அட்சன் விரிகுடா வாணிகக்குழு
aṭcaṉ virikuṭā vāṇikakkuḻu
மேற்குக் கானடா நாட்டு வரலாற்றில் சீரிய இடத்தைப் பெற்றுள்ள வாணிக நிறுவனம் அட்சன் விரிகுடா வாணிகக் குழுவாகும்.
மேற்குக் கானடா நாட்டு வரலாற்றில் சீரிய இடத்தைப் பெற்றுள்ள வாணிக நிறுவனம் அட்சன் விரிகுடா வாணிகக் குழுவாகும். இது கி.பி. 1670–ஆம் ஆண்டில் இலண்டனில் நிறுவப்பட்டது. இது அட்சன் விரிகுடாப் பகுதியில் மென்மயிர் வாணிகத்தில் ஈடுபடத் தொடங்கப்பட்ட குழு. இன்று இக்குழு கானடாவின் மிகப் பெரிய வாரியங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இக்குழுவின் பெரும்பாலான பண்டசாலைகள் அட்சன் விரிகுடா, சேம்சு விரிகுடா போன்ற கடற்கரைப் பகுதிகளில் அமைந்துள்ளன. ஆர்க்டிக்குப் பெருங்கடலிலும் மேற்கு உள்நாட்டுப் பகுதிகளின் கரைகளிலும் இவை அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவின் பண்ட சாலைகள் கானடாவின் பெரிய நகரங்களிலும் உள்ளன.
இவ்வாணிகக் குழுவை நிறுவப் பிரான்சு நாட்டு வணிகர் இருவர் உதவினர். கி.பி. 1670–ஆம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லசு, இக்குழுவிற்கு வாணிகம் செய்யும் உரிமையை அளித்தார். அட்சன் விரிகுடாவில் கலக்கும் ஆறுகள் பாயும் அனைத்து நிலப்பகுதிகளிலும் வாணிகம் செய்யும் முற்றுரிமையை இக்குழு பெற்றது. இக்குழுவினரிடமிருந்து செவ்விந்தியர் பண்டமாற்று முறையில் மணிகள், வெந்நீர்க் கெண்டிகள், நீர் நாய்களை வேட்டையாட உதவும் கத்திகள் போன்றவற்றைப் பெற்றனர்.
அட்சன் விரிகுடா வாணிகக் குழு நிலங்களையும் அங்கு வாழும் மக்களையும் உரிமை கொண்டாடியது. கி.பி. 1869–ஆம் ஆண்டுச் சாசனப்படி ஆண்டுவந்த நிலங்களைக் கானடா அரசே எடுத்துக் கொண்டு, மேற்குப் பிரெய்ரியில் உள்ள பண்ணை நிலத்தைக் கொடுத்தது. காலப் போக்கில் வாணிகக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலங்கள் அனைத்தும் விற்கப்பட்டன. எனினும் பல இலட்சம் ஏக்கர் பரப்புடைய அந்நிலங்களில் சுரங்கங்கள் வெட்டிக் கனிப்பொருள்கள் எடுக்கும் உரிமையை மட்டும் அவ்வாணிகக் குழு பெற்றது.
முதல் உலகப் போர் மூண்ட காலத்தில் அட்சன் விரிகுடா வாணிகக் குழு அதன் மொத்த வாணிகத்தையும் சில்லரை வாணிகத்தையும் விரிவுபடுத்தத் தொடங்கியது. இக்காலத்தில் அக்குழு நகரங்களிலும் நகர்ப்புறச் சேரிகளிலும் பல புதிய பல்பொருள் அங்காடிகளைத் திறந்து வாணிகம் செய்தது. நிலங்களை வாங்கி விற்கவும் பெட்ரோல் இயற்கை எரிவாயு போன்ற பொருள்களை வாங்கவும் விற்கவும் பெரும் பொருளை முதலீடு செய்தது. கி.பி. 1970–இல் இந்நிறுவனத்தின் தலைமை இடம் கானடாவில் உள்ள வின்னிபெக்கு மாநகருக்கு மாற்றப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 205)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mqwftxsj/
தமிழ்“அட்சன் விரிகுடா வாணிகக்குழு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mqwftxsj/APA
Oliyon Research. (2026). அட்சன் விரிகுடா வாணிகக்குழு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mqwftxsj/MLA
"அட்சன் விரிகுடா வாணிகக்குழு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mqwftxsj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment