உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு
ucuttināv, timittiri peṭarōviccu
சோவியத்து உருசியாவின் பாதுகாப்பு அமைச்சராயிருந்தவர்; அரசியல்வாதி, இவர் 30–10–1908-இல் உருசியாவிலுள்ள கைபாசேவ் (Kuybyshev) என்னும் ஊரில் பிறந்தார்.
சோவியத்து உருசியாவின் பாதுகாப்பு அமைச்சராயிருந்தவர்; அரசியல்வாதி, இவர் 30–10–1908-இல் உருசியாவிலுள்ள கைபாசேவ் (Kuybyshev) என்னும் ஊரில் பிறந்தார். இந்நகரை முற்காலத்தில் சமரா (Samara) என்று குறித்தனர். உசுத்திநாவ் (Ustinov, Dmitry Fedorovich) 1976–இலிருந்து பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார். சோவியத்து நாட்டின் உயர்நிலை ஆட்சிக் குழுவில் செல்வாக்கு மிக்க உறுப்பினர்களுள் உகத்திநாவும் ஒருவர். இவர் பொறியாளராகப் பணியைத் தொடங்கியவர். இரண்டாம் உலகப் போரின்போது சோவியத்துப் பாதுகாப்புத் தொடர்பான தொழில்களைப் பெருமளவிற்குப் பெருக்கக் காரணமாயிருந்தவர்.
உசுத்திநாவின் தந்தையார் ஒரு தொழிலாளி. உசுத்திநாவ் 1934–ஆம் ஆண்டில் இலெனின்கிராடு (Leningrad) நகரிலிருந்த இராணுவப் பொறித்துறை நிலையத்தில் படித்துப் பட்டம் பெற்றார். கட்டுமானப் பணிப் பொறியாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர், இலெனின்கிராடு போர்க் கருவிகள் உற்பத்தி செய்யும் ஆலையின் இயக்குநராகப் பொறுப்பேற்றார். செருமனி 1941–ஆம் ஆண்டு சூன் மாதத்தில் சோவியத்து ஒன்றியத்தைத் தாக்கிய போது அந்நாட்டின் தலைவராயிருந்த இசுடாலின் (Stalin) மக்கள் போர்க்கருவித் துறையின் உணவுப் பொறுப்பதிகாரியாக இவரை (1946–53) அமர்த்தினார். இப்பதவி அமைச்சர் பதவிக்கு இணையானது. இப்பதவி போர்க்கருவிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கியது. பின்னர், 1953 முதல் 1957 வரை இவர் பாதுகாப்புத் தொழிற்சாலைகளின் அமைச்சராக்கப்பட்டார். இப்பொறுப்பு வகித்த காலத்தில் உசுத்திநாவ் சோவியத்துப் படைக்கல உற்பத்தித் தொழிற்சாலைகளை ஊரல் மலைகளுக்கு அப்பால் கொண்டு சென்றார். அக்காலத்தில் செருமானியப் படைகள் விரைந்து சோவியத்து நாட்டில் முன்னேறி வந்தன. செருமானியர்களின் கைகளுக்கு இத்தொழிற்சாலைகள் இலக்காகக் கூடாதென்னும் நோக்குடன்தான் இப்பணியை இவர் மேற்கொண்டார். போருக்குப் பின்னர்ச் சோவியத்துப் படைகளை இன்றைய அளவிற்கு உயர்த்திய பெருமைக்கும் உசுத்திநாவே காரணமாவார். சோவியத்து நாட்டின் மத்திய குழுவின் முழு உறுப்பினராக இவர் 1952–இலிருந்து பதவி வகித்தார். நிகிட்டா குருச்சேவ் (Nikita Khrushchev) இவரைத் துணை முதல்வராக 1957–இல் நியமித்து, போர்க்கருவிகள் தொழிற்சாலைகளின் அனைத்துப் பொறுப்புகளையும் கவனிக்குமாறு பணித்தார். தேசிய பொருளாதார உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் முதல் துணை முதல்வராகவும் இவர் 1963–இல் ஆக்கப்பெற்றார். பொதுக்குழுவின் செயலாளராக இவர் 1965–இல் பொறுப்பேற்ற போது இராணுவம், பாதுகாப்புத் துறைத் தொடர்பான தொழிற்சாலைகள், பாதுகாப்பு உறுப்புகள் போன்ற துறைகளின் பொறுப்பேற்றார். போலிட்பீரோவின் (Politburo) உறுப்பினராகவும் ஆனார். இவர் உருசியாவின் ஒற்றர் படையின் தலைவரான யூரி ஆந்திரப்போவ் (Yuri Andropav) என்பாருடன் இணைந்து பணியாற்றினார். பாதுகாப்பு அமைச்சராயிருந்த மார்சல் ஆந்திரி கிராக்கோ (Marshal Andrey Grechko) என்பார் 1976–ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் காலமானார். அவருக்குப் பின்னர் உசுத்திநாவ் பாதுகாப்பு அமைச்சரானார். அதே சமயத்தில் இவர் போலிட்பீரோவின் முழு உறுப்பினராகவும், சோவியத்து ஒன்றியத்தின் பெரும் படைத்தளபதியாகவும் (Marshal) நியமிக்கப்பெற்றார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் சோவியத்து ஒன்றியத்துக்குமிடையே 1970–ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஆயுதக் குறைப்பு உரையாடல்களின் போது, உசுத்திநாவ் பின்னணியில் இருந்துகொண்டு சீரிய தொண்டாற்றியதன் விளைவாக 1979–இல் ஆசுத்திரிய நாட்டின் தலைநகரான வியன்னா உச்சி மாநாட்டில் இவரும் பங்கு கொண்டார். இம்மாநாட்டில்தான் இரண்டாம் இரண்டாம் படைத்திறக் கட்டுப்பாட்டுக் குழுத் தொடர்பான ஒப்பந்தம் இவ்விரு நாடுகளுக்குமிடையே (Strategic Arms Limitation Talks-SALT II) கையெழுத்தாயிற்று. சோவியத்து ஒன்றியத்தின் சார்பாக இலியோனிடு பிரச்நேவும் (Leonid Brezhnev) அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பாகச் சிம்மி கார்ட்டரும் (Jimmy Carter) இம்மாநாட்டில் கலந்துக்கொண்டனர். பிரச்நேவ் காலமானதும், அவரை அடுத்துத் தலைவராக வரவேண்டுமென ஆந்திரப்போவின் பெயரை முன் மொழிந்தவரும் உசுத்திநாவ் தான். உசுத்திநாவ் 27–9–1984–இல் பொது நிகழ்ச்சியில் பங்கு கொண்டபோது ஆந்திரப்போவை அடுத்துத் தலைவரான கான்சுடண்டின் செரனன்கோ (Konstantin Chernenko) என்பாருக்கு இலெனின் விருதினை வழங்கியவரும் இவரே. உசுத்திநாவுக்கும் இவ்விருது இருமுறை வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கதாகும்.
சோவியத்து உருசியாவின் வீரராகக் கருதப்பட்ட இவர் 20–12–1984–இல் மாசுக்கோ மாநகரில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 745)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m9dq3st7/
தமிழ்“உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m9dq3st7/APA
Oliyon Research. (2026). உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m9dq3st7/MLA
"உசுத்திநாவ், திமித்திரி பெடரோவிச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m9dq3st7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment