வானசாத்திரத்தின் அடிப்படையில் அமைந்த சோதிடக் கலையில் இடம்பெறும் ஒரு குறியீடாகும். வானில் சூரியன் இயங்கும் வட்டப் பாதையில் அசுவனி முதல் 27 விண்மீன்களும் அமைந்துள்ளன. 360 பாகையாக அமையும் இராசி மண்டலத்தினை 12 ஒத்த பிரிவுகளாகப் பகுத்துள்ளனர். ஒவ்வொரு பிரிவும் 30 பாகை அளவுடையது ஆகும். அது இராசி எனப்படும். அவ்வாறமைந்த இராசிகள் பன்னிரண்டு ஆகும். இப்பன்னிரு இராசிகளும் அமைந்த இராசி வட்டத்தில் (Zodiac) இடம்பெறும் ஒவ்வொரு இராசியிலும் 2¼ விண்மீன் தொகுதி அமைகின்றது. 27 விண்மீன்களுக்கும் அவற்றினைத் தனித்தனியே இனங்காணுதற்கான வடிவ அமைப்பினை அறிஞர்கள் கண்டு காட்டியிருப்பது போலவே, ஒவ்வொரு இராசிக்கும் அதில் அமையும் விண்மீன்களின் தொகுதி நோக்கி ஒரு வடிவ அமைப்பினைக் கண்டு. அதனாலும் அதன் இயல்புகளாலும் அதற்குப் பெயர் வைத்துள்ளனர். இந்த 12 இராசி- களின் பெயர்களும் வருமாறு; மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம். இப்பெயர் கொண்ட பொருள்களின் வடிவங்களே இந்த இராசிகளுக்கு வடிவங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 12 இராசியிலும் சூரியன் இயங்கி மீண்டும் முதல் இராசியை அடைய 12 மாதங்கள் ஆகும். ஒவ்வோர் இராசியிலும் ஒரு மாத காலம் சூரிய இயக்கம் அமையும். அதனால் மேடம் முதல் 12 இராசிகளின் பெயர்களும் சித்திரை முதல் 12 மாதங்களுக்குப் பெயராகவும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதத்திலும் அவ்வம் மாதத்திற்குரிய இராசி முதலாக அமையும். ஓராண்டில் 12 இராசிகளும் அமைவதுபோல, ஒவ்வொரு நாளிலும் 12 இராசிகளும் ஏறத்தாழ 5 நாழிகை இடைவெளியில் உதயமாகும். இராசிகள் ஒவ்வொன்றிற்குமான மாதம், உருவம், அங்கம், திக்குகள், சாதி, நிறம், பகல், இரா, விழிப்பு, சரம், திரம், உபயம், ஆண்–பெண் இயல்பு, உதயம் முதலியவற்றைச் சோதிட நூலார் குறிப்பிட்டுள்ளனர். இராசி வட்டத்தில் இடம்பெறும் மேடம், இடபம் ஆகிய இராசிகளைப் பற்றிய குறிப்பு, சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது. அங்கு இராசி இயல் என்னும் சொல்லால் கூறப்பட்டுள்ளது. ‘ஆடியல்’ என்னும் புறநானூற்றுத் தொடரும் (புறம். 229–1.) ‘ஏற்றியல்’ என்னும் பரிபாடல் தொடரும் (பரி. 11–4) முறையே மேட, இடப இராசிகளைச் சுட்டுகின்றன என விளக்கியுள்ளனர். சாதகம் கணிப்போர் ஒருவன் பிறந்தபோதுள்ள கோள்களின் நிலையினை அறிவது இன்றியமையாததாகும். அதனால், அவர்கள் 27 விண்மீன்களும் பொருந்திய 12 இராசிகளின் நிலையினை, முழுவட்டத்திலமைந்த 12 வீடுகளில் அமைத்துக் காண்பர். இராசி வட்டத்தில் கோள்கள் அமைந்த நிலை கண்டு அதற்கேற்பப் பலன் கூற முற்படுவர். பன்னிரண்டு இராசிகளும் பொருந்திய சக்கரம் இராசிச்சக்கரம் எனப்படும். அதன் அமைப்பு வருமாறு:–