பட்டாணி
paṭṭāṇi
இதன் தாவரவியல் பெயர் பைசம் சட்டைவம் (Pisum sativum) என்பதாகும்.
இதன் தாவரவியல் பெயர் பைசம் சட்டைவம் (Pisum sativum) என்பதாகும். இதில் வயல் பட்டாணி, தோட்டப் பட்டாணி என இரு வகையுண்டு. வயல் பட்டாணிக்குப் பைசம் சட்டைவம் வகை ஆர்வென்ஸ் (Pisum sativum var arvense) என்றும், தோட்டப் பட்டாணிக்குப் பைசம் சட்டைவம் வகை ஹார்ட்டென்ஸ் (Pisum sativum var hortense) என்றும், தாவரப் பெயர்கள் உண்டு. இத்தாவரம் ஃபபேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
தொன்று தொட்டுப் பயிரிடப் பட்டு வரும் பயிர்களில் பட்டாணியும் ஒன்று. பட்டாணியின் தாயகம், தென் மேற்கு ஆசியாவாகும். இப்பயிர் முதன் முதலில், ஐரோப்பாவிலும் பின்பு உலகின் ஏனைய பகுதிகளிலும் சாகுபடி செய்யப் பட்டது. வெப்ப நாடுகளின் மலைப் பகுதிகளிலும் இது பயிரிடப் படுகிறது. இந்தியாவில், இமாலய மலைப் பகுதிகளில் முதன் முதலில் பட்டாணி பயிரிடப் பட்டது.
அமைப்பு. இது ஒரு பருவச் சிறிய ஏறு செடியாகும். பட்டாணியின் தண்டு நிமிர்ந்து நிற்க இயலாத தன்மை கொண்டது. பற்றுக் கம்பிகளின் வாயிலாக, இச்செடி படர்ந்து மேலேறி வளரும். இதில் குட்டை, நடுத்தர உயரம், உயரம் என மூவகை உண்டு. பட்டாணியின் ஆணி வேர் நன்றாக வளர்ந்து, 1000 செ.மீ. ஆழம் வரை செல்லும். இதிலிருந்து பல பக்க வேர்கள் தோன்றும். சில சமயங்களில், உருண்டையான வேர் முடிச்சுகளை இளஞ் செடியின் ஆணி வேர்களில் காணலாம். தண்டு, கோண வடிவிலோ, உருண்டையாகவோ காணப் படும். மாற்றடுக்கில் அமைந்துள்ள இலைகள், இறகுக் கூட்டிலை வகையாகும். இதில் 1–3 இரட்டைச் சிற்றிலைகள் இருக்கும். இலைக் காம்பின் நுனி நோக்கி அமைந்துள்ள சிற்றிலைகள் பற்றுக் கம்பிகளாக மாறியிருக்கும். முட்டை வடிவச் சிற்றிலைகள் பச்சையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பளபளப்பில்லாத மஞ்சள் இலை வகையும் காணப் படும். இலையடிச் செதில்கள் பெருத்து இலை போன்றிருக்கும். இதன் அடிப் பகுதி அரிதாகக் கருநீல நிறமாகயிருக்கிறது. இலைக் கோணத்தில் உண்டாகியுள்ள மலர்கள் அவரைப் பூப் போன்றிருக்கும். கண் கவரும் இம்மலர்கள் 2–5 எனத் துணர் (raceme) மஞ்சரியில் காணப் படுகின்றன.
சாகுபடி முறை. பட்டாணி குளிர்ச்சியான பருவத்தில் செழித்து வளர்கிறது. குளிர் பருவ அவரை வகையை விடப் பட்டாணி மிகக் குறைந்த வெப்ப அளவைக் குறிப்பாக, இளஞ் செடிப் பருவத்தில் தாங்கி வளரக் கூடியது. ஆனால், மிகவும் கடுமையான உறை பனி தொடர்ந்து நீடித்தால், செடிகளால் அதனைத் தாங்க இயலாது. பூக்கும் பருவத்தில் உறை பனி இருந்தால், காய்கள் குறைவாக உற்பத்தியாகும். காய்கள் உருமாறியும், விதைகள் நிறம் மாறியும் இருக்கும். இதே போல் 27°Cக்கு மேலும் வளர்ச்சிப் பருவம் குறுகி விடும். பயிரின் வளர்ச்சியின் போதும், சராசரி வெப்ப நிலை 13–18°C இருந்தால், சிறந்த விளைச்சலைத் தரும். வெப்ப மண்டலங்களில் 5 மாதம் குளிர் காலம் நிலவும் பகுதிகளில், பட்டாணியை வளர்க்கலாம். விதை முளைப்பதற்குத் தேவையான குறைந்த அளவு வெப்ப நிலை 4°C அதிக அளவு வெப்ப நிலை 24°C ஆகும். சீராக மழை பெய்யும் இடங்களும், பட்டாணி விளைவிற்கு மிகவும் ஏற்றவை.
பட்டாணி 2.5 கி.மீ. உயரமுள்ள மலைப் பகுதிகளில் நன்கு விளையும். இதைப் பல விதமான மண் வகைகளிலும் பயிர் செய்யலாம். ஆனால், நிலத்தில் போதிய வடிகால் வசதி இருத்தல் வேண்டும். களிச் சேற்று வண்டல், மணல் கலந்த களிச் சேற்று வண்டல், களி மண் நிலங்கள் ஆகியன பட்டாணிச் சாகுபடிக்கு ஏற்றவை.
பொதுவாக அமிலத் தன்மை வாய்ந்த நிலங்களில் குறிப்பாக, கார–அமில நிலை 5.5க்குக் குறைவான உள்ள நிலங்களில் இது நன்கு வளராது. பட்டாணியின் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ற கார–அமில நிலை 5.5–6.5 ஆகும். இதை விதைப்பதற்கு முன்பு, நிலத்தை நன்கு பண்படுத்தல் வேண்டும். நிலத்தின் மேற்பரப்பிலிருக்கும் மண் கட்டிகளை உடைத்துத் தூளாக்க வேண்டும். வட இந்தியச் சம வெளிப் பகுதிகளில், செப்டம்பர்–நவம்பரில் பட்டாணி விதைக்கப் படுகிறது. இது மலைப் பகுதிகளில், ஏப்ரல்–மே வரை விதைக்கப் படுகிறது. பொதுவாக, விதைகளை ஓரிரு ஆண்டுகளுக்கு முளைப்புத் திறன் கெடாமல், சேமித்து வைத்திருக்கலாம். நோயில்லாத விதைகளைத் தேர்ந்தெடுத்து, விதைக்க வேண்டும். விதையுடன் கிலோவிற்கு 2 கிராம் வீதம் திராம் அல்லது கேப்டான் மருந்தைக் கலந்து கொள்ள வேண்டும். பின்பு, விதைகளுடன் ரைசோபிய நுண்ணுயிரிகளைக் கலந்து விதைக்க, விளைச்சல் கூடும். விதைகள் தரைக் கீழ் முளைத்தல் (hypogeal germination) முறையில் முளைக்கும். இந்தியாவில் கோதுமை அல்லது பார்லி போன்ற பயிருக்கு முன்னதாக, இது பயிரிடப் படுகிறது. தானியப் பயிர்களுடன் கலப்பாகவும், சாகுபடி செய்யப் படுகிறது. பட்டாணிச் செடிக்கு, ஹெக்டேருக்கு 25 டன் தொழு உரம், 25 கி.கி, தழைச் சத்து, 70 கி.கி. மணிச் சத்து, 50 கி.கி. சாம்பல் சத்து உரங்கள் அடியுரமாக இடப் படுகின்றன.
தமிழ்நாட்டில் மலைப் பகுதியில் பயிராகும் பட்டாணிக்கு, அடியுரமாக 15டன் தொழு உரம், 90 கி.கி. தழைச் சத்து, 125 கி.கி. மணிச் சத்து, 100 கி.கி. சாம்பல் சத்து எனப் பரிந்துரைக்கப் படுகிறது. மேலுரமாக விதைத்த 20ஆம் நாள் 90 கி.கி. தழைச் சத்து இடப் படுகிறது. சம வெளியில் பயிராகும் பட்டாணிப் பயிருக்கு 12.5 டன் தொழு உரம், 50 கி.கி. தழைச் சத்து, 60 கி.கி. மணிச் சத்து, 30 கி.கி. சாம்பல் சத்து இடப் படும். களர் நிலத்தில் சாகுபடி செய்யப் படும் பட்டாணியில், மாங்கனீஸ் பற்றாக்குறை உண்டாவதற்கு வாய்ப்பு உண்டு. இச்சத்துக் குறைவால், விதைக் கருமை நோய் (marsh spot) உண்டாகும். இச்சத்துப் பற்றாக் குறையினைப் போக்கிடுவதற்கு, ஹெக்டேருக்கு 16 கி.கி. மாங்கனீஸ் சல்ஃபேட் உப்பை மண்ணில் இட வேண்டும். விதைகள் ஒழுங்காக முளைப்பதற்கு, விதைக்கும் முன் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். விதைக்கும் போது, நிலத்தில் போதுமான ஈரம் இராவிடில், விதைத்த பின் சிறிதளவு நீரைப் பாய்ச்ச வேண்டும். இதற்குப் பின் வறட்சியான காலத்தில் 10–15 நாள்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
நிலத்தில் அவ்வப்போது தோன்றும் களைகளை அகற்றி, அழிக்க வேண்டும். குறிப்பாக, இளம் பருவத்தில் களைகளில் லாமலிருத்தல் செடி நன்கு வளர்வதற்கு உதவும். உலர்ந்த பட்டாணியைப் பெரும் பரப்பில் உற்பத்தி செய்யும் போது, டினோசெப் அம்மோனியம் (dinoseab am monium) என்னும் களைக் கொல்லியைப் பயன் படுத்தலாம். வயல் பட்டாணிக்கு விதைத்தது முதற்கொண்டு அறுவடை வரையிலான காலம் அல்லது பயிரிடப் பட்ட வகை, விதைத்த பருவம், வளர்ச்சியின் போது நிலவுகின்ற வானிலைக் கூறுகள் ஆகியவற்றைப் பொறுத்து 60–200 நாள்கள் இருக்கும். பச்சைப் பட்டாணி அல்லது காய்களுக்காகச் சாகுபடி செய்யும் போது, 55–84 நாள்களில் அறுவடை செய்யலாம். தீவனத்திற்காகச் சாகுபடி செய்தால், ஏறக் குறைய 75 நாள்களில் காய்கள் உண்டானதும், அறுவடை செய்யப் படுகிறது. உலர்ந்த பட்டாணிக்காகச் சாகுபடி செய்தால், செடியின் அடிப் பகுதியிலுள்ள காய்கள் நெற்றாகிப் பட்டாணித் தானியம் உறுதியடைந்ததும், அறுவடை செய்ய வேண்டும். இச்சமயத்தில், இலைகள் மஞ்சளாகி உதிர்ந்து கொண்டே வருவது குறிப்பிடத் தக்கது. உரிய வேளையில் அறுவடை செய்யாமலிருந்தால், பட்டாணி நிற மாற்றமடைவதுடன் நொறுங்கி விடவும் செய்யும். செடிகளை அறுத்துக் குச்சியால் அடித்துத் தூய்மை செய்து, விதைகளைத் தனித்தெடுப்பர். முன்னேறிய நாடுகளில், அறுவடை முதல் தானியங்களைத் தொகுப்பது வரையிலான பணிகளுக்கு எந்திரங்கள் பயன் படுகின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> பூச்சிகளும், நோய்களும். பட்டாணியின் விதைகளைச் சேமித்து வைத்திருக்கும் போதும், பட்டாணிச் செடிகளை நிலத்தில் பயிரிடப் பட்டிருக்கும் போதும், பல்வேறு பூச்சிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பட்டாணி அசுவினியான அசிர்தோசைஃபர்ம் (Acyrthosiphum pisum) பைசம் பல நாடுகளில் பேரிழப்பை ஏற்படுத்துகிறது. இது, செடிகளின் சாற்றை உறிஞ்சிக் குட்டையாக்கும். மேலும், இப்பூச்சி 25 வகைக்கு மேற்பட்ட நச்சுயிரிகளைப் பரப்புகிறது. 40% நிக்கோட்டின் சல்ஃபேட் தெளித்தோ, 0.05% மாலத்தியான் அல்லது டைகுளோர்வாஸ் பூச்சி கொல்லி மருந்தைத் தெளித்தோ, கட்டுப் படுத்துவது சிறந்ததாகும். பட்டாணி இராப் பூச்சியான லேஸ் பெரிசா நைக்ரிகானா (Laspeyresia nigricana) பட்டாணியில் அழிவு உண்டாக்கும். அழிவுற்ற விதைகளில், பூசண வளர்ச்சி உண்டாகி, ஏனைய விதைகளையும் அழுகச் செய்யும். முன் விதைப்பு, ஆசில்ஃபாஸ் மெத்தில், டெட்ரா குளோர்வின்ஃபால் என்னும் பூச்சிக் கொல்லிகளும் சிறந்த பூச்சிக் கட்டுப்பாட்டைத் தருகின்றன. பட்டாணிக் கூட்டு வண்டுகளான சைட்டோனா (sitona) புருகஸ் பைசோரம் முதலியவை (Bruchus pisorum) விதைகளைத் தின்று, பேரிழப்பை ஏற்படுத்துகின்றன. 1% தொட்டினால் அல்லது 10% DDT மருந்தைச் செடி பூத்திருக்கும் போது, தூவி இதனைக் கட்டுப் படுத்தலாம்.
ஹீலியாதிஸ் ஆர்மிஜெரா (Heliothis armigera) என்னும் காய்ப் புழுக்கள் இலையையும், பருப்புகளையும் தின்று அழிக்கின்றன. இவற்றைக் கட்டுப் படுத்த மோனோகுரோட்டோஃபாஸ் அல்லது கார்பரில் நனையும் தூள் மருந்தைச் செடிகளின் மீது தெளிக்கலாம். காய்த் துளைப்பானான எட்டியெல்லா சிங்கிநெல்லா (Etiella zinckenella) புழுவை 4% கார்பரில் அல்லது எண்டோசல்ஃபான் தூளைத் தூவிக் கட்டுப் படுத்தலாம். இலைப் பேன்கள் (Caliothrips indicus) இலைகளின் நுனிப் பகுதித் திசுக்களைச் சுரண்டிச் சாற்றை உறிஞ்சி, வெளுப்பான தோற்றத்தைத் தரும். கார்பரில் 4% தூவும் தூளைத் தூவியோ, 0.05% மாலத்தியான் மருந்தைத் தெளித்தோ, இதனைக் கட்டுப் படுத்தலாம். இலைத் துளைப்பான் (Phytomyza atricornis) புழுக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று, இலைகளைத் துளைத்து, அவற்றுள் கூட்டுப் புழுக்களாகின்றன. பாதிக்கப்பட்ட இலைகள் சுருண்டும், காய்ந்தும் விடுகின்றன. இவற்றை 0.05% மோனோகுரோட்டோஃபாஸ் அல்லது 0.03% டைமெத்தோயேட் அல்லது மெத்தில் டெமெட்டான் அல்லது <!---- Words Repeated ----> 0.01% ஃபாஸ்பமிடான் மருந்தைத் தெளித்துக் கட்டுப் படுத்தலாம். ஹெட்டிரோடெரா கோட்டிங்கியானா (Heterodera goetingiana) என்னும் நார்ப் புழு, வேர்களைத் தாக்கிச் செடி வளர்ச்சியைப் பாதிக்கும். செடி குட்டையாகவும், மஞ்சளாகியும் இருக்கும். காய்கள் உண்டாகு முன், செடி சில சமயங்களில், காய்ந்தும் விடும்.
பட்டாணியில் தோன்றும் நோய்களுள், இலைக் கருகல், வேரழுகல், அடிச் சாம்பல், சாம்பல் நோய், பாக்டீரியக் கருகல் முதலியவை குறிப்பிடத் தக்கவை. ஆஸ்கோகைட்டா (ascochyta) சிற்றினங்கள், பட்டாணித் தண்டிலும், காய்களிலும், இலைகளிலும், எண்ணற்ற, சிறிய, ஒழுங்கற்ற வடிவமுடைய, கருஞ்சிவப்பு–கறுப்பு நிறப் புள்ளிகளை உண்டாக்குகின்றன. நோயில்லாத விதைகளை விதைத்தும், நோயுற்ற செடிப் பகுதிகளை அவ்வப்போது அகற்றியும், மூன்றாண்டுப் பயிர்ச் சுழற்சியைக் கடைப் பிடித்தும், இவ்வகை நோய்ப் பூசணங்களைக் கட்டுப் படுத்தலாம். வேரழுகல் நோயை, அஃபானோமைசஸ் பூட்டிசெஸ் (Aphanomyces euteidies) என்னும் மண்ணில் வாழும் பூசணம் உண்டாக்குகிறது.
குளிர் காலத்தில் மண்ணின் வெப்ப நிலை 22–29°C இருக்கும் போது, வேரழுகல் மிகுதியாக உண்டாகிறது. இந்த நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்ட வகைகளை உருவாக்க இயலவில்லை. பத்தாண்டுப் பயிர்ச் சுழற்சியைக் கடைப் பிடித்தும், இந்த நோயைக் கட்டுப் படுத்த இயலவில்லை. பியூசேரியம் ஆக்சிஸ்போரம் வகை பைசி (Fusarium oxysporum var pisi) என்னும் பூசணம் ஏற்படுத்தும் வாடல் நோயினால் இலைகள் மஞ்சளாகும்; செடி குட்டையாகும்; வேர்கள் கறுப்பாகி விடும். பின் பருவ விதைப்பும், எதிர்ப்புத் திறன் வகைகளைப் பயிரிடலும், விதைகளுடன் கிலோவிற்கு 4 கிராம் வீதம் திராம் மருந்து தெளித்தலும், ஓரளவுக்கு இதனைக் கட்டுப்படுத்தும்.
பயன் . பட்டாணிப் பயிரிலிருந்து, உலர்ந்த பட்டாணி தானியத்தையும், பச்சைப் பட்டாணியையும் பெறலாம். இவற்றைப் புரதம் செறிந்த உணவாகப் பயன் படுத்தலாம். உலர்ந்த பட்டாணியை வேக வைத்தோ, உப்புத் தெளித்து வறுத்தோ, உண்ணுவதும், மாவாக்கிப் பல வகை உணவுகளில் சேர்த்து உண்ணுவதும், இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது. மேலும், பட்டாணியை உடைத்துப் பருப்பாக்கி, உணவுப் பண்டங்கள் செய்வதும் உண்டு.
பச்சைப் பட்டாணிக் காயிலிருந்து, தானியத்தைத் தனித்தெடுத்து, மற்றக் காய்கறிகளுடன் சமைத்து உண்ண இறைச்சியில் மணத்தைத் தரும். குறிப்பாக, இதனைக் குருமா, காய்கறிச் சோறு (Vegetable rice) முதலியவற்றைத் தயாரிக்கப் பயன் படுத்தலாம். முன்னேறிய நாடுகளில், பச்சைப் பட்டாணியை டப்பாக்களில் அடைத்துச் சேமித்து வைத்திருந்து, பயன் படுத்துகின்றனர்.
பன்றிகளுக்குப் புரதத்தைத் தரும் உணவுப் பொருளாகப் பட்டாணியைத் தீவனத்தில் சேர்ப்பதுண்டு. ரொட்டி, குடி பானம் போன்றவற்றில் புரதச் செறிவிற்காகப் பட்டாணியைப் பயன் படுத்தும் ஆராய்ச்சி நடை பெற்று வருகிறது. இந்தியாவில் உயரமாக வளரும் உருண்டையான வெள்ளை அல்லது சாம்பல் நிற விதைகளுடைய வயல் பட்டாணியைத் பசுந் தீவனத்திற்காகவே வளர்ப்பர். —கோ. அர்ச்சுனன் துணை நூல். D.E. Kay, Food Legumes, Tropical Products Institute, London, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 440)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5bh9spz/
தமிழ்“பட்டாணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m5bh9spz/APA
Oliyon Research. (2026). பட்டாணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m5bh9spz/MLA
"பட்டாணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m5bh9spz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment