்பா பல்கலைக் கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/n3mjtemf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment