கி.பி. 9–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வாணர் குல மன்னர். இவர் கங்க நாடு, புறமலை நாடு, திருக்கோவலூர் நாடு, கோவூர் நாடு, தாயனூர் நாடு, புற்ற நாடு முதலான பகுதிகளை ஆண்டு வந்தார். கி.பி. 9–ஆம் நூற்றாண்டளவில் வாணர்–நுளம்பர் பகைமை மிக்கது. இருப்பினும் நுளம்ப வேந்தர் ஒருவர் இவருடன் நட்புறவுடன் திருமண உறவும் கொண்டிருந்தார். சிலகாலம் சென்றபின் நுளம்பன், வாணன்மீது வஞ்சகமாகப் போர் தொடுத்தான். போரில் அரிமிதைய மாவலி வாணராயர் கொல்லப்பட்டார். நுளம்பன் தகடூர்ப் பகுதி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேந்தனானான். வாண அரசனின் உண்மை ஊழியரான ‘சக்கரக் குட்டியார்’ தகடூர் மீது படையெடுத்துச் சென்று நுளம்பனை வென்று, வாணரின் அரசினை மீண்டும் கைப்பற்றினார்.ம.இரா.