உகந்தருளிய நிலங்கள்
ukantaruḷiya nilaṅkaḷ
என்பன திருமால் கோயில் கொண்டருளிய இடங்கள் ஆகும்.
என்பன திருமால் கோயில் கொண்டருளிய இடங்கள் ஆகும். இவற்றைத் ‘திவ்விய தேசங்கள்’ என்றும் குறிப்பர். திவ்விய தேசங்கள் என்பதற்குத் தெய்வத்தன்மை நிறைந்த இடங்கள் என்பது பொருள். இறைவன் விரும்பி உறையும் இடங்களைத் தெய்வத்தன்மை நிறைந்தவையாகப் போற்றுவது மரபு.
திருமால் உசந்தருளிய நிலங்களாக நூற்றெட்டு இடங்களை வைணவர் சிறப்பாகப் போற்றுவர். இவை ஆழ்வார்களின் ஈரத்தமிழால் போற்றிச் சிறப்பிக்கப்பட்ட திருத்தலங்கள் ஆகும். இவற்றுள் பரமபதம், திருப்பாற்கடல் என்னும் இரண்டும் தவிர, ஏனையவை பாரத நாட்டில் அமைந்துள்ளன. திருப்பாற்கடல் என்னும் திருத்தலம் பரமபதம் போலவே மானிட யாக்கையோடு சென்று வணங்க முடியாதது. எனினும், இது வட நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகக் குறிக்கப்பட்டிருத்தலால் எங்கோ வடக்கில் உள்ளது என்பர். இந்நூற்றெட்டுத் திருப்பதிகளுன் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. சோழநாட்டில் நாற்பதும் பாண்டிய நாட்டில் பதினெட்டும் சேர நாட்டில் (மலை நாட்டில்) பதின்மூன்றும் நடுநாட்டில் இரண்டும் தொண்டை நாட்டில் இருபத்திரண்டும் வடநாட்டில் பன்னிரண்டும் பரமபதம் ஒன்றுமாக அவை அமைந்துள்ளன.
சோழநாட்டுத் திருப்பதிகள்
1. திருவரங்கம், 2. உறையூர் (நிசுளாபுரி), 3. தஞ்சை மாமணிக் கோயில், 4. திரு அன்பில், 5. திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்), 6. திருவெள்ளறை, 7. திருப்புள்ளம் பூதங்குடி, 8. திருப்பேர் நகர் (கோயிலடி), 9. திருஆதனூர், 10. திருவழுந்தூர் (தேரழுந்தூர்), 11. திருச்சிறுபுலியூர், 12. திருச்சேறை, 13. திருத்தலைச்சங்க நாண்மதியம் (தலைச்சங்காடு), 14. திருக்குடந்தை, 15. திருக்கண்டியூர், 16. திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன் சந்நிதி), 17. திருக்கண்ணபுரம், 18. திருவாலித் திருநகரி, 19. திருநாகை, 20. திருநறையூர் (நாச்சியார் கோயில்), 21. திருநந்திபுர விண்ணகரம் (நாதன் கோயில்), 22. திருஇந்தளூர், 23. திருச்சித்திர கூடம், 24. காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி), 25. திருக்கூடலூர் (ஆடுதுறைப் பெருமாள் கோயில்), 26. திருக்கண்ணங்குடி, 27. திருக்கண்ண மங்கை, 28. திருக்கவித்தலம், 29. திருவெள்ளியங்குடி, 30. திருமணிமாடக் கோயில், 31. திருவைகுந்த விண்ணகரம், 32. திருஅரிமேய விண்ணகரம், 33. திருத்தேவனார் தொகை, 34. திருவளர் புருடோத்தமம், 35. திருச்செம்பொன் கோயில், 36. திருத்தெற்றியம்பலம், 37. திருமணிக்கூடம், 38. திருக்காவளம்பாடி, 39. திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்), 40. திருப்பார்த்தன் பள்ளி ஆகியன.
பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்
1. திருமாலிருஞ்சோலை மலை, 2. திருக்கோட்டியூர், 3. திருமெய்யம், 4. திருப்புல்லாணி, 5. திருத்தண்கால், 6. திருமோகூர், 7. திருக்கூடல் (மதுரை), 8. திருவில்லிபுத்தூர், 9. திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி), 10. தொலைவில்லிமங்கலம், 11. வானமாமலை (சிரீவரமங்கை அல்லது நாங்குநேரி), 12. திருப்புளிங்குடி (திருக்குருகூர்), 13. திருப்பேரை, 14. திருவைகுந்தம், 15. திருவரகுணமங்கை, 16. திருக்குளந்தை (பெருங்குளம்), 17. திருக்குறுங்குடி, 18. திருக்கோளூர்.
மலைநாட்டுத் திருப்பதிகள்
1. திருவனந்தபுரம் (அநந்தசயனம்), 2. திருவண்பரிசாரம், 3. திருக்காட்கரை, 4. திருமூழிக்களம், 5. திருப்புலியூர், 6. திருச்செங்குன்றூர், 7. திருநாவாய், 8. திருவல்லவாழ், 9. திருவண்டூர், 10. திருவாட்டாறு, 11. திருவித்துவக்கோடு, 12. திருக்கடித்தானம், 13. திருவாறன்விளை ஆகியன.
நடுநாட்டுத் திருப்பதிகள்
1. திருவயீந்திரபுரம், 2. திருக்கோவிலூர்.
தொண்டை நாட்டுத் திருப்பதிகள்
1. திருக்கச்சி, 2. திருவட்டபுயங்கம், 3. திருத்தண்கா, 4. திரு- வெளுக்கை, 5. திருப்பாடகம். 6. திருநீரகம், 7. திருநிலாத்திங்கள்துண்டம், 8. திருவூரகம், 9. திருவெஃகா, 10. திருக்காரகம், 11. திருக்கார் வானம், 12. திருக்கள்வலூர், 13. திருப்பவளவண்ணம், 14. திருப்பரமேச்சுர விண்ணகரம், 15. திருப்புட்குழி, 16. திருநின்றவூர், 17. திருவெவ்வுளூர் (திருவள்ளூர்), 18. திருநீர்மலை, 19. திருவிடவெந்தை, 20. திருக்கடன்மல்லை (மாமல்லபுரம்), 21. திருவல்லிக்கேணி, 22. திருக்கடிகை (சோளிங்கபுரம்) ஆகியன.
வடநாட்டுத் திருப்பதிகள்
1. திருவேங்கடம், 2. திருச்சிங்கவேள்குன்றம் (அகோபிலம்), 3. திருவயோத்தி, 4. திருநைமிசாரண்யம், 5. திருச்சாலக் கிராமம், 6. திருபதரியாச்சிரமம், 7. திருக்கண்டங்கடி நகர் (தேவப்ரயாகை), 8. திருப்பிரிதி, 9. திருத்துவாரகை, 10. திருவடமதுரை (கோவர்த்தநம்), 11. திருவாய்ப்பாடி (கோகுலம்), 12. திருப்பாற்கடல் ஆகியன.
திருமால் முல்லைநிலத் தெய்வம். ஆகையால் திருமால் கோயில்கள் காடும் காடு சார்ந்த நிலப்பகுதியிலேயே தொடக்க காலத்தில் தோன்றின. அந்நிலப்பகுதியில் உள்ள திருக்கோயில்கள் பெரும்பாலும் பழமைச் சிறப்புடையன. திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை முதலியவை அத்தகைய சிறப்புக்குரிய தலங்கள் ஆகும். இத்திருத்தலங்கள் முல்லைநில அழகோடு திகழ்ந்த திறத்தினை ஆழ்வார்கள் பாசுரங்களால் அறியலாம். அதிகமான திருப்பதிகளைக் குறித்துப் பாசுரம் புனைந்த பெருமைக்குரியர் திருமங்கையாழ்வார். அவர் திருப்பிரிதி முதலான வட நாட்டுத் திருத்தலங்களையும் பாடியுள்ளார். அவர் பாசுரங்களில் எண்பத்தாறு திவ்விய தேசங்கள் பாடப்பட்டுள்ளன.
இத்திருப்பதிகளில் பெருமான் மூவகைக் கோலங்களில் காட்சியளிக்கிறான். சில இடங்களில் கிடந்த கோலத்தோடும் சில இடங்களில் இருந்த கோலத்தோடும் சில இடங்களில் நின்ற கோலத்தோடும் கோயில் கொண்டுள்ளான். உகந்தருளிய நிலங்களில் எழுந்தருளிய இறைவடிவத்திற்கு ‘அர்ச்சை’ என்பது பெயர். தெ.ஞா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 720)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mfn2crzm/
தமிழ்“உகந்தருளிய நிலங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mfn2crzm/APA
Oliyon Research. (2026). உகந்தருளிய நிலங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mfn2crzm/MLA
"உகந்தருளிய நிலங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mfn2crzm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment