ஓர் உயிர் பிறவற்றிலிருந்து மாறுபடும் பண்பும், அதன் மரபுரிமையும் (inheritance) பற்றிய அறிவியல் நுண்ணுயிர் மரபியல் (microbial genetics) ஆகும். உயிரியலின் வளர்ச்சிக்கு நுண்ணுயிரிகளின் மரபியல் தோன்றுவதற்கு முன்பு, பாலினப் பெருக்கம் வழியாகவே மரபியல் வளர வேண்டியிருக்கிறது. பேருயிரிகளின் புணர்ச்சியால், பரம்பரைகள் உண்டாவதில் மிகுந்த கால தாமதமும், இவ்வாய்வுகளைச் செய்வதற்குத் தேவையான உயிர்களின் எண்ணிக்கை மிகக் கூடுதலாகக் காணப் பட்ட நிலையும் இருந்தன. இதனால், உயிரிகளின் மரபியல் விரைந்து முன்னேற்றமடையவில்லை. ஆனால், நுண்ணுயிரிகளை இவ்வாய்வுக்குப் பயன் படுத்தத் தொடங்கியதிலிருந்து மரபியல் மிக விரைவில் முன்னேறியது எனலாம். மரபியலும் புறத் தோற்ற அமைப்பும். மரபியலைப் பொறுத்த வரை அனைத்து வகை உயிரிகளிலும், அவற்றின் உருவமும், பண்புகளும், பரம்பரைகளில் காணப் படுதலே பொதுப் பண்பாகும். ஒரு சில நேரங்களில், பரம்பரைகளின் பண்புகளில் சிறு மாற்றங்கள் நிகழ்வதுண்டு. இத்தகைய மாற்றங்கள் அக்குறிப்பிட்ட உயிர்களின் பண்பகங்களின் (genes) அமைப்பில் ஏற்படும் சிறிய மாறுதல்களால் நிகழ்வன. இத்தொடர் மாற்றங்கள் பண்பகங்களின் குறிப்பிட்ட அமைப்பால் ஏற்படுவதால், இவ்வமைப்பு மரபியல் அமைப்பு (genotype) எனப் படுகிறது. அதே சமயம், ஒரு குறிப்பிட்ட உயிரின் தொகுப்பு மாறுபட்ட வளர்ச்சிச் சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாகக் காணப் படுவதும் உண்டு. இவ்வுயிரின் மரபியல் ஒன்றாகவே இருந்த போதிலும், வளர்ச்சிச் சூழ்நிலையில் மாற்றத்தால், புறப் பண்புகள் சிறிது மாற்றமடைகின்றன. இதனை, அவ்வுயிரைக் குறிப்பிட்ட ஒரே சூழ்நிலையில் வளர்ப்பதால் அறியலாம். இத்தகைய புறப் பண்புகளும், பண்பகங்களின் அமைப்பாலேயே செயல் படுத்தப் படுகின்றன. இந்நிலையில், ஒரே வகையான மரபமைப்பு மரபியல் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வெவ்வேறு புறப் பண்புகளுக்குக் காரணமாகிறது. இப்புறப் பண்புகளின் கூட்டமைப்பே, புறத் தோற்ற அமைப்பு (phenotype) எனப் படும். மரபியல் மாற்றங்கள். நுண்ணுயிரிகளில் நிலையான மாற்றங்களும் நிகழ்வதுண்டு. முன்னோர்களிடமில்லாத புதிய அல்லது மாறுபட்ட பண்புகள் பரம்பரைகளுக்கு மாற்றப் படலாம். இவ்வாறு, மாற்றப்படும் பண்பு பரம்பரைகளின் நிலையான மாற்றமாக உள்ளமையால், இப்பரம்பரைகளின் திசுவறைகளிலுள்ள மரபியல் பொருளில் மாற்றமேற்பட்டு, அதன் மரபமைப்பு மாற்றி விட்டதென அறியலாம். மரபியல் பண்புகள் திசுவறையின் கருப் பொருள்களான பண்பகங்கள், குரோமோசோம்கள் வழியாகப் பரம்பரைகளுக்கு மாற்றப் படுகின்றன. குரோமோசோம்கள் கருப் புரதங்களால் (nucleo proteins) ஆனவை. பண்பகங்கள் கண்ணுக்குத் தெரியாதவையாக இருந்த போதிலும், இவை நீண்ட மணிச் சரம் போலக் குரோமோசோமில் அமைந்துள்ளன. திசுவறைகளின் கலவிக் கூறுபாட்டின் போது (sexual division), குரோமோசோம்களும் பண்பகங்களும் இரட்டித்துக் கூறு பட்டுப் பரம்பரைகளிலும் அதே அளவில் அமைகின்றன. இது குன்றாப் பிரிவு முறை (mitosis) எனப் படும். இம்முறையில் உண்டாகும் புதிய திசுவறைகளும் தம் முன்னோர்களைப் போலவே, சிறிதும் மாறுபாடின்றி அமையும். ஆனால், கலவிக் கூறுபாட்டின் போது, குரோமோசோமும், பண்பகப் பொருளும் இரு பாதியாகக் கூறு பட்டுப் பரம்பரைத் திசுவறைகளில் அமைகின்றன. கலவிப் பெருக்கத்தின் போது, இரு பாலணுக்களும் கூடுவதாலேயே, இக்கூட்டணுவில் திசுவறைகளின் குரோமோசோம் எண்ணிக்கை முழுமையடைகிறது. இவ்வகைப் பிரிவை, குன்றல் பிரிவு முறை (meiosis) என்பர். இவ்விரு வகைத் திசுவறைப் பிரிவு முறைகளிலும், குரோமோசோம்களும் அவற்றில் அடங்கியுள்ள பண்பகங்களும் பிரிவு படும் விதமே குறிப்பிடத் தக்கது ஆகும். கடந்த பல ஆண்டுகளாகத் திசுவறைகளின் பரம்பரைகளுக்குப் பண்புகளைத் தரும் பொருளின் வேதியமைப்பைக் குறித்துப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இவ்வாறான ஆய்வுகளுக்குப் பெருந் துணையாக இருப்பவை பாக்டீரியா நச்சுயிரிகள் (Viruses) போன்றவையாகும். உயிரியல் துறையின் சிறப்பான கண்டு பிடிப்புகளில் முன்னணியில் வைக்கத் தகுந்தது, பண்பகங்களிள் வேதியமைப்பைப் பற்றிய ஆய்வேயாகும். வேதியலின் படி, பண்பகங்கள் டி ஆக்சி நியூக்ளிய அமிலம் (DNA) எனப்படும் கரு அமிலத்தால் ஆனவை. இவ்வமிலமே பண்புகளைப் பரம்பரைகளுக்குத் தரும் செயலைச் செய்கின்ற வேதிக் காரணி என்பதும் விளக்கப் பட்டுள்ளது. இவ்வுண்மையை முதன் முதலில் 1944இல் கண்டு பிடித்துக் கூறியோர் ஏவரி, மேக்லியாட், மெக்கார்டி ஆகிய அமெரிக்க அறிவியலார் ஆவர். இவர்கள், நிமோ காக்கஸ் (pneumo coccus) எனப் படும் பாக்டீரிய இனத்தின் குறிப்பிட்ட சில பண்புகளுடைய ஒரு வகையிலிருந்து, டீ ஆச்சி நியூக்ளிய அமிலத்தைப் பிரித்தெடுத்து, வேறொரு வகை நிமோகாக்கசில் புகுத்தி, அவற்றின் பண்பு மாற்றங்களை ஆய்ந்தனர். இது திரிபு மாற்றம் (transformation) எனப் படும். பின்பு வாட்சன், கிரிக், வில்கின்ஸ் போன்ற அறிவியலார் டி ஆக்சி நியூக்ளிய அமிலத்தின் மூலக் கூறு அமைப்பைக் கண்டறிந்து, அதன் இரட்டை வட அமைப்பை (double helical structure) விளக்கினர். இவ்விரு செயல்களுக்காக, அவர்களுக்கு 1962ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப் பட்டது. —கா.சிவப்பிரகாசம் துணை நூல். J.D. Watson, Molecular Biology of the Gene, Second Edition, W.A. Benjamin, Inc, New York, 1971.