வட எத்தியோப்பியா நாட்டிலுள்ள மாநிலம். இதன் பரப்பு 1,24,320 ச.கி.மீ. செங்கடலையொட்டியுள்ள வடகிழக்கு ஆப்பிரிக்காவில இரிட்டிரியா (Eritrea) அமைந்துள்ளது. பண்டைக்கால ஆக்சும் என்னும் எத்தியோப்பிய அரசின் பகுதியாக, கி.பி. 7–ஆம் நூற்றாண்டு வரை இரிட்டிரியா இருந்தது. பின்னர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை எத்தியோப்பியாவின் நேர் பார்வையில் இடையிடையே கட்டுப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு உதுமானியப் பேரரசு இரிட்டிரியாவின் பெரும்பாலான கடற்கரைப் பகுதியைக் கவர்ந்து கொண்டது. இரிட்டிரியாவை கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தன்னாட்சியின் கீழ் வைத்துக் கொள்ளும் பொருட்டு எத்தியோப்பியா எகிப்துடனும், இத்தாலியுடனும், மோதியது. இத்தாலி கி.பி. 1880–ஆம் ஆண்டளவில் இதன் கடற்கரைப் பகுதிகளைத் தனக்குரியதாக்கியது. பின் கி.பி. 1890–ஆம் ஆண்டளவில் இரிட்ரியாவைக் குடியேற்றப் பகுதி போல் கருதுமளவு அதன் பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. எத்தியோப்பியாவை 1935–36–ஆம் ஆண்டுகளில் இத்தாலி வெல்வதற்கு இக்குடியேற்றப் பகுதியே அடித்தளமாக அமைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது கி.பி. 1941–ஆம் ஆண்டில் ஆங்கிலேயேர் இரிட்டிரியாவைக் கைப்பற்றிக் கொண்டனர். போருக்குப் பின்னரும் இரட்டிரியா ஆங்கிலேயர் கைவசமே இருந்து 1949–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐ.நா.வின் அறக்கட்டளைப் பகுதியாக நிருவகிக்கப்பட்டது. இரட்டிரியா இரட்டிரியா 1952–ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவின் கூட்டாட்சிப் பகுதியாயிற்று. இரிட்டிரியாவின் பேரவை மன்றம் கி.பி. 1869–ஆம் ஆண்டில் கூடியபோது கூட்டாட்சி முறைக்கு எதிராக வாக்களித்து இரிட்டிரியாவை எத்தியோப்பியாவுடன் இணைத்துவிட்டது. இவ்விணைப்பை எதிர்த்தவர்கள் 1962–ஆம் ஆண்டுக்குப் பின்னர் எத்தியோப்பியாவுடன் கொரில்லாப் போரில் ஈடுபட்டுத் தம் எதிர்ப்பைக் காட்டினார்கள். இதன் மக்கள் தொகை 22,95,800 (1978). இரிட்டிரியாவின் தலைநகர் அசுமாரா (Asmara) என்பதாகும்.