பட்டம்
paṭṭam
18ஆம் நூற்றாண்டின் இடையில் அறிவியலில் பட்டங்களைப் பயன் படுத்துகிற வழக்கம் தோன்றியது.
18ஆம் நூற்றாண்டின் இடையில் அறிவியலில் பட்டங்களைப் பயன் படுத்துகிற வழக்கம் தோன்றியது. 1749ஆம் ஆண்டில் அலெக்சாந்தர் வில்சன், தாமஸ் மெல்லில் என்னும் ஸ்காட்லாந்திய அறிஞர்கள் வெப்ப நிலை அளவிகளைப் பட்டத் தொடர்களில் பொருத்தி, முகில்களின் வெப்ப நிலைகளை அளவிட்டனர். 1883ஆம் ஆண்டில் டக்னஸ் ஆர்ச்சிபால்ட் என்பார், பட்டங்களில் வேக அளவீட்டுக் கருவிகளைப் பொருத்தி, 1200 அடி உயரத்தில் காற்றின் வேகத்தை அளவிட்டார். 1752ஆம் ஆண்டில் பெஞ்சமின் ஃபிராங்கிளின் பட்டத்தைப் பயன் படுத்தி, மின்சாரத்தின் காரணமாகவே மின்னல் ஏற்படுகிறது என்பதை மெய்ப்பித்தார்.
லாரன்ஸ் ஹார்கிரேன் என்னும் ஆஸ்திரேலியர் 1892ஆம் ஆண்டில், பெட்டிப் பட்டங்களைக் (box kites) கண்டு பிடித்தார். குக்வியல்மோ மார்க்கோனி 1894ஆம் ஆண்டில், இங்கிலாந்திலிருந்து, நியூ ஃபவுண்டுலாந்துக்கு முதல் முதலாக அனுப்பிய வானொலி அலைகளை வாங்குவதற்கு, நியூஃபவுண்டுலாந்தில் நிறுவப் பட்ட வான் கம்பி ஒரு பெட்டிப் பட்டத்தின் உதவியால், வானில் எழுப்பப் பட்டது குறிப்பிடத் தக்கது. அது முதல் பட்டங்களின் மூலம், வானொலி அலைகளைப் பரப்புகிற மற்றும் வாங்குகிற கருவிகளையும் நிறுவுதல் தொடங்கி விட்டது.
அமெரிக்கா, ஐரோப்பிய வானிலை ஆய்வு நிலையங்கள் வளி மண்டலத்தின் அழுத்தம், வெப்ப நிலை, ஈரப் பதம், காற்றோட்டத்தின் திசை, திசை வேகம் போன்றவற்றை அளவிடப் பட்டங்களைப் பயன் படுத்தி வந்தன. 1925ஆம் ஆண்டுக்குப் பிறகு, விமானங்கள் நடைமுறைக்கு வந்ததும், பட்டங்களின் பயன்பாடு குறையத் தொடங்கியது. 1937ஆம் ஆண்டுக்குப் பிறகு, தானியங்கி வானொலிக் கருவிகள் பொருத்தப் பட்ட பலூன்கள் வந்தன. எனினும், வளி மண்டத்தின் கீழ்ப் படலங்களை ஆழமாகவும், கூர்மையாகவும் ஆராயத் தற்போதும் பெட்டிப் பட்டங்கள் பயன் படுகின்றன.
போர்க் காலப் பயன். தொலைவுகளுக்குச் சைன்களை அனுப்புதல், கொடிகளை உயர்த்திக் காட்டுதல், திசை காட்டிகளையும், விளக்குகளையும் உயரங்களில் செலுத்துதல் போன்ற பணிகளுக்குப் பட்டங்கள் பயன் படும். இரண்டாம் உலகப் போரின் போது, பட்டத் தொடர்களைப் பயன் படுத்தி, ராடார் அலை எதிர் பலிப்புப் படலங்களை வானில் மிதக்க விட்டனர்.
எதிரிகளின் இலக்குகளை நோக்கிக் குண்டுகளை வீசவும் உதவும். இவ்வாறு உயர் அளவாக 3 கி.மீ. தொலைவிலுள்ள எதிரி இலக்குகளை நோக்கிக் குண்டுகளை வீசலாம். எதிரிகளின் பாசறைகளையும், முற்றுகையிலுள்ள கோட்டைகளின் உட்பகுதிகளையும், உயரமான நிலைகளிலிருந்து ஒளிப் படங்கள் எடுக்கவும் பயன் படும். 1887ஆம் ஆண்டிலேயே டக்னஸ் ஆர்ச்சிபால்டு என்பார் பட்டங்களில் ஒளிப் படக் கருவிகளை வைத்து, நிலங்களைப் படமெடுத்தார். இம்முறையில் வில்லியம் எட்டி என்பார், ஸ்பெயினுக்கும், அமெரிக்காவுக்குமிடையில் போர் நடை பெற்ற போது, நூற்றுக்கணக்கான ஒளிப் படங்கள் எடுத்தார்.
விமானங்கள் வருவதற்கு முன், பட்டங்களிலும், வெப்பக் காற்று பலூன்களிலும், மனிதர்கள் பயணம் செய்து, எதிரிப் படை நிலைகளை உளவு பார்த்தனர். பலூன்களை விடப் பட்டங்களே இப்பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றவையாக இருந்தன. ஏனெனில், கடுங் காற்றில் பலூன்கள் அலைக்கழிக்கப் படுவதில்லை; அவை பலூன்களைப் போல் இல்லாமல், காற்றாடிகள் எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு எளிய இலக்காக அமைவதில்லை. பட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டாலும், செப்பனிடுவது எளிது. மேலும் வானில் விரைவாக ஏற்றவும், தரையிறக்கவும் எளிது. பலூன்களை விட, எளிய கட்டமைப்புக் கொண்டவை, பராமரிக்கவும் எளிதானவை. ஹைட்ரஜன் ஹீலியம் போன்ற விலையுயர்ந்த வளிமங்கள் தேவைப் படாத சிறப்புக் கொண்டவை.
1894ஆம் ஆண்டில் பேடன் பவல் என்னும் படைத் தலைவர் 36 அடி உயரமுள்ள பட்டத்தில் மனிதர்களைப் பறக்கச் செய்து, வெள்ளோட்டம் பார்த்தார். அதன் பின்னர், பல சிறிய காற்றாடிகளைக் கொண்ட தொடரின் மூலம் 100 அடி உயரத்திற்கு மனிதர்களை அனுப்பினார். அத்தொடரில் 12 அடி உயரமும், அகலமும் கொண்ட, அறுகோண வடிவமுள்ள ஐந்தாறு பட்டங்கள் இருந்தன. அவற்றைச் சில நிமிடங்களில் ஒரு சிறிய உருளைகளாக உருட்டிப் பாதுகாப்பாக வைத்து விடலாம். அதன் மொத்த எடை ஏறத் தாழ 45 கி.கி. காற்றடிக்காத போது தொடரின் கயிற்றை, ஒரு குதிரை வண்டியில் கட்டி இழுத்து, வானில் எழுப்பலாம். அமெரிக்காவில் 1897ஆம் ஆண்டில் வைஸ் என்பார், இத்தகைய பட்டங்களை வடிவமைத்து ஆய்ந்தார்; 1898ஆம் ஆண்டில் ரஷ்யப் படையினர் பட்டங்களைப் பயன் படுத்தினார். ஜெர்மனியிலும், ஐரோப்பிய நாடுகளிலும், இராணுவப் பட்டங்கள் உருவாக்கப் பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது, தரையிலிருந்து விமானங்களைச் சுடப் பயிற்சி பெறும் வீரர்களுக்கு இலக்குகளாகப் பட்டங்கள் பயன் பட்டன. அவற்றை உண்மையான விமானங்களைப் போலவே பறக்குமாறு, தரையிலிருந்து இயக்க முடிந்தது. ஜெர்மானியப் படையினர் திருகு வானூர்திகளில் காணப் படுவது போல, விசிறியும், வாலும் பொருத்தப் பட்ட ஆள் தூக்கிப் பட்டங்களை வடிவமைத்துள்ளனர். நடுக் கடலில் விபத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு கப்பலுக்கு, மீட்புக் கப்பல்களிலிருந்து தொடர்புகளை அனுப்பவும், பின்னர், அக்கயிறுகளின் மூலம் தடித்த கயிறுகளை அனுப்பி, விபத்துக்குள்ளான கப்பலை நிலைப் படுத்தவும் செய்வர்.
பறப்பு. பட்டமும், விமானமும் காற்றில் பறப்பதற்கும், பாய் மரக் கப்பல் நீரில் விரைவதற்கும், காற்றின் உந்து விசையே காரணம்.அலெக்சாந்தர் கிரஹாம் பெல் பெரிய பெட்டிப் பட்டத்தை வடிவமைக்க,தாமஸ் செல்ஃபிரிட்ஜ் என்னும் அமெரிக்கப் படை வீரரைப் பட்டத்தில் 175 அடி உயரத்திற்குப் பறக்க விட்டார். 1907–1909இல் அவர் ஏனைய பொறியாளர்களின் உதவியுடன், பொறி (engine) பொருத்திய பல விமானங்களை வடிவமைத்தார். ரைட் சகோதரர்கள் பறக்க விட்ட விமானம் கூட ஒரு பெட்டிப் பட்டத்தின் வடிவமுள்ளதேயாகும்.
ஒரு விமானம் முன்னேறிச் செல்லும் போது, காற்று, அதன் உட்புறம் குழிந்து, இறக்கைகளைத் தாங்கிப் பிடித்து, மேலே உயர்த்துகிறது. அத்துடன், இறக்கையின் மேல் காற்றழுத்தம் குறைவதாலும், விமானம் மேலே எழும். அது போலக் கயிற்றினால் தரையுடன் பிணைக்கப் பட்டிருக்கும் பட்டத்தைக் காற்று முன்னோக்கித் தள்ளுகிறது. மேலும், காற்றாடியின் விளிம்புகளில் படும் காற்றினால், பட்டத்தின் மேல் பரப்பில் ஓரளவு வெற்றிடத்தை உண்டாக்குகிறது. கயிற்றிலுள்ள இழு விசை, காற்றின் தள்ளு விசை ஆகியவற்றின் தொகுபயன் பட்டத்தை உயரே செலுத்துகிறது.
பட்ட வகைகள். எளிய சிறு பட்டங்கள், அலங்காரப் பட்டங்கள், பெட்டிப் பட்டங்கள், தொடர் பட்டங்கள் என, பட்டங்கள் பல வகைப் படுகின்றன. ஹார்கிரேவ் உருவாக்கிய பெட்டிப் பட்டம், அறிவியல் ஆய்வுகளுக்கு ஏற்றது. இப்பட்டத்தின் நான்கு பக்கங்களின் நடுப் பகுதிகளும் திறந்திருக்கும். 30–100 சதுர அடி வரையான பரப்புகளுள்ளதாக வடிவமைக்கப் படுகிறது. காற்றோட்டம் குறைவாக இருக்கும் போது, பெரிய பரப்புள்ள பெட்டிப் பட்டங்கள் பயன் படுத்தப் படும். 1910ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் வர்ஜீனியா மாநிலத்திலுள்ள மவன்ட் வெதர் என்னுமிடத்தில், 10 பட்டங்கள் இணைக்கப் பட்ட ஒரு தொடரின் முதல் பட்டம் 7.2 கி.மீ. உயரத்திற்குப் பறந்தது. அத்தொடரிலிருந்து பட்டங்களின் மொத்தப் பரப்பளவு 683 சதுர அடி. அத்தொடர் 14.4 கி.மீ. நீளமுள்ள கம்பியினால், பறக்க விடப் பட்டது. கயிற்றின் எடையும், காற்று கயிற்றை அழுத்துவதும், பட்டத்தை மிகு உயரத்திற்குப் பறக்க விடாமல் தடுக்கின்றன. எனவே, பெரும் உயரத்திற்குப் பறக்க விடப் படும் பட்டங்களைச் செலுத்த, உலோகக் கம்பிகள் பயன் படுகின்றன. எஃகினாலான பியானோ தந்திக் கம்பிகள் இதற்கு மிகவும் ஏற்றவை. 0.3 விட்டமுள்ள ஒரு கம்பியின் எடை ஒரு மைலுக்கு ஏறத் தாழ 6 கி.கி. அளவேயிருக்கும். இக்கம்பிகள் 93.25–104.44 கி.கி. வரையான இழு விசைகளைத் தாங்க வல்லது. சமயத்தில், பட்டத் தொடரின் அனைத்துப் பட்டங்களையும், ஒரே கம்பியின் மூலம் செலுத்துவதுண்டு. ஆயினும், முதல் பட்டத்தை ஒரு மெல்லிய கம்பி மூலமும் அடுத்தடுத்த பட்டங்களைப் படிப் படியாக அதிகரிக்கிற தடிமனுள்ள கம்பிகளிலும் இணைத்துப் பறக்க விடுவதே சிறந்தது. காற்றின் திசை வேகத்திற்கு நேர் விகிதமான அளவில், கம்பி ஓர் உருளையிலிருந்து வெளியிடப் படும்.
ஒரு பட்டம் சுமக்கக் கூடிய கம்பியின் நீளம், பட்டத்தின் பரப்பளவையும், காற்றின் வேகத்தையும் பொறுத்தது. சராசரியாகப் பத்து சதுர அடி பரப்புள்ள ஒரு மட்டம் 0.3" தடிமனுள்ள கம்பியின் ஏறத் தாழ ஆயிரம் அடி நீளத்தைச் சுமக்க முடியும். இவ்வாறு, முதல் பட்டம் ஓரளவு கம்பியைத் தொய்வில்லாமல் இழுத்துச் சென்றதும், அடுத்த பட்டம் இணைக்கப் படும். இது போல, அடுத்தடுத்துப் பட்டங்கள் இணைக்கப் படும் போது, கம்பியின் தடிமனும், படிப் படியாகக் கூடும். பட்டங்களின் எண்ணிக்கை கூடும் போது, கம்பியின் இழு விசையும் கூடும். தொடரின் மேல் பகுதியிலுள்ள பட்டங்கள் சீரற்ற காற்றோட்டத்தால் அலைக்கழிக்கப் படும்.காற்றாடித் தொடரின் நீளம் மிகும் போது, அதைப் பறக்க விடுவதற்கு நீண்ட நேரமாகும். அந்த இடை நேரத்தில், காற்று வீசும் வேகம் எதிர்பாராத விதமாக அதிகரித்து, அதன் காரணமாகக் கம்பியின் இழு விசை திடீரென உயர்ந்து, கம்பியறுந்து போகவும், வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்கப் பட்டங்களின் எண்ணிக்கையைக் குறைக்காமல், அவற்றின் பரப்பளவைக் குறைப்பது சிறந்தது. காற்றின் வேகம் முழு உயரத்திற்கும் ஒரே சீராக மாறுவதில்லை. அத்துடன் வெவ்வேறு உயரங்களில், அதன் திசை வெவ்வேறாகவும் இருக்கும். எனவே, தொடரிலுள்ள பட்டங்கள் வெவ்வேறு திசைகளில் தள்ளப் பட்டுக் கம்பியிலுள்ள இழு விசையைப் பரவலாக்கி விடும். இதன் காரணமாகப் பட்டத் தொடர்களை மிகப் பெரும் உயரங்களுக்குப் பறக்க விட முடிகிறது. காற்றோட்டத்தின் வேகம் மணிக்கு 19 கி. மீட்டருக்கும் குறைவாக இருக்குமானால், பட்டங்களைப் பறக்க விட முடியாது. புயல் வேகத்தில் காற்று வீசினால், பட்டம் குறைந்த உயரத்திலேயே பறக்கும்.
பட்டம் உருவாக்கும் முறை. பட்டத்தின் பரிமாணங்களை வசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். பொதுவாக, நீள அகலங்களில் உருவாக்கப் படும் பட்டங்களை அமைப்பது பற்றியே இங்கு விளக்கப் படுகின்றன. வில்லியம் எட்டி என்பார், 1890ஆம் ஆண்டில், சாய் சதுரப் பட்டத்தை உருவாக்கினார். இதனை உருவாக்க, 107 செ.மீ. நீளமுள்ள இரண்டு மூங்கில் சிம்புகள் தேவை. அவற்றில் ஒன்று, முதுகு நாணாகவும் மற்றது வில்லாகவும் அமையும். முதுகு நாணின் ஒரு முனையிலிருந்து 8.375 தொலைவில் வில்லின் மையத்தைப் பொறுத்தி, இறுகக் கட்ட வேண்டும். வில்லின் ஒரு முனையில் ஒரு நூலைக் கட்டி, நாணேற்றி மறு முனைக்கு இழுத்துக் கட்ட வில்லின் மையத்துக்கும், நூலுக்கும் இடையில் 8.37 தொலைவு இருக்குமாறு வில் வளைக்கப் பட வேண்டும். அடுத்து, ஒரு நூலைப் பட்டத்தின் விளிம்புக் கோடுகளாக, நான்கு குச்சி முனைகளையும் இணைக்குமாறு கட்டி, இந்தச் சட்டகத்தை ஒரு பட்டத் தாளின் மேல் வைத்துத் தாளின் விளிம்புகளை நூலுக்கு மேலாக மடித்து ஒட்டி விட வேண்டும். பட்டத்தைப் பறக்க விடச் சூட்சுமக் கயிற்றைச் சரியான முறையில் இணைக்க வேண்டும். ஒரு நூலை முதுகு நாண் குச்சியின் மேல் முனையிலிருந்து 7” தொலைவில் கட்டி, மற்றொரு நூலை முதுகுத் தண்டின் கீழ் முனையில் கட்டி, பறக்க விடும் கயிற்றுடன் முடிச்சுப் போட வேண்டும். பட்டம் நேராகப் பறக்கும் படி, முடிச்சை நகர்த்திச் சரி செய்ய வேண்டும்.
1902இல் சிலாஸ் கோனைன் என்பார் சிறப்பாகப் பறக்கக் கூடிய ஒருபெட்டிப் பட்டத்தை வடிவமைத்தார். அதற்கு 91.44 செ.மீ. நீளமுள்ள நான்கு சிம்புகளும் 55.56 செ.மீ. நீளமுள்ள நான்கு சிம்புகளும் தேவை. சிம்புகள் சதுரக் குறுக்குப் பரப்புள்ளவையாக இருப்பது நல்லது. 166.37 செ.மீ. நீளமும், 25.4 செ.மீ. அகலமும் கொண்ட இரண்டு பட்டக் காகிதத் துண்டுகள் அல்லது பட்டுத் துணித் துண்டுகளை எடுத்து, அவற்றின் சிறிய விளிம்புகளை இணைத்து, இரண்டு நீண்ட சிம்புகளை (படம் 1) அவற்றில் மாட்டி, ஒட்ட வேண்டும்.
பசை காய்ந்த பின், மற்ற இரண்டு நீண்ட சிம்புகளை வளையங்களின் நடுப் பகுதியில் ஒட்டிச் சதுரக் குறுக்குப் பரப்புள்ள பெட்டியாகச் செய்து, குட்டைச் சிம்புகளாகக் குறுக்குச் சட்டங்களாகப் பொறுத்த வேண்டும்.
சூட்சுமக் கயிறுகளை அமைக்க, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, அதன் ஒரு விளிம்பின் மையத்தில் கட்ட வேண்டும். இதே போல, மற்றொரு நூலைக் குறுக்காக அமைத்து, இரண்டு நூல்களின் மையங்களையும் இணைத்து முடிச்சிட்டுப் பட்டக் கயிற்றில் இணைக்க வேண்டும்.
பாதுகாப்பு விதி. பட்டம் விடுகிறவர் சில தற்காப்பு வழிகளைக் கடைப் பிடித்தல் இன்றியமையாததாகும். பட்டத்தில் உலோகக் கம்பிகளோ, தகடுகளோ இருக்கக் கூடாது. அவை மின்னலைக் கவர்ந்திழுத்துப் பட்டம் விடுபவரை, மின்னதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடும். தொலை பேசிக் கம்பி அல்லது மின் கம்பியில் நூல் படும் வகையில் பட்டம் விடக் கூடாது. அவற்றினாலும், மின்னதிர்ச்சி ஏற்படலாம். மழை பெய்யும் போதோ, இடி இடிக்கிற போதோ, பட்டம் விடக் கூடாது. ஈரமான நூல் எளிதாக மின்சாரத்தைக் கடத்தும். —கே. என். ராமச்சந்திரன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 435)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/myc47mwz/
தமிழ்“பட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/myc47mwz/APA
Oliyon Research. (2026). பட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/myc47mwz/MLA
"பட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/myc47mwz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment