சிதம்பரனார் மாவட்டம் தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரத்தில் திரு. அய்யாசாமிப் பிள்ளைக்கும் திருமதி இலக்குமி அம்மாளுக்கும் மகவாய் 13–3–1905–இல் பிறந்தார். இளமையில் தூத்துக்குடி கால்டுவெல் உயர்பள்ளியில் பயின்றார். திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், பின்னர்த் திருச்சி தூய வளனார் கல்லூரியிலும் (St. Joseph's College) இவர் தம் கல்லூரிப் படிப்பினை முடித்தார். சென்னையிலுள்ள சட்டக் கல்லூரியில் பயின்று 1927–இல் சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். அரசுப் பணியேற்ற இவர் வட்டத் துணை ஆட்சியர், தலைமை எழுத்தர், வட்ட ஆட்சியர் முதலிய பல்வேறு அரசுப் பதவிகளில் அனந்தப்பூர் முதலிய பலவிடங்களில் 1930–ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். இறுதியாக 1948–ஆம் ஆண்டில் விசாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரானார். இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்தபோது 1949–ஆம் ஆண்டில் இவருக்கு இ.ஆ.ப. (I.A.S.) என்னும் அரசுப்பணித் தகுதி அளிக்கப்பட்டது. இவர், 1953–இல் கிழக்குக் கோதாவரியிலும், 1954–இல் தென்னார்க்காடு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவராயிருந்து சிறப்புறப் பணியாற்றினார். இவர் 1955 முதன் இந்து அறநிலையத்துறை ஆணையரானார். அத்துறையில் இவர் செய்த பணிகள் குறிப்பிடத்தக்கனவாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் யாவும் சென்று மக்கள் வழிபடவும் அவ்வத்தலப் பெருமையை உணரவும் வாய்ப்பாகத் திருப்பதிகக் கல்வெட்டு நிறுவல், தல வரலாறு முதலியன வெளியிடல் முதலிய பணிகளைச் செய்தார். சிதைவுற்ற நிலையிலிருந்த சில திருக்கோயில்களைப் புதுப்பிக்கும் முயற்சிகள் மேற்கொண்டு அவற்றில் வெற்றி பெற்றார். கோயில்களின் வருமானத்தைப் பெருக்கவும் அங்கு வழிபாடுகள் முட்டின்றி நிகழவும் செய்தார். இதே வேண்டிய ஆக்கப்பணிகளைச் போன்று வைணவத் திருக்கோயில்களிலும் அச்சமய மரபுச்கேற்றவாறு புதுப்பிக்கவும் வழிபாடு நிகழ்த்தவும் வழிவகைகள் செய்தார். இவர் சைவத் திருமுறைகள், திவ்வியப் பிரபந்தங்கள், சைவ வைணவ வழிபாட்டு முறைகள் முதலியவற்றைத் தாமே நன்கு தெரிந்திருந்தார். அதனால், மக்களையும் திருக்கோயிலில் தொண்டுபுரியும் அருச்சகர்களையும் நன்கு வழிபாடாற்றத் தூண்டினார். திருக்கோயில்கள் புனிதத் தன்மை வாய்ந்த இடங்கள் என்பதை மக்கள் உணரும் வகையில் அவற்றைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என வற்புறுத்தினார். அறநிலையத் துறையில் இவர் ஆற்றிய தொண்டு பலரும் போற்றும் வகையில் சிறப்பாக அமைந்தது. இவர் 1960 ஏப்பிரல் முடிய அத்துறையிலேயே ஆணையராயிருந்து அப்பணியினின்றும் ஓய்வு பெற விரும்பினார். எனினும், இவர்தம் பணிச்சிறப்புக் கருதி அரசு 1961 ஏப்பிரல் வரை ஓராண்டுக் கால நீட்டிப்பு வழங்கிச் சிறப்பித்தது. நீட்டிப்புக் காலம் முடிந்ததும் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு 3 ஆண்களும் 2 பெண்களும் உள்ளனர். ஓய்வு பெற்ற பின்பும் பல நிறுவனங்கள் இவரைத் தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற வேண்டின. இருப்பினும் சில ஆண்டுகள் அவ்வாறு பணிபுரிந்த பின்னர் அவற்றினீங்கி இறைவழிபாட்டிலேயே தம் இறுதிக்காலத்தைக் கழித்தார். திருச்செந்தூர் முருகனையே தம் வழிபடு தெய்வமாகக் கொண்ட இவர் சிறந்த நேர்மையாளராகவும் நிருவாகத் திறமையுள்ளவராகவும் திகழ்ந்தார். இவர் 1–5–1981–இல் காலமானார். இரா.ச.