தொகுதி - பத்து சா சாக் ஆழ்கடல் அல்லது மிதக்கின்ற உயிரிகளிலிருந்து உண்டாகும் ஒரு வகைச் சுண்ணப் பாறை சாக் (chalk) எனப்படும். இவ்வுயிரிகள் நுண்ணியனவாகவும், நுண் துளைகளைப் பெற்றும், எளிதில் தகர்ந்து விழக் கூடியவையாகவும் (friable) உள்ளன. சாக் வெண்மையாகவும், வெளிர் நிறங்களிலும் கால்சைட்டை மிகுதியாகப் பெற்றுக் காணப்படுகின்றது. இப்பாறை, நுண்ணுயிரிகளின் கால்சைட் ஓடுகளால் ஆனது. இவ்வுயிரிகளில் ஃபோராமினிஃபெரிடா, குளோபிஜெரினா, டெக்ஸ்டுலாரியா முதலியவை குறிப்பிடத்தக்கவை. மிதக்கும் ஆல்கே, ராப்டோலித், கோகோலித், ரேடியோலேரியா முதலியவற்றின் படிவுகள் இதில் காணப்படுகின்றன. சில சாக்குகளில் அப்பாறையின் படிவுகளை விட நுண்ணுயிரிகளின் படிவுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆங்கிலக் கால்வாயின் இரு புறத்திலும் உள்ள செங்குத்தான மலைப் பகுதியில் காணப்படும் கிரிட்டேசியக்கால சாக்குகளே மிகப் புகழ் பெற்றவை. அமெரிக்காவில் அலபாமா, மிசிசிப்பி, டென்னீஸ், நெப்ராஸ்கா முதலிய இடங்களிலும் சாக் படிவுகள் காணப்படுகின்றன. சிமெண்ட், பொடி, மென் தேய்ப்புப் பொருள் (soft abrasive), மெருகூட்டி (polisher), உரம், வண்ணத் தீட்டு கோல் (crayon) முதலிய பொருள்களில் சாக் பயன்படுகிறது. -இரா. சரசவாணி நூலோதி. A.N. Winchell and H. Winchell, Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Ltd. New Delhi, 1968.