சாக்கடல் (Dead Sea) இது இஸ்ரேலுக்கும் ஜோர்டனுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியாகும். இதில் ஜோர்டன் ஆறு கலக்கிறது. இக்கடல் நீர் உலகிலேயே மிக அதிகமான உப்புத் தன்மையுள்ளது. மற்ற கடல் நீரை விட இக்கடல் நீரில் 9 மடங்கு உப்புத் தன்மை மிகுதியாக உள்ளது. மத்திய தரைக்கடல் மட்டத்திற்கும் கீழே ஏறத்தாழ 400 மீ. ஆழம் இக்கடல் உள்ளது. புவியில் இதுவே மிக ஆழத்தில் உள்ள கடலாகும். உப்புத் தன்மை மிகுந்துள்ளமையால் இதில் உயிரினங்கள் இல்லை. இங்கு மீன்கள் இல்லாமையால் பறவைகளும் சாக்கடலை அணுகுவதில்லை. இக்கடல் 80 கி.மீ. நீளமும் 10 கி.மீ. அகலமும் 1050 ச.கி.மீ. பரப்பும் 395 மீ. ஆழமும் கொண்டது. ஜோர்டன் ஆற்றைத் தவிர சிற்றாறுகளும் நாள் தோறும் பெருமளவு நன்னீரைக் கடலில் கொண்டு வந்து சேர்க்கின்றன. இங்கு நிலவும் அதிக வெப்பத்தால் நன்னீர் முழுதும் ஆவியாகிவிடுகிறது. எனவே, கடலில் நீர் மட்டம் மிகாமலும், எப்போதும் உப்புத் தன்மை குறையாமலும் உள்ளது. சாக்கடல் நீரில் 24% உப்பு உள்ளது. இத்துடன் மக்னீசியம் குளோரைடு, பொட்டாசியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, மக்னீசியம் புரோமைடு போன்ற கனிமப் பொருள்களும் மிகுதியாக உள்ளன. இவற்றிலிருந்து பொட்டாஷ், புரோமின் உணவு, உப்பு, ஜிப்சம் போன்ற வேதிப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சிரியா, ஜோர்டனிலிருந்து வடமேற்கு அரேபியா வரை உள்ள எரிமலைப் பகுதியருகில் இக்கடல் உள்ளமையால், கடற்கரையருகில் எரிமலைக் குழம்பு, சல்ஃபர், பாறை உப்பு முதலியன மிகுதியாகக் காணப்படுகின்றன. கடல் நீரிலிருந்து வரும் அருவெறுப்பு மணமுடைய வளிமம் சில நோய்களைத் தீர்க்கிறது என்று கருதுகின்றனர். காலீயா என்ற இடத்தில் நலவாழ்வு மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. —கே. கே. அருணாசலம்