உசுமானியாப் பல்கலைக்கழகம்
ucumāṉiyāp palkalaikkaḻakam
இந்தியாவில் ஒன்பதாம் பல்கலைக்கழகமாகவும், ஆந்திர மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் 1918–ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது.
இந்தியாவில் ஒன்பதாம் பல்கலைக்கழகமாகவும், ஆந்திர மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் 1918–ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. உசுமானியாப் பல்கலைக்கழகத்தின் (Osmania University) வைரவிழா (Diamond Jubilec) 1978–79–ஆம் கல்வியாண்டில் கொண்டாடப்பட்டது.
அய்தராபாது நகரில் உசுமானியாப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அய்தராபாதின் ஏழாம் நிசாம் (Nizam) மீர் உசுமான் அலிகான் (Mir Osman Ali Khan) என்பவரே இப்பல்கலைக்கழகத்தின் நிறுவனர். அவர் பெயரிலேயே இப்பல்கலைக் கழகம் விளங்கி வருகிறது.
உசுமானியாப் பல்கலைக்கழகம் தொடங்கப் பெற்ற ஆண்டில் 25 ஆசிரியர்களும் 225 மாணவர்களும் மட்டுமே இருந்தனர். வைரவிழாக் கொண்டாடிய ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தில் 35,000 மாணவர்கள் பெயரைப் பதிவு செய்திருந்தனர். இவர்களுள் 10,000 மாணவியர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்த 17 மகளிர் கல்லூரிகளில் சேர்ந்திருந்தனர். வைரவிழாவாண்டில் ஆயிரம் ஆசிரியர்களும் நூறு பேராசிரியர்களும் எண்ணூறு ஆராய்ச்சி மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தனர். உசுமானியாப் பல்கலைக்கழகத்தில் 7 வளாகக் கல்லூரிகளும் (Campus Colleges), 12 பல்கலைக்கழகப் பகுதிக் கல்லூரிகளும் (Constituent Colleges) 93 இணைந்த கல்லூரிகளும் (Affiliated Colleges) உள்ளன. இவையனைத்தும் வாரங்கல் (Warangal) நகர் தவிர்த்துத் தெலுங்கானாப் பகுதியிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.
இப்பல்கலைக்கழகத்தில் முன்னர் இருந்த கால்நடை மருத்துவத் துறையும் வேளாண்மைத் துறையும் ஆந்திரப்பிரதேச வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இப்பொழுது சுலையியல், ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவம் (Ayurvedic and Unani Medicine), வணிகவியல், கல்வியியல், பொறியியல், சட்டவியல், மருத்துவம், அறிவியல், சமூக அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய 10 துறைகள் உசுமானியாப் பல்கலைக்கழகத்தில் உள்ளன.
இந்தியப் பல்கலைக்கழகங்களிலேயே பல்கலைக்கழகக் கல்வியில் முதன்முதலாக இந்திய மொழிகளுள் ஒன்றான உருது மொழியைப் பயிற்று மொழியாக்கிய பெருமை உசுமானியாப்பல்கலைக் கழகத்தையே சாரும். இன்று ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, உருது ஆகிய நான்கு மொழிகளும் பல்கலைக்கழகக் கல்வியில் பயிற்று மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலேயே உசுமானியாப் பல்கலைக்கழகம் தான் முதன்முதலில் 1950–ஆம் ஆண்டில் மாலை நேரக் கல்லூரியைத் (Evening Colleges) தொடங்கி வைத்தது. இப்பல்கலைக்கழகந்தான் இந்நாட்டிலேயே முதன்முதலில் 1962–ஆம் ஆண்டில் இதழியல் (Journalism) துறைப்படிப்பை இளங்கலைப் பட்ட வகுப்பு அளவில் தொடங்கிய பெருமையையும் பெறுகிறது.
உசுமானியாப் பல்கலைக்கழகம் 1977–இலிருந்து அஞ்சல் வழித் தொடர் கல்வி மூலம் பட்டப்படிப்புகளுக்குப் பாடம் கற்பித்தும் வருகிறது.
சமசுகிருதக் கழகம் (Sanskrit Academy) என்னும் கல்வி மையம் 1954–ஆம் ஆண்டிலிருந்து உசுமானியாப் பல்கலைக்கழக உதவியுடன் பணியாற்றி வருகிறது. கிடைத்தற்கரிய பழைய சமசுகிருதக் கையெழுத்துப் படிகளைத் தேடுதல், பாதுகாத்தல், ஆராய்தல் போன்ற பணிகளை இம்மையம் செய்து வருகிறது. மேலும், இது அவற்றைப் பதிப்பித்து நூல்களாகவும் வெளியிட்டு வருகிறது. இம்மையத்தில் சமசுகிருத மொழி வளர்ச்சியை யொட்டிய ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 749)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkx6qchj/
தமிழ்“உசுமானியாப் பல்கலைக்கழகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mkx6qchj/APA
Oliyon Research. (2026). உசுமானியாப் பல்கலைக்கழகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mkx6qchj/MLA
"உசுமானியாப் பல்கலைக்கழகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mkx6qchj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment