சூரிய வெப்பத் திரட்டிகள்
cūriya veppat tiraṭṭikaḷ
சூரிய ஆற்றல் ஒளிக் கதிர்களாக எங்கும் பரவி இருப்பதை, எளிமையாக வெப்ப ஆற்றலாக மாற்றிப் பயன் படுத்தலாம்.
சூரிய ஆற்றல் ஒளிக் கதிர்களாக எங்கும் பரவி இருப்பதை, எளிமையாக வெப்ப ஆற்றலாக மாற்றிப் பயன் படுத்தலாம். வெப்பக் கதிர்களை, வெப்ப ஆற்றலாக மாற்றித் தரும் கருவிகளே, சூரிய வெப்பத் திரட்டிகள் (solar collectors) ஆகும். இவை புவியில் விழும் கதிர்களைச் சேகரித்து, வெப்ப ஆற்றலாக மாற்றித் தரும் எந்திர அமைப்புகளாகும். இவை இரு வகைப்படும்.
சம தளத் தட்டு வகை வெப்பத் திரட்டிகள். இவை ஒளியூடுருவிப் பெட்டி. பாய்மத்தைக் கடத்த குழாய் வழிகள், வெப்ப ஏற்புந்தகடு (கருமை வண்ணத்தில்), கொள்கலன் ஆகிய பகுதிகளைப் பெற்றிருக்கும்.
ஒளியூடுருவிப் பெட்டி. சூரியனிலிருந்து வரும் கதிர் வீச்சை, வெப்ப ஏற்புத் தகடுகள் பெற்றுச் சேகரிக்கும். இதனால் வெப்ப ஆற்றல் உருவாகிறது. ஆனால், உடனே ஏறத் தாழ 50 சதவீதத்திற்கும் மேல் மீண்டும் எதிரொளித்து வெளியேறி விடும். இதனால், வெப்ப இழப்பீடு நேரும். இப்பெட்டியின் மேல் நிலையிலுள்ள கண்ணாடித் தகடுகள், ஏற்புத் தகடுகளிலிருந்து எதிரொளிக்கும் ஒளிக் கற்றைகளை மீண்டும் எதிரொளிப்புச் செய்து, வெப்ப இழப்பீடு ஏற்படாமல் காக்கும். இக்கண்ணாடித் தகடுகள் மிகு அலை நீளம் கொண்ட சூரிய வெப்பத்தை உட்கவர்ந்து, ஏற்புத் தகடு மேலும் திறம்படச் செயல் புரிய உதவும். அதே வேளையில், ஏற்புத் தகட்டிற்கும், கண்ணாடித் தகடுகளுக்கும் இடையே குறைந்த அலை நீளம் உள்ளமையால், அதிலிருந்து வரும் ஒளிக் கற்றைகளை வெளியில் கடத்தாமல், எதிரொளிக்கிறது. கண்ணாடிப் பொருள்கள், ஒளியூடுருவிகள் என்பது குறிப்பிடத் தக்கது.
குழாய் வழிகள். குழாய் வழிகள், பாதைகள் முதலியவை ஏற்புத் தகடுகளுக்குள்ளேயே, உயர் வெப்பங் கடத்தும் தன்மை கொண்ட உலோகங்களால் செய்யப்பட்டுப் பொருத்தப்படும். இவை சூடான நீர், காற்றுப் போன்ற பாய்மங்களை எடுத்துச் செல்லும்,
வெப்ப ஏற்புத் தகடுகள். இவை பெரும்பாலும் அலுமினிய உலோகத்தால் செய்யப்பட்டு, வெப்பத்தை ஏற்கப் பொருத்தப்பட்டிருக்கும். இதிலிருந்து, ஒளிக் கற்றைகளின் மீள் எதிரொளிப்பைக் குறைக்க, தகடுகளின் மேற்பரப்பு கறுப்பு வண்ணத்தால் பூசப்பட்டிருக்கும். சில சமயம் கறுப்புப் பூச்சிற்குப் பதிலாக வேதிப் பூச்சுகளும் பயன்படும். இத்தகடுகளே சூரிய ஆற்றல் அமைவுகளின் அடிப்படையாகும்.
கொள் கலன். மேற்கூறிய பகுதிகள் அனைத்தையும் ஏற்றுத் தாங்கிக் கொண்டிருக்கும் அமைப்பே, கொள்கலனாகும். இவை மரம், தகடுகள் முதலியவற்றால் செய்யப்பட்டிருக்கும். கொள் கலப் பெட்டியின் உட்பகுதிகள் வெப்பங் கடத்தாப் பொருள்களால் செய்யப் படுகின்றன. இவ்வகை வெப்பத் திரட்டிகள், பெரும்பாலும் நீர் சூடாக்கல், காற்றுக் குளிரூட்டிகள் போன்றவற்றில் பயன்படுகின்றன.
ஒருமுகப்படுத்தி வகை வெப்பத் திரட்டிகள். சம தளத் தட்டு வகை வெப்பத் திரட்டியில், பரந்த அளவு வெப்பக் கதிர்க் கற்றை சேகரிக்கப்பட்டாலும், அவற்றைப் பயன்படுத்தும் போது, பிரிந்து சிதறி விடுகின்றன. எனவே, குறைந்த அளவு வெப்ப நிலையே கிட்டுகிறது. வெப்ப நிலையை உயர்த்த வேண்டுமாயின், சூரியக் கதிர் வீச்சு அனைத்தையும் ஒருமுகப் படுத்தி, ஒரு சிறு பரப்பினுள் படியுமாறு அமைக்க வேண்டும். அதாவது, கதிர்க் கற்றைகளைக் குவி மையப் புள்ளி (focal point) அல்லது குவி மைய அச்சில் படும் படி அமைக்க வேண்டும். இப்பணியை ஒருமுகப்படுத்தி வகை வெப்பத் திரட்டிகள் செய்கின்றன. பர வளைய வடிவில் குழிந்திருக்கும் இவற்றின் முகப்புப் பகுதிகள் எந்த அளவிற்கு இயலுமோ, அந்த அளவிற்குப் பளப்பளப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தாலே, பெருமளவு எதிரொளிப்பைப் பெற்று, ஆற்றலை உயர்த்த இயலும். எனவே, குழிப் பகுதிகள் அலுமினியம், கண்ணாடி போன்றவற்றால் ஆக்கப் படும். பாய்மக் கடத்துக் கறுப்புக் குழாய், குவி மையப் புள்ளியில் பொருத்தப்பட்டு, அதனுள்ளே பாய்மச் சுழற்சிக் கொண்டு சூடேற்றப்படுகிறது. மையக் குழாயில் வெப்ப இழப்பீட்டைத் தவிர்க்க, அதன் புறப் பகுதிகள் கண்ணாடி உறையால் சூழப் பட்டிருக்கும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —கே.ஆர்.கோவிந்தன் நூலோதி. Harold A. Rothbart, Mechanical Design and Systems Handbook, McGraw-Hill Book Company, London, 1964.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 646)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mh4s53a6/
தமிழ்“சூரிய வெப்பத் திரட்டிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mh4s53a6/APA
Oliyon Research. (2026). சூரிய வெப்பத் திரட்டிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mh4s53a6/MLA
"சூரிய வெப்பத் திரட்டிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mh4s53a6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment