சிரைவழிச் சிறுநீரக வரைவு
ciraivaḻic ciṟunīraka varaivu
சிறுநீரகத்தின் பணிகளையும், நோய் நிலைகளையும் கண்டறியச் சிரைவழிச் சிறுநீரக வரைவு (intravenous pyelogram) முறை கையாளப்படுகிறது.
சிறுநீரகத்தின் பணிகளையும், நோய் நிலைகளையும் கண்டறியச் சிரைவழிச் சிறுநீரக வரைவு (intravenous pyelogram) முறை கையாளப்படுகிறது. கரிம அயோடின் கொண்ட மருந்தைச் சிரை வழியாகச் செலுத்தி, எக்ஸ் கதிர்ப் படங்கள் எடுத்தால், வேறு படுத்திக் காட்டும் ஊடக முறையால் (contrast media) சிறு நீரகங்கள், சிறு நீரகக் குழல்கள், சிறுநீர்ப் பை ஆகியவற்றின் நிழல்களைப் படங்களில் கண்டு நோய் முடிவு செய்வது எளிதாகிறது.
வேறுபடுத்திக் காட்டும் ஊடகத்தில் மெக்ளுமைன், சோடியம் தயோசல்ஃபேட்ஆகிய பொருள்கள் உள்ளன. சிரை வழியாகச் செலுத்தப்படும் போது, இவை மிகவும் தீங்கற்றவை. 40—60 மி.லி. நீர்மத்தைச் சிரை வழியே செலுத்தினால், சில நிமிடங்களில் சிறு நீரகத்தின் குழியிகள் (calyx) நன்றாகத் தெரிகின்றன. வயது வந்தவர்களிடம், நன்னிலைச் சிறு நீரகங்கள் 11—14 செ.மீ. நீளம் இருக்கும். வலச் சிறு நீரகத்திற்கும், இடச் சிறுநீரகத்திற்கும் இடையே 2 செ.மீ. வேறுபாடு உண்டு. நோய் நிலைகளில், சிறு நீரகத்தின் வடுக்களைக் காணலாம். சிறுநீரகக் கட்டிகள், சிறுநீரகப் பிறவி ஊனங்கள், சிறு நீரக மண்டலம் மற்றும் பல நோய்களை எக்ஸ் கதிர்ப் படங்கள் மூலம் கண்டறியலாம். பரவலான சிறு நீரக நோய் நிலையில், சிறு நீரகங்கள் சிறியவையாகக் காணப்படுகின்றன. சிறு நீரகத் தமனி இறுக்க நோயில், பாதிக்கப்பட்ட சிறு நீரகம் மிக வெண்மையாகத் தெரியும்.
முதல் 20 நிமிடங்களுக்குள் சிறு நீரக மண்டலத்தை முழுமையாகக் காணலாம். பொதுவாக, ஒவ்வொரு சிறு நீரகத்திலும். 2—4 பெரிய குழியிகளும், ஒவ்வொரு பெரிய குழியியிலும் 3—4 சிறிய குழியிகளும் காணப்படும். குழியிகள் மொட்டையாகத் தடித்து இருக்க, ஊடகப் பொருள் மெதுவாக வெளியேறினால், நாட்பட்ட சிறுநீரக அடைப்பு என முடிவு செய்யலாம். சிறு நீரக அடைப்பு பெருமளவில் இருந்தால், குழியி விரிவடைந்து காணப்படுகிறது. சிறு நீரகப் புறணி மெல்லியதாகக் காணப்படும்; குழியியில் வெள்ளை நிறம் தோன்றாது; இம்முறையில் சிறு நீரகக் காச நோயையும், சூம்பிய சிறு நீரக அழற்சியையும் முடிவு செய்யலாம். சிறு நீரகக் காச நோயில் கால்சியப் படிமங்களும், புண் குழிவுகளும் படத்தில் தெரியும். பல நீர்ப் பை நோயில் (polycystic disease), இரண்டு சிறு நீரகங்களும் வீங்கிக் காணப்படும். குழியின் அமைப்பு நீண்டு, சிலந்தி வலைப் பின்னல் போல் தோற்றமளிக்கும்.
சிரை வழிச் சிறுநீரக வரைபடம் வரையும் போதும், மெக்ளுமைனும், சோடியம் தயோசல்ஃபேட்டும் செலுத்தப்படும் போதும், ஒவ்வாமை ஏற்படலாம். அட்ரினலின் மற்றும் ஹிஸ்டமின் எதிர்ப் பொருள், ஹைட்ரோகார்ட்டிசோன், ஆக்சிஜன் போன்றவை ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆய்வில் பொதுவான சிக்கல்கள் எதுவும் தோன்றுவதில்லை. ஆய்வு முடிந்த அரை மணி நேரம் நோயாளி முழு ஓய்வில் இருக்க வேண்டும். இந்த ஒரே ஆய்வின் மூலம் சிறு நீரகம், சிறு நீரகக் குழல், சிறு நீர்ப் பை ஆகியவற்றின் நிலைகளைத் தெரிந்து கொள்ளலாம். குழியியில் ஒரு சிறு பகுதியில் சிரை வழிச் செலுத்தப்பட்ட மருந்து செல்லாமல் இருந்து, நிறைவில் குறைபாடு (filling defect) இருந்தால், கார்சினோமா, குருதிக் கட்டி, கல் போன்றவை இருக்கும் எனக் கருதலாம். —மு. கி. பழநியப்பன் நூலோதி. A.J. Davidson, Radiologic Diagnosis of Renal Parenchymal Disease, Saunders Company, Philadelphia, 1977; T.S Sherwood, Uro Radiology, Blackwell Company, London, 1960.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 270)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mb5csjt6/
தமிழ்“சிரைவழிச் சிறுநீரக வரைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mb5csjt6/APA
Oliyon Research. (2026). சிரைவழிச் சிறுநீரக வரைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mb5csjt6/MLA
"சிரைவழிச் சிறுநீரக வரைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/mb5csjt6/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment