கதர் நூலை நூற்கும் ஒரு பொறி, கையால் தக்கிளியில் நூல் நூற்பதற்கு மாறாகச் சர்க்காவினால் கதர்நூல் நூற்கும் முறையைக் காந்தியடிகள் போற்றினார். அதைத் திருத்தி வேகமாக நூல் நூற்கும் அமைப்பில் உருவாக்கப்பட்டது அம்பர் சர்க்கா. சர்வசேவா சங்கத்தின் பிரயோக சமிதி என்னும் நிறுவனம் இச்சர்க்காவை உருவாக்கியது. இதன் பாகங்கள் அனைத்தும் உலோகத்தாலானவை. ஆறு நூற்கண்டுகளை இப்பொறி இயக்கவல்லது. கோவையைச் சார்ந்த டெக்சுடூல் வணிகக் குழுவினர் இதை உற்பத்தி செய்கின்றனர். குசராத்து மாநிலம் இராசகோட்டிலும் அம்பர் சர்க்கா விலைக்குக் கிடைக்கின்றது. எட்டு மணி நேரம் இதில் நூல் நூற்றால் ஐந்து ரூபாய்க்குக் குறையாமல் கூலி கிட்டும். நம் நாட்டில் ஏறக்குறைய 250 மையங்களில், அம்பர் சர்க்காவினால் கதர் நூல் நூற்கிறார்கள்.