‘திவ்வியகவி’ பிள்ளைப் பெருமாளையங்கார் எழுதிய எட்டுப் பிரபந்தங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலாகும். அழகிய மணவாளதாசர் என்னும் வேறு பெயருடைய இந்நூலா- சிரியர் திருமங்கை என்னும் ஊரில் தோன்றினார்; கி.பி. 12–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். வைணவ சமயத்தில் தீவிரமான பற்றுடைய இவர் தெய்வத்தையன்றி மற்ற மனிதர்களைப் பாடாதவர். அதனால் ‘மனிதக் கவி மொழியா மங்கைவாழ் மணவாள வள்ளல்’ என்று சிறப்பிக்கப் பெற்றார். நடைநலனும் கருத்து வளமும் சான்ற பாடல்களைக் கொண்டுள்ளமையால் தமிழ் இலக்கியச் சுவை விரும்பிக் கற்போர்க்கு இத்தொகுப்புநூல் அரிய இலக்கியக் கருவூலமாகத் திகழ்கிறது. சொல்லாலும் பொருளாலும் ஆழ்வார் பாசுரங்களின் சாரமாக விளங்கும் சிறப்புடையது. ‘அட்டப்பிரபந்தம் கற்றவர் அரைப்பண்டிதர்’ என்னும் உரை இத்தொகுப்பின் சிறப்பைக் காட்டுகிறது. இத்தொகுப்பில் திருவரங்கக் கலம்பகம், திருவரங்க மாலை, திருவரங்கத்தந்தாதி, சீரங்கநாயகர் ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகிய எட்டுப் பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன. ஆசிரியர் காலத்திற்குப் பின்வந்தவர்களே இவற்றை ஒரு தொகுதியாக்கி அட்டப்பிரபந்தம் என்ற பெயரில் வெளியிட்டுப் போற்றினர். அந்தாதி, மாலை, கலம்பகம், ஊசல் என்னும் பிரபந்த வகைகளில் யமகம், திரிபு, சிலேடை முதலிய சொல்லணிகள் அமைய இந்த நூல்கள் அமைந்துள்ளன. இப்பிரபந்தங்கள், சொற்றொடர் நிலைச் செய்யுள் வகை சார்ந்தன, இவை திருவரங்கம், அழகர்மலை (திருமாலிருஞ் சோலை), திருவேங்கடம் ஆகிய திவ்விய தேசங்களில் கோயில் கொண்டுள்ள திருமால் மீது பாடப்பெற்றன. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற வைணவத் திருப்பதிகள் நூற்றெட்டினையும் தனித்தனியே ஒவ்வொரு வெண்பாவால் போற்றும் நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, இலக்கிய எழிலும் சமயநலமும் ஒருங்கே திகழும் பிரபந்தமாகும்.