பிரான்சு நாட்டில் விசிர் (Vezere) பள்ளத்தாக்கில் மாண்டிக்நாக்கு (Montignac), தோர்தோகன் (Dordogne) என்ற இடங்களுக்கு அருகில் அமைந்துள்ள குகை. இது பழங்கற்காலக் குகைகளுள் புகழ்பெற்றது. உலகப் புகழ்பெற்ற கடைக்கற்கால (கி.மு. 35,000–கி.மு. 8,000) ஓவியங்கள் இக்குகையில் காணப்படுகின்றன. கி.பி. 1940–ஆம் ஆண்டு இக்குகை 4 சிறுவர்கனால் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சிறுவர்களுடன் வந்த நாய் தவறுதலாக இக்குகையினுள் சென்றுவிடவே அந்நாயைத் தேடும் பொருட்டு இச்சிறுவர்கள் இக்குகையினுள் சென்றனர். இலாசுகோ குகையினுள் (Lascaux) பல அடித்தள அறைகள் காணப்படுகின்றன. இவ்வறைகளை வழி ஒன்று இணைக்கிறது. ஓவியங்களும் செதுக்கு வேலைகளும் காணப்படும் பகுதி குகையின் இறுதியில் இருட்டான பகுதியில் உள்ளது. இக்குகையில் விலங்குகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன. விலங்குகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. விலங்குகள் இயற்கையான முறையிலும் அவற்றின் செயல்கள் சிறந்த முறையிலும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பல விலங்குகள் உடலில் அம்பும் ஈட்டியும் தைத்த நிலையில் தீட்டப்பட்டுள்ளன. காட்டெருது, பன்றி, குதிரை, மான், காண்டாமிருகம் ஓநாய் போன்ற விலங்குகள் இவ்வோவியங்- களில் உள்ளன. கலைமான் கூட்டம் ஒன்றின் தலைப் பகுதி மட்டும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. இது மான்கள் ஆற்றைக் கடந்து நீந்திச் செல்வது போல் வரையப்பட்டதாக இருக்கலாம். மனிதர்களின் கூட்டம் ஒன்று காண்டாமிருகத்தையும் காட்டெருதையும் சுற்றி இருப்பது போல் வரையப்பட்டுள்ளது. இவை இரண்டும் காண்பவரின் கருத்தைக் கவர்வனவாக உள்ளன. ஓவியங்கள் சிவப்பு, மஞ்சள், காவி, கறுப்பு வண்ணங்களில் தீட்டப்பட்டுள்ளன. இக்குகை ஓவியங்களின் காலத்தை கார்பன்–14 முறைப்படி கணக்கிட்டதில் இவ்வோவியங்கள் கடை ஆரிக்னேசியன் (Late Aurignacian), பெரிகோர்டியன் (Perigordian) காலங்களைச் சார்ந்தன எனக் கண்டறியப்பட்டன. முதலில் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிடப்பட்ட இக்குகை ஓவியங்களில் பூஞ்சை படரத் தொடங்கியது. எனவே இக்குகை 1963-ஆம் ஆண்டு மூடப்பட்டது.