அழகன் குளம்
aḻakaṉ kuḷam
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள ஓர் ஊர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை ஓரத்தில் உள்ள ஓர் ஊர். இராமநாதபுரத்தில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் வைகை ஆறு வங்கக் கடலோடு கலக்கும் இடத்திற்கு அண்மையில் இந்த ஊர் உள்ளது. அழகன் குளத்திற்கு மேற்குப் பக்கத்தில் உள்ள ‘கோட்டைமேடு’ என்னும் பகுதியில் தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நடத்திய கள ஆய்வுகள், இங்குப் புதைந்திருக்கும் உரோமானியக் குடியிருப்புகள் குறித்த செய்திகளை வெளிப்படுத்தியுள்ளன. இங்குள்ள கோட்டை மேட்டின் தென்பகுதி ஓரளவு சமன் செய்யப்பட்டு அதில், ஓர் உயர்நிலைப் பள்ளி கட்டப்பட்டுள்ளது. இதனால், சிதறிய தொல் பொருள்கள் மிகுந்த அளவில் இங்குக் காணக் கிடக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டிற்கும் உரோமானிய நாட்டிற்கும் இடையே நிலவி வந்த வாணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்பினை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த சான்றுகளைத் தந்துள்ள அரிக்கமேட்டிற்கு இணையான சான்றுகளை அழகன் குளமும் தருகிறது. சங்க இலக்கியத்தில் குறிக்கப் பெறும் யவனர்கள் என்று அழைக்கப்பட்ட உரோமானிய நாட்டினர், அந்நாளில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குடியிருந்தனர். அவற்றுள் அரிக்கமேடு, அழகன் குளம் இரண்டும் மிகச் சிறந்த இடத்தைப் பெறுகின்றன. ‘அழகன்’ என்ற அரசன் வாழ்ந்த பகுதியானதால் இவ்வூர் ‘அழகன் குளம்’ என்று பிற்காலத்தில் சொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
உயர்நிலைப் பள்ளிக் கட்டடத்திற்கு எனச் சமன் செய்யப்பட்ட பகுதிகளில் தொன்மையான கட்டடப் பகுதிகள் சில வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்குப் 38 × 23 × 6 செ.மீ. அளவுள்ள செங்கற்கள் பெருமளவில் கிடைக்கின்றன. இங்கு நடத்தப்பெற்ற மேற்பரப்புக் கள ஆய்வின்போது உரோமானிய நாட்டின் சிறப்பான மட்பாண்ட ஓடுகளான அரிட்டைன், ரௌலட்டட் போன்றவை பெருமளவில் கிடைத்துள்ளன. இவையன்றி, அந்நாட்டிலிருந்து மது கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆம்போரா எனப்படும் கூர் முனை மதுக் குடங்களும் கிடைத்துள்ளன. கோட்டைமேடு பகுதியை ஒட்டிக் கடற்கரை ஓரம் உள்ள பகுதியில் பெருமளவில் சீனத்துப் பானை ஓடுகள் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பகுதியில் அளவிறந்த பெரிய சங்குகளும் வளையலுக்காக அறுக்கப்பட்ட சங்குகளும் சங்கு வளையல்களும் மதிப்பு வாய்ந்த பல வண்ண மணிகள், கற்கள் போன்றவைகளும் காணப்படுகின்றன.
இப்பகுதியில் மண்ணைத் தோண்டியபோதும் மழை நீரால் ஏற்பட்ட அரிப்பின் போதும் கிடைத்த தங்கக் காசுகளைப் பெருமளவில் இவ்வூர் மக்கள் சேர்ந்துள்ளனர். இலங்கை அரசன் விக்கிரம பாகு- வின் செப்புக்காசு, முதலாம் இராசராச சோழனின் இலங்கைக் காசுகள், விசயநகரக் காசுகள், கி.பி. 1735 முதல் 1791 வரையிலான தென்மார்க்கு (Denmark) நாட்டுக் காசுகள் ஆகியவை இங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதியான பொருள்களுள் சங்கு வளையல்கள் சிறப்பான இடம் பெறுகின்றன. சங்க காலப் பாண்டியரின் துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த கொற்கை, சங்கு வளையல்களின் ஏற்றுமதியில் சிறப்பிடம் பெற்றுத் திகழ்ந்துள்ளது. அழகன் குளம் கொற்கைக்கு அருகிலேயே உள்ளதால் இப்பகுதியிலும் சங்கு வளையல் செய்யும் தொழிற்கூடம் இருந்திருக்க வேண்டும்.
இங்குள்ள கடற்கரை, தோணிகள் வந்து தங்குவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. இங்குப் பெரும்பாலான நாட்களில் கடலில் அலை ஏதுமின்றி அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றங்கரை என்ற ஊருக்கருகில் வைகை ஆறு கடலோடு கலக்கிறது. இதனால் உள்நாட்டுப் பகுதிகளுடன் படகுப் போக்குவரத்து நடத்தவும் இந்த இடம் ஏற்றதாகத் திகழ்ந்திருக்க வேண்டுமெனத் தெரிகிறது. எனவே அழகன் குளம் சங்க காலம் முதல் தொடர்ந்து சிறப்பான இடத்தைப் பெற்று வந்துள்ள ஊராகும்.பொ.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 921)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9vbrfwf/
தமிழ்“அழகன் குளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m9vbrfwf/APA
Oliyon Research. (2026). அழகன் குளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9vbrfwf/MLA
"அழகன் குளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m9vbrfwf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment