இராம்மோகன் ராய், இராசா
irāmmōkaṉ rāy, irācā
இந்தியாவில் பிரம சமாசத்தை நிலை நாட்டிய சீர்திருத்தச் செம்மல்.
இந்தியாவில் பிரம சமாசத்தை நிலை நாட்டிய சீர்திருத்தச் செம்மல். இவரை இக்கால ‘இந்திய மறுமலர்ச்சியின் தந்தை’ என்றும் கூறுவர். வைதிக இந்து சமயத்தில் புரையோடியிருந்த உடன் கட்டையேறும் கொடுமையைத் தடுக்கப்பிரசாரம் செய்தவர்; உருவ வழிபாட்டைக் கண்டித்தவர்.
இராம்மோகன் ராய் கி.பி. 1772–ஆம் ஆண்டு மே மாதம் 22–ஆம் நாள் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த இராதாநகர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அந்தண குலத்தவர். இராம்மோகன் சிறுவயதிலேயே கூர்த்த மதியினராய் விளங்கினார். கிராமப் புதப் பள்ளியொன்றில் வங்க மொழியையும், முசுலிம் மவுல்வி ஒருவரிடம் பார்சி மொழியையும் கற்றுக் கொண்டார். பீகார் மாநிலத்தின் முதன்மை நகரமான பாட்னாவில் அராபி மொழியையும் வாரணாசியில் வடமொழியையும் பயின்றார்.
உபநிடதம், விவிலியம், குர்–ஆன் போன்ற சமய நூல்களைக் கற்றதால், இந்து சமயத்தில் இடைக் காலத்தில் புகுத்தப்பட்டிருந்த சடங்குகள் இடைச் செருகல்கள் என்பதை உணர்ந்து கொண்டார். அவற்றைக் களைத்து இந்து சமயத்தை மாசு மறுவற்றதாக்கப் பாடுபட்டார்.
இராம்மோகன் பள்ளி மாணவராய் இருந்த போதே உருவ வழிபாடு வேதக் கருத்துக்கு முரணானது என்று கண்டித்து எழுதினார். அதனால் அவர் கடும் எதிர்ப்புக்கு ஆளானார். இந்து சமயச் சடங்குகள், பண்டிகைகள் போன்றவற்றை எதிர்த்ததுடன் புரோகிதத்தையும் தாக்கிப் பேசினார். தம் மகனின் போக்சைப் பிடிக்காத இராம் மோகனின் தந்தையார் இவரை வீட்டை விட்டு விரட்டினார். தன்னந்தனியாக இவர் திபேத்து நாடு சென்று பாலி மொழி பயின்று பௌத்த நெறியைக் கற்றார். மூன்றாண்டுகளுக்குப் பின்னர் தம் இருபதாம் வயதில் வீடு திரும்பினார். பின்னர் வாரணாசி சென்று அங்குப் பத்தாண்டுகள் தங்கினார். அத்தருணத்தில் இவர் தந்தையார் காலமானார். தம் 31–ஆம் வயதில் இராம்மோகன் வருவாய் தேடிப் பணியில் அமர்ந்தார். பார்சி மொழியில் ‘உருவ வழிபாட்டு மறுப்பு’ என்னும் சிறு நூலை அச்சிட்டுக் காசில்லாமல் வழங்கினார். இந்நூலில் இவர் அனைத்துச் சமயங்களையும் கண்டித்து எழுதியிருந்தார். சமயத்தலைவர்களின் அறியாமையை இந்நூலில் இவர் தெற்றென விளக்கியிருந்தார். எனினும் கடவுட் கொள்கையை இவர் ஏற்றுக் கொண்டார்.
போதுமானதாக வருவாய் இல்லாத காரணத்தால் இராம்மோகன் மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். இந்திய மொழிகள் ஐந்தினைக் கற்றிருந்த இராம் மோகன் தம் 24–ஆம் வயதில் ஆங்கில மொழியையும் கற்கத் தொடங்கிச் சில ஆண்டுகளில் ஆங்கிலத்தில் உரையாடும் திறமையையும் பெற்றார்.
பணியில் இருந்தபோதும் சமய ஆய்வுச் சொற்பொழிவுகள் நடத்தி உருவவழிபாட்டினைக் கடுமையாக எதிர்த்தார். பத்தாண்டுகளுக்குப் பின்னர் அரசு ஊழியத்தை உதறிவிட்டுத் தம் தாயாருடன் சொந்த ஊரில் சில காலம் தங்கியிருந்தார்.
பண்டைய கல்வி முறையைக் கைவிட்டு ஆங்கிலக் கல்வியைக் காயத்திற்கேற்பக் கற்றல், இந்து மகளிர்க்குச் சொத்துரிமை வேண்டுதல், உடன் கட்டையேறுதலை ஒழித்தல், உருவ வழிபாட்டினை எதிர்த்தல் போன்ற சமுதாயப் புரட்சிக் கருத்துகளை எழுதியும் பேசியும் வந்தார் இவர். சமயத் தலைவர்கள், உறவினர்கள், அண்டை வீட்டார் போன்றோர் இவரைக் கடுமையாகக்குறை கூறவே, தம் தாயாராலேயே இவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார், இராம்மோகனின் அண்ணன் கி.பி. 1811–ஆம் ஆண்டு இறந்தார். அப்போது இவருடைய அண்ணியாரும் உடன்கட்டை ஏற்றப்பட்டு உயிர் துறந்தார். இந்நிகழ்ச்சி இராம்மோகனின் உள்ளத்தில் கொடும் புயலை வீசிற்று. இக்கொடிய பழக்கத்தை இந்து சமயத்திலிருந்து களைந்தெறிவது என்று உறுதி பூண்டார். ஆனால் இவர் சட்டமூலமாக அந்தப் பழக்கத்தைத் தடுப்பதை ஆதரிக்கவில்லை; மக்கள் உள்ளத்தை மாற்றி அவர்களுக்கு நற்புத்தி புகட்டி நாளடைவில் அந்தச் சீர்திருத்தத்தைக் கொண்டு வர விரும்பினார். ஆனால், அக்காலத்தில் அரசப் பேராளராக இருந்த வில்லியம் பெண்டிங்குப் பிரபு இராம்மோகனின் கருத்துகளையும் விஞ்சி, கி.பி. 1829–ஆம் ஆண்டில் உடன்கட்டைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார்.
இராம்மோகனுக்குப் பல அறிஞர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புக் கிட்டியது. சர் வில்லியம் சோன்சு (Sir William Jones), வில்சன் (Wilson), மெக்காலே (Macaulay), கோல்புரூக்கு (Coalbroke) போன்ற அறிஞர் பெருமக்களுடன் இந்தியக் கல்வி முறை, சமூக அமைப்பு போன்றவை குறித்து இராம்மோகன் உரையாடினார். ஆங்கிலக் கல்வியை இவர் ஆதரித்தார். மூடப்பழக்க வழக்கங்கள், உருவவழிபாடு போன்றவற்றை இடையறாது கண்டித்து வந்த இவர் ‘இந்து சமயத்தின் ஒரே கடவுள்’ என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். உருவ வழிபாட்டிற்கும் இந்து சம்யத்திற்கும் தொடர்பில்லை என்பதை இந்நூலில் இவர் வலியுறுத்தினார். கிறித்தவச் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் எடுத்தியம்பும் நூலொன்றையும் இவர் எழுதி வெளியிட்டார். இதனால் இந்து சமயத் தலைவர்களும் கிறித்தவப் பாதிரிகளும் இவரைக் கடுமையாக எதிர்த்தனர்.
பிரம சமாசம் உருவாதல்
இன, மொழி, சாதிப் பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்பது இராம்மோகனின் நோக்கம். இந்நோக்கத்தின் அடிப்படையில் பிறந்த இயக்கம் தான் ‘பிரம சமாசம்’ ஆகும். இவ்வியக்கத்தில் கேசவசந்திரசென் போன்ற அறிஞர் பெருமக்கள் சேர்ந்து வலிவூட்டினர். பிரம சமாசத்தை இராம்மோகன் கி.பி 1828–ஆம் ஆண்டில் நிறுவினார். அனைத்துலக மக்களும் ஒரு தன்மைப்பட்டவர்கள் என்பதே பிரம சமாசத்தின் அடிப்படைக் கொள்கை. பிரம சமாசத்தின் கிளைகள் வெளிநாடுகளிலும் தோன்றின.
அக்காலத்தில் தில்லியில் அரசராயிருந்த மொகலாயப் பேரரசர் இரண்டாம் அக்பர் என்பார் இராம்மோகன் ராயின் திறமைகளைப் பாராட்டிப் போற்றும் வண்ணம், இவருக்கு ‘இராசா’ (Rajah) என்னும் பட்டத்தைக் கொடுத்தார். அன்று முதல் இவரை ‘இராசா இராம்மோகன் ராய்’, என்று அழைத்தனர். மேலும் அக்பர் இவரை இங்கிலாந்து நாட்டுக்கும் அனுப்பிவைத்தார். அங்கு இவருக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்றாண்டுகள் அங்குத்தங்கி இராசா இராம்மோகன் ராய் மனித ஒற்றுமைக்காகப் பாடுபட்டார். இந்திய மறுமலர்ச்சிக்கும் உலக மனித ஒற்றுமைக்கும் இடையறாது பணியாற்றிய இராசா இராம்மோகன் ராய் கி.பி. 1833–ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள பிரிசுட்டல் (Bristol) என்னும் நகரில் காலமானார். இன்றும் அவ்வூரில் இவருடைய நினைவுச் சின்னத்தைக் காணலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 93)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mvmaeyhk/
தமிழ்“இராம்மோகன் ராய், இராசா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mvmaeyhk/APA
Oliyon Research. (2026). இராம்மோகன் ராய், இராசா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mvmaeyhk/MLA
"இராம்மோகன் ராய், இராசா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mvmaeyhk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment