இராணா சங்கராமசிங்கு
irāṇā caṅkarāmaciṅku
இராணா சங்கராமசிங்கு என்பவர் மேவாரை ஆண்ட இராசபுத்திர மரபினைச் சார்ந்தவர்; மொகலாய மன்னரை எதிர்த்துப் போரிட்டவர்.
இராணா சங்கராமசிங்கு என்பவர் மேவாரை ஆண்ட இராசபுத்திர மரபினைச் சார்ந்தவர்; மொகலாய மன்னரை எதிர்த்துப் போரிட்டவர். இராணா சங்கர் என்றும் இவரைக் கூறுவர். இவர் இராணா கும்பாவின் பேரர்; தலைசிறந்த போர் வீரர். இராணாசங்கரின் தலைமையில் பெரும்பாலான இராசபுத்திர அரசுகள் இணைந்து இராசபுத்திர தேசிய மறுமலர்ச்சியால் திரண்டெழுந்தன. இந்துக்களின் தன்மானச் சின்னமாகத் தலைநிமிர்ந்து நின்ற ஒரே இராசபுத்திர அரசு மேவார்தான். அதன் அரசராக இருந்து பாபரை எதிர்த்த பெருமை இராணா சங்கராமசிங்கைச் சாரும்.
பாபர் கி.பி. 1526–ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பானிப்பட்டுப் போரில் ஆப்கானியரான இப்ராகிம் உலோடியைத் தோற்கடித்துத் தில்லியில் மொகலாயப் பேரரசை நிலைநாட்டியிருந்தார். பாபருக்கும் இராணா சங்கராமசிங்கிற்கும் கி.பி. 1527–ஆம் ஆண்டில் நடைபெற்ற போரைக் கன்வாப் போர் என்பர்.
இராணா சங்கராமசிங்கு பெரும் படையொன்றைத் திரட்டியிருந்தார். இவர் படையில் 120 குறுநில மன்னர்களும், 80,000 குதிரை வீரர்களும், 500 போர்யானைகளும் இருந்தனர். அதனுடன் மார்வார், ஆம்பர், குவாலியர், ஆசுமீரம், சந்தேரி அரசர்களும், இப்ராகிம் உலோடியின் இரண்டாம் மகனான சுல்தான் முகமது உலோடியும் இணைந்திருந்தனர். இராணா சங்கராமசிங்கு முகமது உலோடியைத் தில்லியின் சுல்தானாக ஏற்றுக்கொண்டிருந்தார். நாட்டுப்பற்று உணர்ச்சியால் தூண்டப்பெற்ற இராசபுத்திரர்கள் பாபரைப் போரில் சந்திக்க ஆயத்தமாயிருந்தனர். பாபரின் படை அளவில் மிகச் சிறியது. எனவே, இராணாவின் பெரும்படையைக் கண்ணுற்ற மொகலாயப் படைவீரர்கள் அச்சங் கொண்டனர். பாபருக்கு இப்போர் கடினமானதாகவே தோன்றியது. எனினும் படைவீரர்களை ஊக்குவித்துக் குடிக்க வைத்திருந்த சாராயத்தைக் கீழே கொட்டிவிட்டு, வீரமாகப் பேசி மொகலாயப் படைவீரர்களைப் போர் புரிய ஆயத்தமாக்கினார். மொகலாய வீரர்களும் பாபருக்குக் கட்டுப்பட்டு, திரு குர்–ஆன் மீது சபதமிட்டுப் போருக்கு ஆயத்தமானார்கள். இப்போர் கி.பி. 1527–ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 16–ஆம் நாள் ஆக்ராவிற்கு மேற்கில் அமைந்திருந்த கன்வா என்னும் சிற்றூரில் நடைபெற்றது. இராசபுத்திரர்கள் மிகுந்த தீரத்துடன் உறுதியாக நின்று போரிட்டனர். ஆனாலும், பாபர் பானிப்பட்டில் எவ்வாறு படையமைத்துப் போரிட்டாரோ அம்முறையை இப்போரிலும் கையாண்டு வெற்றிபெற்றார். இராசபுத்திரர்கள் தோற்றனர். தம் துணைவர்கள் சிலரின் உதவியோடு இராணா சங்கரும் தப்பியோடினார். இரண்டாண்டுக்குப் பின்னர் மனமொடிந்து கி.பி. 1526–ஆம் ஆண்டில் காலமானார். கன்வாப் போர் இந்திய வரலாற்றில் சிறப்புமிக்க போர்களுள் ஒன்றெனவும் வரலாற்றினை மாற்றியமைத்ததெனவும் கருதப்படுகிறது. இப்போரில் இராசபுத்திரர்கள் வெற்றி பெற்றிருந்தார்களேயானால் இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும் என்பது வரலாற்றறிஞர்களின் கருத்தாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 70)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4s8b2ze/
தமிழ்“இராணா சங்கராமசிங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4s8b2ze/APA
Oliyon Research. (2026). இராணா சங்கராமசிங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m4s8b2ze/MLA
"இராணா சங்கராமசிங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4s8b2ze/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment