இது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியாகும். மேற்கில் நியூகினியாவாலும், வடக்கில் நியூ பிரிட்டனாலும், கிழக்கில் சாலமன் தீவுகளாலும் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு சுமார் 7,20,000 சதுர கிலோ மீட்டராகும். இக்கடலில் லூயிசியேட் தீவுக் கூட்டங்கள், நியூ ஜியார்ஜியா, குவாடல் கெனால் தீவு முதலியவை உள்ளன. இது தெற்கில் பவளக் கடலுடனும், வடகிழக்கில் பிஸ்மார்க் கடலுடனும் தொடர்பு கொண்டுள்ளது. கடல் தரையில் நியூ பிரிட்டன் பள்ளத்தாக்கு, சாலமன் பள்ளத்தாக்கு ஆகியவை உள்ளன. வடக்கிலுள்ள நியூ பிரிட்டன் பள்ளத்தாக்கு 4000 மீ. ஆழம் கொண்டது. சில இடங்களில் 9000 மீ. ஆழம் கொண்டது. தெற்கிலுள்ள சாலமன் பள்ளத்தாக்கு 7000 மீ. ஆழம் கொண்டது. நியூ ஜியார்ஜியா தீவுகளுக்கும் சால்ட்டா இசபெல் பள்ளத்திற்கும் இடையில் உள்ள கடல் தரை இவ்வளவு ஆழமானதன்று. மழைக் காலத்தில் பசிபிக் தென் நடுவரைக் கோட்டு நீரோட்டம் வடக்கிலிருந்து கடலுக்குள் பாய்ந்து,பின் தென்கிழக்கு தென்மேற்குத் திசைகளில் பிரிகிறது. கோடைக் காலத்தில் இந்நீரோட்டம் எதிர்த் திசையில் செல்கிறது. —கே. கே. அருணாசலம்