சித்தரத்தை
cittarattai
இதனைச் சிற்றரத்தை, ஆரத்தை என்றும் கூறுவர்.
இதனைச் சிற்றரத்தை, ஆரத்தை என்றும் கூறுவர். லாங்குவாஸ் அஃபிசினாரம் (Languas officinarum) என்னும் தாவரப் பெயரும், அல்பினியா அஃபிசினாரம் (Alpinia officinarum) என்னும் பழைய பெயரும் இதற்குண்டு. நில மட்டத் தண்டான (rhizome) இது மருந்துக்கு உதவுகிறது.
ஒரு மீட்டர் உயரத்திற்குக் குறைவாகவே வளரும் தன்மையுடைய இதன் இலைகள், ஈட்டி வடிவில் 25—35 செ.மீ நீளத்திலிருக்கும். மஞ்சரி, செடி நுனியில் தோன்றும். வெள்ளை நிறத்தில் சிவப்பு நிறக் கோடுகளைப் பெற்றிருக்கும். நில மட்டத் தண்டின் கிழங்குகள் சிவப்புக் கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். இவை மணமுடையவாகவும், காரமாகவும் இருக்கும். சித்தரத்தை பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதியாகிறது.
சித்தரத்தைப் பேரினத்தில், லாங்குவாஸ் மாலச்சென்சிஸ் (Languas malaccensis) என்னும் செடியும் உள்ளது. இமயமலைப் பகுதி, கிழக்கு மேற்கிந்திய மலைகள், வங்காளம், அஸ்ஸாம் மலைப் பகுதிகளில் இது வளர்கிறது. இச்செடி 3 மீ. உயரம் வளரும். இச்செடிக் கிழங்கில் 0.25% ஆவியாகும் எண்ணெயும், இந்த எண்ணெயில் 74—80% மெத்தில் சின்னமேட்டும் உள்ளன. இலையில் 0.16 % எண்ணெய் உள்ளது. இதன் கிழங்கு, ஜாவாலில் புண்களுக்குப் பயன்படுகிறது. இதன் காயுடன், சிறிதளவு உப்புச் சேர்த்து வாந்தி உண்டாக்கலாம்.
லாங்குவாஸ் ஸ்பிசியாசா (Languas speciasa) என்னும் செடியும் குறிப்பிடத்தக்கது. இது இந்தியா, பர்மா ஆகிய நாடுகளின் தோட்டங்களில் வளர்க்கப் படுகிறது. இச்செடி 2.4—3.0 மீ . உயரம் உளர்கிறது. இலையில் 0.05% எத்திரியல் எண்ணெயும் (ethereal oil) இந்த எண்ணெயில் 30% காம்ஃபர், 17% காம்பீன் சினியோல் முதலியவையும் உள்ளன. நார் போன்ற இதன் தண்டில் 49.9%, செல்லுலோஸ் உள்ளது. இதன் கிழங்கைச் சித்தரத்தைக்குப் பதிலாகவும், இஞ்சிக்குப் பதிலாகவும் பயன்படுத்தலாம்.
மருத்துவப் பண்புகள். சித்தரத்தை 12 கிராம் எடுத்து, இடித்து வறுத்து 250 மி.லி நீர் விட்டு 125 மி.லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, காலை மாலை 30—45 மி.லி வீதம் எடுத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வர, வறட்சி இருமல் குணமாகும். ஒரு துண்டு சித்தரத்தையை வாயிலிட்டுச் சுவைத்தால், தொண்டையில் கட்டும் கோழை, வாந்தி, இருமல் குறையும். அழலோடு உண்டாகும் கோழைக் கட்டுக்குச் சித்தரத்தையும், சிறிது கற்கண்டும் சேர்த்துச் சுவைக்க வேண்டும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல், காய்ச்சல், நீரேற்றம் முதலியவற்றிற்குச் சித்தரத்தையைச் சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க வேண்டும். இருமல், கோழைக் கட்டு, குத்திருமல் (whooping cough), தலைவலி, சீதளம், காய்ச்சல் முதலியவை நீங்க அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி, சித்தரத்தை ஆகியவற்றை, வகைக்கு 10 கிராம் எடுத்து, ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர் செய்து அதில் தேன் கலந்து தர வேண்டும்.
கண்டங்கத்தர,, தூதுவளை, துளசி, ஆடா தொடாப் பாளை ஆகியவற்றை ஒவ்வொன்றும் ஒரு பிடி எடுத்துச் சாறு பிழிந்து, இவற்றுடன் வசம்பு, சித்தரத்தை, இஞ்சி ஆகியவற்றைத் தட்டிச் சாறு பிழிந்து, சேர்க்க வேண்டும். இச்சாற்றுக் கலவையைப் பனங்கற்கண்டு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க ,நாட்பட்ட இருமல், கோழைக் கட்டு, ஓயாத இருமல் ஆகியன நீங்கும். சுக்கு, மிளகு, திப்பிலி, சடாமாஞ்சில், கண்டங்கத்தரி விதை இவற்றைச் சரி எடை எடுத்து, இடித்துச் சூரணம் செய்து 10—20 கிராம் தேனில் கலந்து கொடுத்தால், இருமல் தணியும். சித்தரத்தை, சதகுப்பை, சுக்கு ஆகியவற்றை இடித்து, ஓராண்டுக்கு மேல் வயதுடைய கருநொச்சி மரத்தின் இலைச் சாற்றில் அரைத்துப் பற்றுப் போடத் தலைவலி தீரும்.
சித்தரத்தை, பரங்கிப் பட்டை, கொடி வேலி வேர், சுக்கு, பிரப்பங்கிழங்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடை எடுத்துத் தூள் செய்து, காலை, மாலை ஒவ்வொரு வேளையும், 3 கிராம் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வர,, பாரிச நோய் குணமாகும். கை கால் முடக்கு வாதம் குணமடையச் சித்தரத்தை, சுக்கு, கொடிக் காஞ்சிரை, கோவைத் தண்டு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் எடுத்து நசுக்கிச் சட்டியிலிட்டு, 250 மி.லி நீர் ஊற்றி, 125 மி.லிட்டராகும் வரை காய்ச்சிச் சாறு தயாரிக்க வேண்டும். இச்சாற்றைக் காலை, மாலை வேளைக்கு 25—30மி.லி. வீதம் குடித்து வர வேண்டும். பித்தக் காய்ச்சல் குணமாவதற்குச் சித்தரத்தை, திப்பிலி, அதிமதுரம், சீரகம், கருஞ்சீரகம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, இடித்துப் பொடித்துச் சலித்து வைத்துக் கொண்டு, காய்ச்சல் தொடங்கியது முதல் நாளும் மூன்று வேளையாக, வேளைக்கு ½ தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். சித்தரத்தை, வெந்தயம், நெற்பொரி, நெல்லிப் பருப்பு, திப்பிலி வகைக்கு 5 கிராம் எடுத்து, நன்கு பொடித்துக் கலந்து, அதில் அரை தேக்கரண்டியளவு நெய், சர்க்கரை இவற்றுடன் கலந்து சாப்பிட விக்கல் நிற்கும்.
சித்தரத்தை, ஆடாதொடாப்பாளை இலை, கண்டங்கத்தரி வேர் இவற்றில் சம அளவாக 5 கிராம் எடுத்துச் சட்டியிலிட்டு, 250 மி.லி நீர் விட்டு 125 மி.லிட்டராகக் காய்ச்சி, காலை, மாலை இரண்டு நாள் தர நெஞ்சு வலி குணமடையும். குழந்தைகளுக்கு இச்சாற்றில் ஒரு சங்களவு போதும்.
—கோ. அர்ச்சுணன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 214)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mjvgrpg9/
தமிழ்“சித்தரத்தை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mjvgrpg9/APA
Oliyon Research. (2026). சித்தரத்தை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mjvgrpg9/MLA
"சித்தரத்தை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mjvgrpg9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment