இங்கிலாந்தின் வடகிழக்குப்பகுதியிலுள்ள தலைசிறந்த துறைமுகங்களுள் ஒன்று. கடந்த 600 ஆண்டுகளுக்குமேல் அல் (Hull) சீரிய துறைமுகமாக இருந்து வருகிறதென்பதே இதன் சிறப்பினைச் சுட்டிக்காட்டும். அல் (Hull) ஆறும் அம்பர் (Humber) ஆறும் கலக்குமிடத்தில் அமைந்துள்ளது இத்துறைமுகம். இது 16 கி.மீ. நீளமுள்ளது. மீன்பிடிக்கும் கப்பல்களின் தலைமையிடமாக இதைக் கருதுவர். அல் நகரில் இரசாயனம், சிமெண்டு, காகிதம், சவுக்காரம் போன்றவற்றுக்கான தொழிற்சாலைகள் உள்ளன. இரண்டாம் உலகப் போரின்போது செருமானிய விமானங்களால் இந்நகரம் பெருந்தாக்குதலுக்காளானது. இந்நகரை அல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிங்சுடன் (Kingston-upon-Hull) என்றும் கூறுவர். இதன் மக்கள்தொகை 1981–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி 2,68,302 ஆகும். கனடா நாட்டுக் குவிபெக்கு மாநிலத்தில் அல் என்னும் பெயரில் உள்ள ஊரும் ஒரு தொழிற்சாலை நகரமாகும். இதுகுவிபெக்கு மாநிலத்தின் தென்பாகத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஆட்டாவா (Ottawa) ஆற்றங்கரையிலுள்ளது. கனடா நாட்டின் தலைநகரான ஆட்டாவா ஆற்றின் மறுகரையிலுள்ளது. அல் நகர் ஆட்டாவாவின் பெருநகர்ப் பகுதியாகும். மூன்று பாலங்கள் இவ்விரு நகரங்களையும் இணைக்கின்றன. அல் நகரம் காகிதத் தொழிலுக்கும் மரமறுக்கும் தொழிலுக்கும் சிறப்பான மையமாகும். இங்கு இரும்பு உருக்கு வார்ப்படத் தொழிற்சாலைகளும் உள்ளன. இறைச்சியைத் தகரப் பீப்பாய்களில் அடைத்தலும், அச்சுயந்திரங்கள் உற்பத்தி செய்தலும் பிற தொழில்களாம். குவிபெக்குப் பல்கலைக் கழக வளாகம் அல் நகரில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மக்கள்தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 56,225 ஆகும்.