மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம், இறைமை ஆகிய நான்கும் உடையதே அரசு எனப்படும். இவற்றுள் மக்கள், நிலப்பரப்பு, அரசாங்கம் ஆகிய மூன்றையும் வெளிப்படையாகப் பார்த்து விடலாம். ஆனால், இறைமையை (Sovereignty) மட்டில் வெளிப்படையாகப் பார்க்க முடியாது. ஓர் அரசின் தன்மையை இறைமையின் மூலமாகத்தான் கணிக்க முடியும். இறைமை என்பது உயர்ந்த அதிகாரம் (Supreme Power) எனப் பொருள்படும். இந்த உயர்ந்த அதிகாரத்தை வைத்துத்தான் ஓர் அரசு சுதந்திரமாகச் செயற்படுகிறதா? மற்றொரு அரசின் துணை அரசாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியும். இறைமையில்லாமல் அரசு இருக்க முடியாது. இறைமை என்னும் கருத்து பழைமையானது. பழங்காலக் கிரேக்கர்களும், உரோமானியர்களும் இது பற்றித் தெளிவாக அறிந்திருந்தனர். ஆனால், இன்றைய நாளில் இச்சொல்லுக்குப் பொருள் கொள்வது போல் பொருள் வரையறை செய்தவர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுச் சட்ட அறிஞர் சான்பொதின் (Jean Bodin) என்பவர் ஆவார். சட்டத்தின் கட்டுப்பாடின்றிக் குடிமக்கள் அனைவர் மீதும் அரசுக்கு இருக்கும் உச்ச அதிகாரமே இறைமை என்று இறைமைக்கு அவர் விளக்கந் தந்தார். அரசு தனது விருப்பத்திற்கேற்ப மக்களைக் கட்டாயப்படுத்திப் பணிய வைக்கும் சக்தி தான் இறைமையெனப் பேராசிரியர் இலாசுகி கூறியுள்ளார். ஆகவே, இறைமை என்பது ஒரு நாட்டில் இருக்கக்கூடிய சங்கங்கள், மக்கள் ஆகிய அனைவருக்கும் மேலான அதிகாரம் படைத்தது. இது எல்லோருக்கும் ஆணையிட உரிமை கொண்டுள்ளது. ஆனால், இறைமையை யாரும் ஆணையிட முடியாது. இறைமை அடிபணிந்தால் அரசு என்பது இல்லை என்று பொருள். வெளிநாடுகளின் கட்டுப்பாடுகள் இல்லாமல் தன்னிச்சையாக இயங்குவதே இறைமை ஆகும். இறைமையின் தன்மைகள் பின் வருவன; இறைமையானது உள்நாட்டில் வரம்பற்ற அதிகாரம் கொண்டது. இறைமையை விட உயர்ந்த அதிகாரம் உள்நாட்டில் கிடையாது. வெளிநாடுகளும் இதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களைக் கொண்டிருக்காது. இறைமையின் அதிகாரம் அந்நாட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் பொருந்தும். இறைமையிலிருந்து யாரும் விதிவிலக்குப் பெற முடியாது. இறைமை நிலைபேறானது; அழியாத் தன்மை கொண்டது. இறைமையைப் பிரிக்க முடியாது. இறைமையைப் பிரித்தால் இறைமை அழியும். இறைமையை மாற்றியமைக்க முடியாது. இறைமை தனிப்பட்டவர்களிடமோ சங்கங்களிடமோ பிறவகை அமைப்புகளிடமோ இருக்க முடியாது. இறைமை அரசு ஒன்றிடம்தான் இருக்கமுடியும். இறைமைக்கு எல்லோரும் பணிந்தாக வேண்டும் என்பது ஆசுட்டின் என்பவருடைய கருத்து. இறைமையானது இத்தன்மைகள் கொண்டதெனினும், இறைமையின் உறைவிடம் எங்குள்ளது என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. பொதுவாக எழுதப்பட்ட அரசியலமைப்புக் கொண்ட நாடுகளில் இறைமை என்பது அரசியலமைப்புகளில் காணப்படுவது என்று சொல்லலாம். ஆனால், எழுதப்பட்ட அரசியலமைப்புகளிலே வரையறுக்கப்பட்ட ஆட்சித்துறைகள் பயன்படுத்துகின்ற அதிகாரத்தை வைத்துத்தான் இறைமை எங்கு உள்ளது என்று முடிவு செய்ய வேண்டும். இறைமையைப் பயன்படுத்துகின்ற அதிகாரத்தை வைத்து, நடைமுறையிலான இறைமை (Defacto Sovereignty), பெயரளவிலான இறைமை (Dejure Sovereignty) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தியக் குடியரசுத் தலைவர், இங்கிலாந்தின் அரசியார் ஆகிய இருவரும் பெயரளவிலான இறைமை அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இவர்களுடைய பெயரில்தான் எல்லா அதிகாரங்களும் இருக்கின்றனவென்றாலும், அந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவது தலைமை அமைச்சர் தலைமையில் இயங்கும் அமைச்சரவையே ஆகும். எனவே இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடு- களில் இறைமையின் உறைவிடம் அந்தந்த நாடுகளின் அமைச்சரவை என்று சொல்லிவிடலாம். அதே நேரத்தில் பாராளுமன்றந்தான் அமைச்சரவையைத் தேர்ந்தெடுக்கிறது. ஆகவே, அமைச்சரவை பாராளுமன்றத்திற்குப் பொறுப்பாக இயங்க வேண்டும். பாராளுமன்றம் அமைச்சரவையை உருவாக்கவும் அதனை நீக்கவும் அதிகாரம் உடையதாகும். மேலும், பாராளுமன்றம் இயற்றும் சட்டவரையறைகளில் குடியரசுத் தலைவர் கையொப்பமிடவில்லையேல் அவை சட்டங்களாகா. ஆகவே, ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றம் அதற்குரிய சட்ட வரையறையைக் கொண்டு வந்து, அங்கு விவாதித்து நிறைவேற்றிய பின்னர். அச்சட்ட வரையறைக்குக் குடியரசுத் தலைவர் அல்லது அரசின் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அரசின் தலைவர் ஒப்புதல் அளிக்காவிடின் சட்டங்களை இயற்ற முடியாது. பாராளுமன்றம் இல்லாமல் சட்ட வரையறைகளை நிறைவேற்ற முடியாது. எனவே இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இறைமையின் உறைவிடம் அரசுத் தலைவரும் பாராளுமன்றமும் கலந்த இணைப்பாகும். இந்த இரண்டிலும் சேர்த்துத்தான் இறைமை உறைந்திருக்குமே தவிர, தனித்தனியாக அது இருக்காது. இறைமை எப்போதும் மக்களாட்சியில் மக்களிடம்தான் உள்ளது. ஆனால், மக்கள் தங்கள் அதிகாரங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தங்கள் பேராளர்களிடம் ஒப்படைக்கின்றனர். மக்கள் தம் பேராளர்களால் இயங்கக்கூடியவை சட்டமன்றங்கள் (Legislatures) ஆகும். இவைதாம் நடைமுறை இறைமை அதிகாரம் கொண்டவையெனச் சொல்லலாம். இவை வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் இறைமையின் தலைவர்களான மக்களைக் கூட மீறி நடக்கலாமென்பதற்காகச் சட்ட மன்றங்களோடு அரசுத் தலைவரும் இணைக்கப்பட்டிருக்கிறார். இது பிரதிநிதித்துவ முறையிலான மக்களாட்சி முறையில் உள்ளது. மக்கள் தங்கள் அதிகாரங்களைத் தங்கள் பேராளாகளிடம் ஒப்படைக்காமல் மக்களே நேரடியாக ஆட்சி செலுத்தக் கூடிய முறையும் இருக்கிறது. இது நேரடி மக்களாட்சி முறை எனப் பெயர் பெறும். இம்முறை சுவிட்சர்லாந்து நாட்டில் செயற்பட்டு வருகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டில் மக்கள் இறைமை (Popular Sovereignty) என்னும் முறையே நேரடி மக்களாட்சி முறையாகச் செயற்படுகிறது. இந்நாட்டிலும் சட்ட வரையறைகளைச் சட்ட மன்றந்தான் இயற்றுகிறது. ஆனால், மக்கள் வேண்டுகின்ற தேவைகளைத் தாம் சட்ட வரையறைகளாகச் சட்டமன்றம் வரைய வேண்டும். சட்டமன்றம் இயற்றிய சட்ட வரையறைகளுக்கு மக்களின் ஆதரவும் (Referendum) தேவை. மக்கள் ஒரு சட்ட வரையறையை ஆதரிக்கவில்லையேல் அது சட்டமாக நிறைவேறாது. பொதுமக்களின் ஆதரவின்படியேதான் சட்ட வரையறைகள் மக்களின் பேராளர்கள் மக்களுக்கு எதிராகச் செயற்படுவார்களேயாயின் அவர்களைத் திரும்ப அழைக்கும் (Recall) அதிகாரத்தையும் மக்கள் கொண்டுள்ளனர். எனவே, சட்டங்கள் இயற்றுகின்றபோது சட்டமன்றம் கவனமாக மக்களின் மனநிலைகளை அறிந்து சட்டங்களை இயற்றுகிறது. எனவே, சட்டங்கள் வேண்டுமெனக் கோருவது, சட்டங்களுக்கு ஆதரவு நல்குவது, தங்களுக்கு எதிராகப் பேராளர்கள் சென்றால் அவர்களைத் திரும்ப அழைப்பது ஆகிய எல்லா அதிகாரங்களும் மக்களிடம் இருப்பதால், சட்டங்களை மக்களுக்கு எதிராக இயற்ற முடியாது. கூட்டாட்சி அரசியலமைப்புகளில் இறைமை எங்கு உறைந்துள்ளதென்று கூறுவது கடினம். ஏனெனில் மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் என இரண்டுவகை அரசாங்கங்கள் கூட்டாட்சியில் இடம்பெறுகின்றன. இவற்றில் எந்த அரசாங்கத்தில் இறைமை உள்ளது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. இரண்டு அரசாங்கங்களிலும் இறைமை அதிகாரம் பொதிந்துள்ளது. எடுத்துக்காட்டாக, அரசியலமைப்பைத் திருத்த வேண்டுமாயின், மத்திய, மாநில அரசாங்கங்கள் சேர்ந்துதான் திருத்த வேண்டும். தனிப்பட்ட வகையில் மத்திய அரசாங்கமோ மாநில அரசாங்கங்களோ அரசியலமைப்பைத் திருத்த முடியாது. மத்திய அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தாலும், மாநில அரசாங்கங்களின் இசைவில்லாமல் சட்டம் நிறைவேறாது. ஆகவே, மத்திய அரசாங்கமே அரசியலமைப்பைத் திருத்த முடியாது. இந்தியா போன்ற கூட்டாட்சி நாடுகளில் அரசியலமைப்பு மூன்று வகையாகத் திருத்தப்படுகின்றது. மத்திய பாராளுமன்றம் தன் பெரும்பான்மை ஆதரவின் மூலமாகச் சில அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்யலாம். சில திருத்தங்களைப் பொறுத்தவரையில், மத்திய பாராளுமன்றம் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றிய பின்னர், பாதிக்குக் குறையாத மாநிலங்கள் அதற்கு இசைவளித்தால்தான் அந்த அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேறும். மாநிலச் சட்டமன்றங்களின் எண்ணிக்கையை மாற்றுவதற்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் முயற்சி மூலமாக (Initiative) மாநிலங்கள் கொண்டுவர, அதனைப் பாராளுமன்றம் ஒப்புக்கொண்டால், அது குடியரசுத் தலைவருடைய ஒப்புதலுடன் சட்டமாக நிறைவேறும். இவ்வாறு மூன்று விதங்களாக இந்திய அரசியல- மைப்பைத் திருத்தலாம். எனவே, இறைமை அதிகாரம் இந்த அரசாங்கத்தில் தான் உறைந்துள்ளதென்று சொல்ல முடியாமல் பகிர்ந்து இருக்கின்றது. இறைமையைப் பிரிக்க முடியாது. பிரித்தால் இறைமை அழிந்துவிடும் என்ற மரபார்ந்த இறைமைக் கோட்பாடு முறியடிக்கப்படுகிறது. ஆகவே, கூட்டாட்சி நாடுகளில் இறைமை அதிகாரத்தை இரண்டு அரசாங்கங்களும் பொதுப்படையாகச் செயற்படுத்தப் பொறுப்புக் கொண்டுள்ளன. சோவியத்து உருசியாவில் இறைமை அதிகாரம் வேறுபட்ட முறையில் உறைந்துள்ளது. இறைமை பாராளுமன்ற முறை அரசாங்கத்தில் அமைந்துள்ளது போல், சோவியத்து உருசியாவிலும் சட்டமன்றத்திலும் அரசின் தலைவரிடமும் இணைந்தே காணப்படுகிறது என்று சொல்லலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தில் இறைமை இருக்கின்றதென்றாலும், சட்டமன்றம் அரசின் தலைவராக இருக்கக் கூடிய ‘பிரசிடியம்’ சொல்லக்கூடிய சட்டங்களை இயற்றுவதாலும், சட்டமன்றம் இயற்றிய சட்டங்களுக்குப் பிரசிடியத்தின் ‘இசைவு’ தேவையென்பதாலும், இறைமை சட்ட மன்றத்திலும் அரசின் தலைவரிடமும் உறைந்துள்ளதெனலாம். இருப்பினும், சோவியத்து ‘பிரசிடியத்தையும்’ சட்ட மன்றத்தையும் இயக்கக் கூடியது சோவியத்து நாட்டின் பொதுவுடைமைக் கட்சிதான். இக்கட்சி சோவியத்து அரசியல் சட்டதிட்டத்திற்குள் இயங்குகிறது. இது சோவியத்து மக்களின் முன்னணிப்படை, மக்கள் அனைவரிடமிருந்தும் பிரிக்க முடியாத, மக்களது பெரும் உணர்வு மிக்க முற்போக்கான பகுதி அது. கட்சியின் நெஞ்சத்தில் மக்களின் நலனன்றி வேறெந்த நலனுக்கும் இடம் கிடையாது. எனவே, பொதுவுடைமைக் கட்சியின் மத்திய குழுவும் ‘போலிட்பீரோ’ என்ற உயர்நிலைக் கட்சி அமைப்பும் சோவியத்து அரசியலமைப்பைச் செயற்படுத்துகின்றன. மொத்தத்தில், சோவியத்து நாட்டின் உண்மையான அரசியல் அமைப்பு அந்நாட்டின் பொதுவுடைமைக் கட்சியின் அமைப்பே என்று அரசியல் அறிஞர் எர்மன் பைனர் (Herman Finer) கூறுவதால், சோவியத்து உருசியாவின் இறைமை பொதுவுடைமைக் கட்சியில்தான் உள்ளதென்பது தெளிவாகிறது. சி.ஞா.