இது பற்றிப் பல நாடுகளில் பல சட்டங்கள் நிலவுகின்றன. 1938 இல் இங்கிலாந்து சிசுக் கொலைச் சட்டப்படி ஒரு வயதுக்குக் குறைந்த குழந்தை சட்டப் புறம்பாகக் கொல்லப்பட்டால், அது சிசுக் கொலை (infanticide) எனக் கருதப்படும். தாய், உள நோயால் பாதிக்கப்பட்டுச் சூலால் ஏற்பட்ட மனத் தளர்ச்சி காரணமாகப் பிரசவத்தின் போதோ, அதற்குப் பிறகு பாலூட்டும் போதோ, சிசுக் கொலை செய்தால் தண்டிக்கப்படுகிறாள். இந்தியாவில் இச்சட்டம் இல்லை. கருப்பையில் சிசு கொல்லப்படும் போதும், அது கொலையாகக் கருதப்படுவதில்லை. சிசுக்கொலை மிகவும் அரிதாகும். மணமாகாத இளம் பெண்ணாலோ, கைம்பெண்ணாலோ இக்குற்றம் செய்யப்படுகிறது. குற்றம் செய்ததாகக் கருதப்படும் தாய், அண்மையில் கருவுயிர்த்தாளா என்பதையும், அவள் உளவய நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை பிறந்து இறந்ததா அல்லது இறந்து பிறந்ததா, உயிருடன் பிறந்தால், எவ்வளவு நேரம் உயிருடன் இருந்தது, குழந்தை இறப்பின் காரணம் போன்றவற்றை அறிய வேண்டும். சிசுவைக் கொல்ல முனையும் போது, முகத்தைக் கையாலோ, தலையணையாலோ மூடி மூச்சுத் திணற வைத்தல், கழுத்தைக் கை, கயிறு, துணி கொண்டு நெரித்தல், நீர் நிறைந்த தொட்டிக்குள் மூழ்க வைத்தல், எரித்து விடல், தலையில் ஓங்கிச் சுத்தி அல்லது வலிமையான கம்பால் அடித்தல், கழுத்தைத் திருகி, முள்ளெலும்பை ஒடித்துச் சாகடித்தல், அரிதாக நஞ்சிட்டுக் கொல்லுதல், வேண்டுமென்றே பிரசவத்தின் போது கவனக் குறைவாக இருந்து குழந்தையைக் கொல்லல் ஆகியவை நேரலாம். —மு. ப. கிருஷ்ணன் நூலோதி. K. S. Narayanan Reddy, The Essentials of Forensic Medicine and Toxicology, Ninth Edition, Sri Lakshmi Art Printers, Hyderabad, 1985.