இரண்டு கால்களால் நடக்கும் முறையைக் குறிப்பிடுவதாகும். விலங்குகளில் பல வெவ்வேறு முறைகளிலும் வெவ்வேறு நிலைகளிலும் இருகாலியக்கத்தினைக் (Bipedalism) கொண்டிருக்கின்றன. பறவைகள், உயரின வாலில்லாக் குரங்குகள் (Great Apes), மனிதன் முதலான அனைத்தும் இம்முறையின. இருப்பினும், இவ்விலங்குகளிடம் அடிப்படையான மாறுபாடுகள் காணப்படுகின்றன. இவ்வேறுபாடுகளைக் கண்டறிய வாலில்லாக் குரங்கு முதல் மனிதன் வரையிலான தொகுதிவழித் தொடர்பினைப் (Phylogenetic Affinity) படிமலர்ச்சி நிகழ்வின் துணைக்கொண்டு அறிந்து, பறவைகளுக்கும் உயர் பாலூட்டிகளுக்கும் (Primates) இடையிலான தொடர்பு வளர்ச்சியினை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஏனெனில், உயர்பாலூட்டிகளும் பறவைகளும் தரையில் நகர்தல் (Terrestrial Locomotion) பண்- புடையனவாதலால். படிமலர்ச்சிவழி அமைந்த வளர்ச்சியினை ஒப்பிடுதல் இன்றியமையாததாகிறது. இருகால் நடைப்பழக்கம் சிக்கலானதும் மேம்பட்ட திறனுடையதுமாகும். இந்த நடைப்பழக்கத்தைப் பெறச் சமநிலையும் (Balance), கட்டுப்பாடும் (Control), பின்புறம், இடுப்பு, கால்கள், பாதம் முதலான உறுப்புகளின் தசை ஆற்றலும் தேவைப்படுகின்றன. நேராக நிற்பதற்குப் புவியீர்ப்பு விசையின் கோடு, நிற்கும் உயிரியின் அடித்தளத்தின் பரப்பிலேயே விழவேண்டும். மனிதன் நிறைவுடைய இருகாலியக்கத்தினைத் தன் படிமலர்ச்சி நிகழ்வில் பெற்றான். விரைவான அசைவிற்கும் நகர்ச்சிக்கும் பின்கால்களே (Hind Limb) மிகவும் ஏற்புடையன. இவை பின் கால்களின் சிறப்புத் தன்மையாகும். இத்தன்மையே மனிதனை நாற்கால் நடைப்பழக்கத்திலிருந்து விடுவித்து அவன்தன் முன்கைகளால் பொருள்களைத் திறனாகக் கையாள வைத்தது. இதனால், ஆதிமனிதன் கற்கருவிகளைச் செய்து அதனைப் பயன்படுத்தும் அறிவினைப் பெற்றான். இன்று உயிர்வாழும் உயர்பாலூட்டிகள் நான்கு வகையான இருகாலியக்கத்தினைக் கொண்டிருக்கின்றன. அவை இருகால் தத்தல் (Bipedal Hopping) இருகால் ஓட்டம் (Bigedal Running) இருகால் நடத்தல் (Bipedal Walking), இருகால் நிற்றல் (Bipedal Standing) ஆகும். இருகால் தத்துதலும் இருகால் ஓட்டமும் பொதுவாக அனைத்து உயர் பாலூட்டிகளிடமும் காணப்படுகின்றன எடுத்துக்காட்டாக, மடகாசுகர் குரங்குவகை, பெருங்கைகளையுடைய ஆப்பிரிக்க குரங்கு, நாய்முகக் குரங்கு முதலானவை முட்டி–வளைந்த (Bent–knee) இருகாலால் ஓடும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. இவ்விலங்குகளின் நடைப் பழக்கத்தில் பின் கால்களுக்கும் இடுப்பெலும்புகளுக்கும் உள்ள தொடர்பு, நான்கு கால்களாலும் நிற்றல் அல்லது அசையும் நாற்காலியக்கத்தினைக் கொண்ட உயர்பாலூட்டிகளின் கிடை நிலையில் நடக்கும் (Pronograde) முறையைப் போன்றே இருக்க வேண்டும். இருகாலியக்கம், ஓமி (Home — மனிதன்) பான் (Pan — வாலில்லாக் குரங்கு) முதலான பொதுவினத்தில் (Genus) மட்டுமே காணப்படுகிறது. ஆப்பிரிக்க வாலில்லாக் குரங்குகள் முட்டி-வளைந்த நடையினை. இருகால்களால் நடக்கும்போது பெற்றிருக்கிறது. உண்மையான, நிமிர்ந்த இருகால்களால் நிற்கும் தன்மை ஓமோ (Homo) பொதுவினத்தில் மட்டுமே காணப்படுகிறது. ஏனைய உயர்பாலூட்டிகள், ஒரு சில நேரத்தில் மட்டும் நிமிர்ந்த இருகால் நடையினைக் கொண்டிருந்தாலும் அது இயல்பற்றதும், கணநேரமே நிலைக்கக் கூடியதுமாகும். இதன் இயல்பான நடைமுறை முட்டி–வளைந்த நடை வகையேயாகும். இடுப்பெலும்பின் படிமலர்ச்சி மனிதனின் பாதம் (Foot) மிக்க தனித்தன்மை வாய்ந்த சிறப்புறுப்பாகும். மனிதன் நிற்கும்பொழுது கால்கள் முழுமையாக நீட்டப்பட்டு முழங்கால்களின் மூட்டு அடைபட்டிருக்கும். உயர்பாலூட்டிகளுள் மனிதன் (Homo sapien) மட்டுமே இந்நிலையில் குறிப்பிட்ட எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்க முடியும். தரைமீது இருகாலால் நடக்கும் தகுதி பெற்ற மனிதனின் உள்ளங்கால் தட்டையானது; பதித்து நிற்கும் நிலை (Plantigrade Position) உடையது. அவன் உள்ளங்கால் தரைமீது நடக்கும்போது அதன் பரப்பு முழுவதும் தட்டையான நிலையில் தரையில் படுகிறது. இதனாலேயே மனிதனது நடைப்பழக்கத்தை இருகால் நடை, உள்ளங்கால் பதித்து நடக்கும் முறை (Plantigrade), விரைந்து தாவி நடக்கும் முறை (Propulsive Striding) எனக் கூறுவர். மனிதனின் நடைப்பழக்கத்திற்கு மிக அருகிலுள்ள இக்கால வாலில்லாக் குரங்குகள் பொருள்களைப் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கால்விரல்களையும் பெருவிரல்களையும் (Great Toe) கொண்டுள்ளன. கால்பெருவிரல்களின் அமைப்பு உள்ளங்கால்களைத் தரையின் மீது தட்டையாக வைக்கும் நிலையினைப் பெற்றிருக்கவில்லை. ஆனால், தலைகீழான நிலை- யில் நிற்கும் அமைப்பைப் பெற்றுள்ளது. இக்குரங்கின் பாதம் வளைந்த பரப்பின்மீது படும்போது வேறுபாடுற்ற கால் பெருவிரல் பரப்பின் மேல் கவ்விக் கொள்ளாமல் எதிராகத் திரும்பும். ஏனைய கால் விரல்கள் பற்றும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. வாலில்லாக் குரங்குகளின் பாதத்திற்கும் மனிதனின் பாதத்திற்கும் ஒற்றுமையினைப் பார்க்கும் போது பல தொடர்புகள் தெளிவாகப் புலப்படினும், இரண்டும் தத்தம் நடைமுறைக்குத்தக அமைந்துள்ளன. இரண்டும் படிமலர்ச்சி வழியில் தனித் தனியாக நிற்பதால், அதனதன் நிலையிலேயே கருது கோளையும் அறிய வேண்டும். இருகாலியக்கத்தின் தோற்றம் மனிதனை ஒத்த விலங்கு வழியில் வந்த புதை படிவ உயிரிகளின் பாத அமைப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. வாலில்லாக் குரங்குகளில் இந்நிலை காணப்படவில்லை. நகர்ச்சியின் (Locomotion) செயற்பாட்டினை அறுதியிடும் உடற்கூற்றுத் தொகுதியில், முதுகெலும்புத் தண்டு முதன்மையான பாகமாகும். நாற்கால் நடைப்பழக்கம் கொண்ட விலங்குகளின் முதுகெலும்புத் தண்டு ஒரு வளைவு அல்லது வில்லைப் போலிருக்கும். இவ்வளைவின் மிகுந்த அளவு முதுகெலும்புத் தண்டின் நடுப்பகுதியில் காணப்படும். முதுகெலும்புத் தண்டின் நடுப்பகுதியில் எதிர்ப்புறம் சாய்ந்த முதுகெலும்புத் தண்டு (Anticlinal vertebra) இருக்கிறது. எதிர்ப்புறம் சாய்ந்த கெலும்புத் தண்டு முள்ளந்தண்டு செயல்முறை அமைப்புடன் (Spinous Process) முதுகெலும்புத் தண்டிற்குச் செங்குத்தாக இருப்பதால், இந்த எலும்பு மிகுந்த அளவில் வளையக்கூடிய பகுதியாக இருக்கிறது. இவ்வித அமைப்பு நான்கு கால்களாலும் கிடைநிலையில் நடக்கும் (Pronograde) விலங்குகளில் மட்டுமே காணப்படுகிறது. நேராக நிற்கக்கூடியதும் நிமிர்ந்து நடக்கக் கூடியதுமான (Orthograde) உயர் பாலூட்டிகளில் எதிர்ப்புறம் சாய்ந்த முதுகெலும்புத் தண்டு, நடுப்பகுதியிலோ புறப்பகுதிகளிலோ தெளிவாகக் காணப்படுவதேயில்லை. இந்த மாறுதல் பின்புறத் தசைகளின் அமைப்பை மாற்றி உடலை நேராக நிறுத்தச் செய்கிறது. நிமிர்ந்து நிற்கும் நிலை, (Orhograde posture) நிமிர்ந்து நின்று நாற்கால்களால் செல்லும் அமைப்பு (Orthograde Quadrupedal Locomotion), நிமிர்ந்து நடக்கும் போது கைகளைச் சுழற்றும் தன்மை (Orthograde Brachiation) முதலான இவ்வனைத்து அமைப்புகளும், பின்புறத் தசைகளின் ஆற்றலுடன் எலும்பின் தாங்கும் சக்தியினையும் மாற்றியமைப்பதாலேயே ஆகும். கிடைநிலையாகிய உடலமைப்பிலிருந்து நிமிர்ந்து நிற்கும் உடலமைப்பை அடைந்த படிமலர்ச்சியால் முதுகெலும்புத் தண்டு, அதன் இடத்தை மாற்றி, உட்புறமாக (Ventrally) நகர்ந்தது. உடலின் எடையைத் தாங்கும் அச்சாகிய முதுகெலும்பு, உடலின் ஈர்ப்புச் சக்தியின் மையப் பகுதியின் அருகில் உள்ளது. முதுகெலும்பின் இந்த இடமாற்றம் இதன் செயலமைப்பிலும் மாற்றத்தைப் பெற்று, உடலைத் தாங்கும் சக்தியையும் மிகுந்த பளுவை ஏற்றிச் செல்லும் தன்மையையும் பெற்றது. கே.நி. துணை நூல்கள் Clark, W.E. Le Gros., The Antecedents of Man, Edinburgh University Press, Edinburgh, 1962. Hewes, G.W., Food Transport and the Origin of Hominid Bipedalism, American Anthropologist, Vol. 63-687, 1961. Hooton. E.A., Up From the Ape, Macmillan., New York, 1947.