இறைவன் எங்கும் நிறைந்தவன். இறை என்ற சொல் இறு என்ற பகுதியடியாகப் பிறந்தது. எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருள் இறைவன் (God) எனப் பெயர் பெற்றது. நறுமணத்தை யாரும் நாவினால் அறிய முடியாது. சுவையை நாவினால் அறிதல் வேண்டும், அதுபோல சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தையும், நாக்கு, கண், உடம்பு, செவி, மூக்கு என்னும் கருவிகளால் அறிய வேண்டும். இறைவன் இந்த ஐந்துக்கும் அப்பாற் பட்டவன். அவனை இந்தக் கருவிகளால் அறியத் தலைப்படுவது அறிவுடைமையாகாது. அவனை மனத்தாலும் அறிய முடியாது. நூல்களைப் படித்து அதனால் வரும் நூலறிவாலும் உணர முடியாது. இறைவன் அறிவு வடிவமானவன். அறிவே வடிவாய ஆண்டவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிதல் வேண்டும். அநுபவத்தால் உண்டான (வாலறிவு) மெய்யுணர்வு மூலம் இறைவனை அறிய முடியும். திருவள்ளுவர் மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தில் இதனை உணர்த்துகிறார். திருவள்ளுவரைப் பின்பற்றி உமாபதி சிவம் என்னும் சைவ சித்தாந்த ஆசிரியர் திருவருட்பயன் என்னும் நூலில் இக்கருத்தை ‘அருவும் உருவும் அறிஞர்க் கறிவாம், உருவம் உடையான் உளன்’ என்பதால் விளக்குகிறார். அறிவு நிலையடைந்த அறிஞர் தாம் இவ்வுண்மையை உணர்வர். அவ்வறிவு நிலையை அடையாதவர்களை அறிவு நிலையை அடைய இருக்கும் முதல் படியினர் என்றும் சைவம் கூறும். இத்தகைய நிலையில் உள்ளவர்களுக்குத் தான் இறைவன் உருவம், அருவம், அருவுருவம், என்னும் நிலைகளில் காட்சி தருகின்றான். உருவம் என்பது கண்ணால் பார்க்கக் கூடிய பிழம்பு, உலக மக்களுக்கு உதவி புரியும் இருபத்தைத்து திருஉருவங்களை இறைவன் என அறிந்தோர் கூறுவர். இவை கோர வடிவு, போக வடிவு, யோக வடிவு என்பவற்றில் அடங்கும். கோர அல்லது வேக வடிவு என்பது மக்களுடைய வினையைப் போக்குவதற்கு இறைவன் எடுக்கும் வடிவு. காமாரி என்னும் காமனை அழித்த உருவத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். போக வடிவு என்பது சிவனும் சக்தியுமாய் இணைந்து உயிர்கள் குடும்ப வாழ்வு நடத்த முன்னோடியாக உள்ள நிலை. சோமாசுகந்த வடிவத்தை (உமா தேவி முருகப் பெருமானுடன் சிவபிரான் உள்ள நிலை) இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். தென் முகக் கடவுள் யோக வடிவில் இருந்து உயிர்கள் ஞானம் பெற உதவுதல் யோக வடிவத்துக்கு எடுத்துக்காட்டாகும். வைணவ சமயத்தில் இறைவனைப் பரம், வியூகம், விபவம், அந்தரியாமி, அர்ச்சை என்று ஐந்து நிலைகளில் வைணவர் வணங்குவர். பரம் மேலான நிலை, வியூகம் உலகத்தைப் படைத்துக் காத்து அழித்தற்கு இறைவன் மேற்கொள்ளும் நிலைகள். விபவம் என்பது கட்டில் சிக்கியிருக்கும் உயிர்கள் விடுதலை பெற இறைவன் தம் உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி எடுக்கும் இராமன், கிருட்டிணன் போன்ற அவதாரங்கள். அந்தர்யாமி என்பது எல்லா உயிர்களிலும் ஊடுருவி நின்று உயிர்களுக்கு உதவுந்தன்மையைக் குறிப்பதாகும். அர்ச்சை என்பது திருவரங்கம், காஞ்சி, திருப்பதி முதலிய தலங்களில் உருவ வடிவில் இருந்து உயிர்களுக்கு அருள் வழங்கும் தன்மையாகும்; ஆகவே, சைவம், வைணவம் என்னும் இரு சமயங்களிலும் உருவ வழிபாடு இன்றியமையாத இடம் பெறுகிறது. உருவ வழிபாடு என்னும் தொடரை உருவத்தில் வழிபடுதல், உருவத்தை வழிபடுதல் என்று இரு வகையில் பிரிக்கலாம். உருவத்தில் வழிபடுதல் என்று ஏழாம் வேற்றுமை உருபு விரித்துப் பொருள் கொள்ளுதல் உருவ வழிபாட்டின் தத்துவச் சிறப்பை விளக்குவதாக அமைந்துள்ளது. உருவத்தில் வழிபடுதல் என்னும்போது வழிபடப்படுவது பரம்பொருள், உருவமானது பரம் பொருளை வழிபடுவதற்குக் கருவியாக உள்ளது என்னும் கருத்து விளங்குகிறது. உருவத்தை வழிபடுதல் என்பது உருவத்தை மட்டும் வழிபடுதல் என்னும் பொருளைத் தரும். ஆகவே, உருவத்தில் வழிபடுதல் என்னும் தொடர் எங்கும் இருக்கும் இறைவனை அவ்வாறு உள்ளவாறு அறிந்து, திருவுருவத்தில் வழிபடுதல் என்பதைக் குறிக்கும். தேன் நன்கு சுவையாக உள்ளது. ஆயின் அந்தச் சுவையைக் கருப்பு, சிவப்பு எனக் கூற முடியாது. தேனின் சுவையை எப்படி இயம்புவது? சுவை கண்டவனுக்குத் தெரியாது; உண்டவனே உணர்வான். அது போல ஞானப் பொருளாக, அநுபவப் பொருளாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர முடியும். வேறு வகைகளால் இறைவனை முழுமையாக உணர முடியாது. இறைவனை அறிவதற்குப் பகுத்தறிவை எந்த அளவிற்குப் பயன்படுமோ அந்த அளவிற்குப் பயன்படுத்த வேண்டும் என்று திருமூலர் கூறுகிறார். திருஞானசம்பந்தர் துன்பம் நீங்க வேண்டுமானால் இறைவனிடம் மனத்தைச் செலுத்தி, அறவாழ்க்கை வாழ வேண்டும். கடவுளை ஒருவர் சோதிக்கலாம். பகுத்தறிவின் எல்லை கொண்டு கடவுளைச் சோதிக்கும் போது ஓர் எல்லை மீறிப் போகக் கூடாது என்பதை உணர்த்தவே ‘மிக்குச் சோதிக்க வேண்டா’ என்று கூறுகிறார். ஆகவே, பகுத்தறிவினால் இறைவனைக் காணுதல் என்பது இயலாததொன்றாகும். சா.க