அலாசுகா
alācukā
அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் ஒன்று.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களுள் ஒன்று. இது அமெரிக்காவின் 49–ஆம் மாநிலமாக 1959–ஆம் ஆண்டு சனவரி மாதம் 3–ஆம் நாள் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவுடன் இணையும் முன்னர் அலாசுகா (Alaska) உருசியாவின் பகுதியாக இருந்தது. அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சராகவிருந்த வில்லியம் எச். சீவார்டு (William H. Seward) என்பார், இதனை உருசியாவிடமிருந்து கி.பி. 1867–ஆம் ஆண்டில், 72 இலட்சம் தாலர் (Dollar) விலைகொடுத்து வாங்கினார். அலாசுகாவை விலைக்கு வாங்கியதைக் குறை கூறிய அமெரிக்கர் பலர், இது சீவார்டின் பிழை (Seward's Folly) என்றும், சீவார்டின் பனிக்கட்டிப் பெட்டி (Seward's Icebox) என்றும் கூறி அவரை வைதார்கள். ஆனால், அலாசுகாவில் கிடைத்த மீன், கனிப்பொருள்கள், மரம், நீர்மின்சக்தி போன்றவையும், பெருமளவில் கிடைத்த பெட்ரோலியப் பொருள்களும் சீவார்டுக்குப் புகழ் சேர்த்தன.
அலாசுகா என்னும் சொல்லுக்குப் பெருநிலம் (Great Land) என்பது பொருள். இதன் அருகிலுள்ள அலூசியத் தீவுகளில் (Alutian Island) வாழ்ந்த மக்கள் இச்சொல்லைப் பயன்படுத்தினர்.
எல்லை
அலாசுகாவின் வடக்கில் ஆர்ட்டிக்குப் பெருங்கடலும், தெற்கில் வடபசுபிக்குப் பெருங்கடலும், கிழக்கில் கனடாவின் யூகான் மாநிலமும், மேற்கில் பேரிங்கு (Bering Strait) நீர்ப்பிரிவும் அமைந்துள்ளன. இது ஒரு முந்நீரகம் (Peninsula) ஆகும்.
பரப்பு
அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களுள் அலாசுகாவே பரப்பளவில் மிகப் பெரியதாகும். இதன் பரப்பு 15,27,464 சதுரக் கி.மீ. இது கிழக்கு மேற்காக 3541 கி.மீ. நீளமும், தெற்கு வடக்காக 1931 கி.மீ. அகலமும் கொண்டது. இதன் கடற்கரை 10,686 கி.மீ. நீளமுடையது
இயற்கைப்பிரிவுகள்
அலாசுகாவை- நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. பசிபிக்கு மலைப் பிரிவு, 2. நடு மேட்டுநிலங்களும் தாழ் நிலங்களும், 3. இராக்கி மலைத்தொடர்ப் பிரிவு, 4. ஆர்ட்டிக்குக் கடற்கரைச் சமவெளி என்பனவாம்.
பசிபிக்கு மலைப்பிரிவு என்பது பசிபிக்குக் கடற்கரையையொட்டித் தெற்கில் கலிபோர்னியா வரை நீண்டுள்ள மலைத்தொடர்ப் பகுதிகளைக் குறிக்கும். அலாசுகாவிலுள்ள மலைத்தொடர்கள், மேற்கில் அலூசியத் தீவுகளிலிருந்து வளைந்து, தென் நடு அலாசுகாவின் வழியாகக் கடற்கரையையொட்டித் தென்கிழக்காக அமைந்துள்ளன.
செயின்ட்டு எலியாசு மலைத்தொடர் (Saint Elias Range), இராங்கல் மலைகள் (The Wrangell Mountains), சுகா–கேனை மலைகள் (Chugach and Kenai Mountains), தல்கீத்னா மலைகள் (Talkeetna Mountains), அலாசுகா மலைத்தொடர் (Alaska Range) போன்றனவ சிறப்பான மலைத்தொடர்களாகும்.
போனா (Mount Bona), பிளாக்பர்ன் (Mount Blackburn), சான்போர்டு (Mount Sanford), இராங்கல்
அலாசுகா
(Mount Wrangell), பேர்வெதர் (Mount Fair–weather), மேக்கின்லி (Mount Mckinley), போரக்கர் (Mount Foraker) போன்றவை மலை உச்சிகள் ஆகும்.
பசிபிக்கு மலைப்பிரிவைச் சார்ந்த அலூசியத் தீவுகளுள் 14 பெருந் தீவுகளும், ஏறத்தாழ 55 சிறு தீவுகளும், மேலும் பல சிறு தீவுத் திடல்களும் அடங்கியுள்ளன. உனிமாக்கு (Unimak), உனலாசுகா (Unalaska), உம்நாக்கு (Umnak) போன்றவை பெருந்தீவுகளுள் சில. இப்பகுதியின் முதுகெலும்பாக அமைவது அலூசிய மலைத் தொடர்கள்தாம். இம்மலைத் தொடர்களில் எரிமலைகளும் உள்ளன. நடு மேட்டுநிலங்களும் தாழ்நிலங்களும் என்னும் இயற்கைப் பிரிவே, அலாசுகாவின் பரந்த நிலப்பகுதியாகும். இப்பிரிவின் தெற்கில் அலாசுகா மலைத்தொடர்களும் வடக்கில் புரூக்சு மலைத்தொடரும் (Brooks Range) அமைந்துள்ளன. குசுகோக்விம் ஆறு (Kuskokwim) இப்பகுதியில் பாய்கிறது. இப்பகுதியில் தாழ்ந்த சுருள் குன்றுகளும் (RollingHills) பரந்த சதுப்புநில ஆற்றுப்பள்ளத்தாக்குகளும் அடங்கும். யூகான் ஆறு (Yukon), கனடா நாட்டில் உற்பத்தியாகி இப்பகுதியின் வழியாகப் பாய்ந்து பேரிங் கடலில் கலக்கிறது. இராக்கி மலைத்தொடர்ப் பிரிவில் புரூக்சு மலைத் தொடர்களும் அவற்றின் அடிவாரங்களும் அடங்கியுள்ளன. புரூக்சு மலைத் தொடர், கிழக்கில் 2700 மீட்டர் வரை உயரமுள்ள பல பனி மூடிய மலை முகடுகளைக் கொண்டும் மேற்கில் தாழ்ந்தும் உள்ளது. பெய்ராடு (Bairad), திலாங் (Delong), எண்டிகாட்டு (Endicott) மலைகள் இப்பிரிவில் உள்ளன. ஆர்ட்டிக்குக் கடற்கரைச் சமவெளி அலாசுகாவின் வடகோடிப் பிரிவாகும். இப்பகுதி பெரும்பாலும் பனி மூடிய சமவெளியாகும். இங்கு மரங்கள் வளருவதில்லை. கோடைக் காலத்தில் அடர்ந்த குட்டைப் புற்களும், காட்டு மலர்களும் மிகுதியாகக் காணப்படும். இப்பகுதியைத் தூந்திரப் பகுதி (Tundra) என்பர்.
கடற்கரைகள்
அலாசுகாவின் கடற்கரைகள் 10,686 கி.மீ. நீளமுள்ளவை. இதில் 8980 கி.மீ. நீளம் பசிபிக்குப் பெருங் கடலையொட்டியும், 1706 கி.மீ. நீளம் ஆர்ட்டிக்குப் பெருங் கடலையொட்டியும் உள்ளன. கடற்கரைகளில் எண்ணற்ற வளைகுடாக்களும் விரிகுடாக்களும் உள்ளன.
ஆறுகள்
யூகான் (Yukon) ஆறு, அலாசுகாவின் சிறப்பான நீர் வழியாகும். இதன் நீளம் 2849 கி.மீ. இந்த ஆறு சூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் முடிய பனியால் உறைவதில்லை. சிறு படகுகளும், தெப்பங்களும் இந்த ஆறு கடலில் கலக்கும் பேரிங் கடலிருந்து, அலாசுகாவின் குறுக்காகக் கனடா வரை போக்குவரத்துக்குச் செல்லக் கூடும். கொயுகுக் (Koyukuk), தனானா (Tanana) ஆகியவை யூகான் ஆற்றின் சிறப்பான துணையாறுகள். குசுகோக்விம் (Kuskokwim) இரண்டாவது பெரிய ஆறாகும். கொல்வில்லி (Colville) ஆறும் குறிப்பிடத்தக்கது.
ஏரிகள்
அலாசுகாவில் ஆயிரக்கணக்கான ஏரிகள் உள்ளன. இலியம்னா ஏரி (lliamna Lake) மிகப் பெரியது. இவ்வேரி 130 கி.மீ. நீளமும், 32 கி.மீ. அகலமும் கொண்டது. அலெக்நாகிக் (Aleknagik), பீசராப் (Becharof), கிளார்க்கு (Clark), கேனை (Kenai), மின்சுமினா (Minchumina), நாக்நெக் (Naknek), சிலாவிக் (Selawik), தசேக்புக் (Teshepuk), துசுட்டுமேனா (Tustumena) ஆகியவை பிற சிறப்பான ஏரிகளாகும்.
பனியாறுகள்
அலாசுகா மலைப் பள்ளத்தாக்குகளில் ஆயிரக்கணக்கான பனியாறுகளைக் (Glaciers) காணலாம். இவை 1.6 கி.மீ. முதல் 48 கி.மீ. வரை நீளமுள்ளவை. மலாசுபினா (Malaspina) என்னும் பனியாறு, வட அமெரிக்காவிலேயே மிக நீளமானதாகும். இது புனித எலியாசு மலைத்தொடரில் அமைந்துள்ளது; 80 கி.மீ. அகலத்தில் பனிப்படிவமாக இங்குப் படிந்துள்ளது. கொலம்பியாப் பனியாறு (Columbia) மற்றொரு பனியாறாகும்.
தட்பவெட்பநிலை
அலாசுகாவின் தட்பவெப்ப நிலை பெரும் மாறுபாடுகளைக் கொண்டது. சப்பான் வெப்ப நீரோட்டத்தின் காரணமாகக் கிழக்காக வீசும் கடற்காற்றுகளின் பயனாய் அலாசுகாவில் ஆண்டு முழுதும் மிதமான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. தெற்கு, தென்கிழக்குக் கடற்கரைகளில் – 2° செ.கி. முதல் 13° செ.கி. வரை வெப்பநிலை நீடிக்கிறது. மழை, பனி உருகுவதாலும் ஈரக்கசிவுகளினாலும் அலாசுகாவில் 51 செ.மீ. முதல் 561 செ.மீ. வரை பெய்கிறது. அலாசுகாவின் வடபகுதி குளிர் மிகுந்த பகுதியாகும்.
மக்கள்
அலாசுகாவின் மக்கள்தொகை 4,01,851 (1980). இவர்களுள் மூன்றிலொரு பங்கு மக்கள் அலாசுகாவில் பிறந்தவர்கள். ஏறத்தாழ 50,800 பேர் உள்ளூரில் உள்ளவர்கள். அவர்களுள் 28,100 பேர் எசுகிமோக்கள் (Eskimos); 16,300 பேர் செவ்விந்தியர்கள் (Red Indians); 6,400 பேர் அலூத்தியர்கள்
அலாசுகாவிலுள்ள எசுகிமோ
(Aleuts) ஆவர். எசுகிமோக்களுள் பெரும்பாலோர் வடக்கிலும் மேற்கிலும் வாழ்கிறார்கள். திலிஞ்சிட்டு (Tlingit), அய்டா (Haida) இந்தியர்கள், அலாசுகாவில் தென் நடுவில் வாழ்கிறார்கள். அலூத்தியர்கள் எசுகிமோக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இவர்கள் அலாசுகா முந்நீரகத்திலும் அலூசியத் தீவுகளிலும் வாழ்பவர்கள்.
வெள்ளைக்காரர்கள் ஆங்கரேசு (Anchorage) பேர்பாங்சு (Fairbanks) என்னும் பெரு நகரங்களிலும், தென்கிழக்குக் கடற்கரை நகரங்களிலும் வாழ்கிறார்கள்.
உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள், உருசிய வைதிகத் திருச்சபையைச் (Russian Orthodox Church) சார்ந்த கிறித்தவர்கள், ஏனைய கிறித்தவ சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்களாக அலாசுகா மக்கள் வாழ்கிறார்கள்.
பொருளாதாரம்
அலாசுகாவின் பொருளாதாரத்திற்கு இங்கு அமைக்கப்பட்டுள்ள படைத்தளங்கள், இரடார் அமைப்புகள் (Radar Installations). அரசுக்குரிய திட்டங்கள் போன்றவை பேருதவி செய்கின்றன. மக்கள் தொகையில் ஏறத்தாழ 23,000 பேர் அமெரிக்கப் படைவீரர்களாகவும் 54,000 பேர் அரசாங்கப் பணியாளர்களாகவும் வேலை செய்கிறார்கள். ஆண்டுதோறும் அலாசுகாவிற்கு ஏறத்தாழ 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இம்மாநிலத்தின் சுற்றலாத் துறையும் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
அலாசுகாவில் விலையுயர்ந்த கனிப்பொருள்கள், என்றும் பச்சைப் பசேலென்று தோற்றமளிக்கும் அடர்ந்த காடுகள், அளவுக்கும் மிகுதியான நீர், மீன், விளையாட்டுக்குதவும் விலங்குகள் போன்றவை இயற்கைச் செல்வங்களாகும். பெட்ரோலியப் பொருள்களும் இயற்கை வாயுவும், கேனை முந்நீரகத்திலும் (Kenai Peninsula) குக்கு உட்குடாவிலும் (Cook inlet) கிடைக்கின்றன. கண்டங் கடக்கும் அலாசுகாக் குழாய்த் திட்டம் 1977–இல் ஏற்பட்டதிலிருந்து பெட்ரோல் இயற்கை வாயுக்களை எளிமையாகக் கொண்டு செல்ல வழிபிறந்தது. நிலக்கரி, பொன், வெள்ளி, செம்பு, மணல், கூழாங்கற்கள் போன்றவை இங்கு வெட்டியெடுக்கப்படும் சுரங்கப் பொருள்களாகும். குளிர்காலப் பயிர்கள் இங்கு வேளாண்மை செய்யப்படுகின்றன. வேளாண்மைக்குதவும் உழுநிலங்கள் இங்கு மிகக் குறைவு. பெரும்பாலான உணவுப்பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
உள்நாட்டிற்கும் வெளிநாடுகளுக்குமிடையே போக்குவரத்து பெரும்பாலும் வானவூர்திகள் மூலமே நடைபெறுகிறது. கடற்கரையையொட்டியுள்ள நகரங்கள், படகுப் போக்குவரத்தால் இணைக்கப்படுகின்றன. தென் மையப் பகுதியிலுள்ள நகரங்கள், அலாசுகா நெடுஞ்சாலையுடன் இணைக்கப்படுகின்றன.
வரலாறு
வைட்டசு பேரிங் (Vitus Bering) என்பார் அலாசுகாவைக் கி.பி. 1741-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். கொடியாக் (Kodiak) தீவில் கி.பி. 1784–ஆம் ஆண்டில் முதல் குடியேற்றம் அமைக்கப்பட்டது. உருசியா அமெரிக்கா என்னும் பெயரில், சிட்கா (Sitka)வைத் தலைநகராகக் கொண்டு, உருசியா–அமெரிக்க மென்மயிர் வணிகக் குழு இப்பகுதியில் கி.பி. 1806–இல் வாணிகம் செய்யத் தொடங்கியது. அப்போது இது உருசியர்களுக்குச் சொந்தமானதெனக் கருதப்பட்டது. அமெரிக்கா, கி.பி. 1867–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30–ஆம் நாள் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, அலாசுகாவை உருசியாவிடமிருந்து விலைக்கு வாங்கியது. எனினும் கி.பி 1884–ஆம் ஆண்டு வரை இப்பகுதி சரியான முறையில் நிருவகிக்கப்படவில்லை. அவ்வாண்டில் அலாசுகா ஒரு மாவட்டமாக்கப்பெற்று ஆரிகான் (Oregan) மாநிலத்தின் மேற்பார்வையில் இருந்தது. அமெரிக்கக் காங்கிரசின் சட்டப்படி 1912–ஆம் ஆண்டு 24–ஆம் நாள் அலாசுகா, அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பகுதியாகியது. இப்பகுதியில் முதல் சட்டமன்றம், 1913–ஆம் ஆண்டில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது. ஏழாண்டுகளுக்குப் பின்னர்வந்த அரசியல் அமைப்புத் திருத்தம், இதனை உறுதிப்படுத்தியது. அலாசுகா அமெரிக்காவின் 49–ஆம் மாநிலமாக 1959–ஆம் ஆண்டு சனவரி மாதம் 3–ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அலாசுகாவின் தலைநகர் சுனேவா (Juneau); மக்கள்தொகை 19,528 (1980).
ஆங்கரேசு (Anchorage) நகரம் அலாசுகாவின் பெருநகரம். பேர்பாங்சு (Fairbanks), சிட்கா (Sitka), கெட்சிக்கன் (Ketchikan) போன்றவை குறிப்பிடத்தக்க நகரங்கள்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 867)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mpghgpcv/
தமிழ்“அலாசுகா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mpghgpcv/APA
Oliyon Research. (2026). அலாசுகா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mpghgpcv/MLA
"அலாசுகா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mpghgpcv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment