அமைப்பு
amaippu
அமைப்பு என்பது பொருள் நிறைந்த மொழிக்கூறுகள் ஒன்றுசேர்ந்து ஒரு வடிவத்தை உருவாக்குவதனைக் குறிப்பிடுகிறது.
அமைப்பு என்பது பொருள் நிறைந்த மொழிக்கூறுகள் ஒன்றுசேர்ந்து ஒரு வடிவத்தை உருவாக்குவதனைக் குறிப்பிடுகிறது. அமைப்புகளை (Structures) மொழியின் முழுவடிவமாகவும் தனித் தனிக் கூறுகளாகவும் பகுத்தாராயலாம். மொழியியல் ஆய்வுகளில், ஒலியனியல் (Phonology), உருபனியல் (Morphology), தொடரியல் (Syntax), பொருளியல் (Semantics) எனப் பல்வேறு நிலைகளில் மொழியை ஆராய்கிறார்கள். சான்றாக, ‘அவன் மரத்தை வெட்டினான்’ எனும் வாக்கிய அமைப்பைப் பின்வருமாறு விளக்கலாம்.
தொடரியல் நிலை
இவ்வாக்கியத்தை முதலில் ‘எழுவாய் + பயனிலை’ எனப் பிரிக்கலாம். எழுவாயாக ஒரு பெயர்த் தொடர் வரும். இங்கு ‘அவன்’ என்னும் பெயர்ப் பதிலி எழுவாயாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பயனிலையில் ஒரு வேற்றுமைத் தொடரும், ஒரு வினைமுற்றும் இருக்கின்றன. வேற்றுமைத் தொடரில் ஒரு பெயரும் வேற்றுமையுருபும் இருக்கும். சில வேளைகளில் வேற்றுமை உருபு மறைந்து நின்றும் பொருள் தரும். இங்கு வேற்றுமைத் தொடர் செயப்படுபொருளாகப் பயன்பெறுகிறது. வினைச்சொல் காலத்தையும் பால், எண் இயைபையும் காட்டி, வினைமுற்று அமைப்பைப் பெறுகிறது. இங்கு, வெட்டினான் வினைமுற்றாகும். தொடரமைப்பை (1) எழுவாய் + பயனிலை; (2) எழுவாய் + செயப்படுபொருள் + வினைமுற்று எனப் பகுத்துக் காட்டலாம்.
உருபனியல் நிலை
இது சொற் பகுப்பாய்வாகும், பகுதி, விகுதி, சாரியை போன்ற கூறுகளை ஆராய்வது உருபனியல் நிலை. (சந்தி, விகாரம் புணரியல் நிலையில் வரும்).
செயப்படுபொருளாக வருகிற ‘மரத்தை’ப் பார்க்கலாம். ‘மரம்’ என்ற பகுதியோடு ‘ஐ’ என்ற இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்கும்போது ‘மரத்தை’ என ஆகிறது. தமிழில் பொதுவாக, வேற்றுமை உருபைச் சேர்க்கும்போது சொல்லின் ஈற்றொலி அல்லது ஈற்றெழுத்து அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. சான்றாக /–அம்–/ இல் முடியும் சொல்லோடு வேற்றுமை உருபு சேர்க்கும்போது அது /–த்த்–/ எனும் சாரியை பெறுகிறது. இதனுடன் சில வேளைகளில் /–இன்–/ சாரியையும் பெறும். /–இன்–/ சாரியையை விட்டுவிடலாம்.
‘மரம் + த்த் + இன் + ஐ = மரத்தினை’ இதை ‘மரத்தை’ என எழுதுவதே பெருவழக்கு. எனவே, வேற்றுமைத் தொடரமைப்பு, பெயர் + சாரியை + (சாரியை) + வேற்றுமை உருபு எனவரும்.
வினைமுற்று காலம், பால், எண் இயைபு காட்டும். வினைமுற்று அமைப்பு ‘வினையடி + காலம் + பால் எண் இயைபு’ என வரும். இங்கு வினையடியான ‘வெட்டு’டன் இறந்தகால விகுதியான /–இன்–/ சேர்க்கப்படுகிறது. எழுவாயும் விளையும் இயைபைக் காட்ட வேண்டும் என்பது தமிழில் விதியாகும். இதற்காகவே பால்எண் இயைபு விகுதி சேர்க்கப்படுகிறது. இங்கு எழுவாய் ‘அவன்’ ஆக இருப்பதால் /–ஆன்/ விகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இது ஆண்பால் ஒருமையைக் காட்டுகிறது.
ஒலியனியல் நிலை
சொற்கள் ஒலியன்களால் ஆனவை, சொற்களின் ‘அசை’ நிலையும் ஆராய்ச்சிக்குட்பட்டதே. சொல்லின் ஓர் ஒலி அதன் பொருளையே மாற்றிவிடலாம். சான்றாக, ‘படி’ எனும் சொல்லில் மெய்யெழுத்தான ‘ப்’க்குப் பதிலாக‘க்’ சேர்த்தால் அது ‘கடி’ என மாறுகிறது. இதிலிருந்து ஒலியன்கள் (Phonemes) பொருளை மாற்றும் ஆற்றலுடையவை எனத் தெளியலாம். மேற்சொன்ன வாக்கியத்தின் ஒலியன்களை /அ+வ்+அ+ன்/, /ம்+அ+ர்+அ+த்+த்+ஐ/, /வ்+எ+ட்+ட்+இ+ன்+ஆ+ன்/ எனக் குறிக்கலாம். வாக்கியத்தின் குரலிசையும் (Intonation) வினா, ஏவல் என வாக்கிய அமைப்பிற்கேற்றவாறு மாறும்.
பொருளியல் நிலை
வாக்கியம் பகு சொற்களையும் பகாச் சொற்களையும் கொண்டு அமையும். மேற்கண்ட வாக்கியத்தில் மூன்று சொற்கள் அமைந்துள்ளன. ‘அவன்’, ‘மரத்தை’, ‘வெட்டினான்’ எனும் இம்மூன்று சொற்களுக்கும் இடையிலுள்ள உறவைத் ‘தொடரியல் உறவு’ (Syntagmatic Relations) எனலாம். ‘அவன்’ எனும் சொல்லை, ‘நான், நீ, அவள்’ போன்றவற்றாலும் ‘மரத்தை’ என்பதைப் ‘பழத்தை காயை’ போன்றவற்றாலும், ‘வெட்டினான்’ என்பதை ‘அடித்தான்’, ‘வெட்டுகிறான்’, போன்றவற்றாலும் பதிலீடு செய்யலாம். இவ்வுறவு அடுக்கியல் உறவு (Paradigmatic Relation) எனப்படும்.
ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ஓர் அக அமைப்பும் (Deep Structure) ஒரு புற அமைப்பும் (Surface Structure) இருக்கின்றன என மாற்றிலக்கணம் கூறுகிறது.
அணுகுமுறை
ஒரு மொழியின் ஒலிகள், இலக்கணக் கூறுகள், சொற்கள் முதலியவற்றின் அமைப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அணுகுமுறை. ‘அமைப்பியல் அணுகுமுறை’ (Structural Approach). மொழியை விளக்க அதன் அமைப்பையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்னும் அணுகுமுறைக்கு வித்திட்டவர் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெர்டினன்ட்டு டி சசூர் ஆவர் (Fertinant de Saussure). இவர் தம் ஆய்வில் மொழிப்புறவியல்பு (Extrinsic Approach), மொழி அகவியல்பு (Intrinsic Approach) என்னும் இரு அணுகுமுறைகளைக் கையாண்டார். இவற்றுள், மொழி அகவியல்பே மொழியமைப்பை விளக்க அடிப்படையானது.
மொழியமைப்பியல் அணுகுமுறை ஒரு மொழியின் அமைப்பை விளக்கும்போது அம்மொழியின் வரலாற்றைத் தன் ஆய்வில் சேர்ப்பதில்லை, அதனால் வரலாற்றுமுறை மொழியியல் (Diachronic Linguistics), நிலைமுறை மொழியியல் (Synchronic Linguistics) என்று இரு பிரிவுகளாகக் கொண்டு ஆராயத் தொடங்கினர்.
சசூரின் அமைப்பியல் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டு, மொழியியலார் மூன்று குழுக்களாகப் பிரிந்தனர். முதலாவதாக என்.எஸ். துருபட்சுகோய், உரோமன் யாகோப்சன் ஆகியோரின் பிராக் குழு, செயற்பாட்டு மொழியியல் (Prague School–Functional Linguistics) எனும் பெயரில் ஆராயத் தொடங்கியது.
இரண்டாவதாக இலூயிசு எம்சுலேவின், கோபன் கேகன் குழு (Louis Hjelmslev), மொழிக்கணிதம் (Glosse matics) என்னும் பெயரில் ஆராயத் தொடங்கியது.
மூன்றாவதாக இலியனார்டு புளூம் பீல்டு, ஏரிசு ஆகியோரின் அமெரிக்கக் குழு, விளக்க மொழியியல் (Descriptive Linguistics) எனும் பெயரில் ஆராயத் தொடங்கியது.
இம்மூன்று குழுக்களிலும் அமெரிக்கக் குழுவே அமைப்பு மொழியியலைச் சிறப்பாக வளர்த்தது. எல்லா மொழிகளுக்கும் பொருந்துமாறு ஒரு பொதுவான அமைப்பு விளக்கச் செய்முறையையும், விதிமுறைகளையும் உருவாக்கியவர் புளூம் பீல்டு ஆவார். ஒலிகள் சேர்ந்து சொற்பொருளை உருவாக்கும் முறைகளை ஆராய்வதையே மொழியியல் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைப்பியல் அணுகுமுறையில் மொழியமைப்பு ஒன்றுதான் சிறப்புத் தன்மை பெறுகிறது. சொற்பொருளாய்வைத் தன் ஆய்வில் சேர்ப்பதில்லை. எனவே, மொழி விளக்கத்திற்கான செய்முறைகளையே அமைப்பியல் அணுகுமுறை எனக் கூறலாம். இச்செய்முறைகளே மொழியமைப்பை ஆராய்வதற்கும், தரவுகளிலிருந்து (Data) ஓர் இலக்கணத்தை உருவாக்குவதற்கும் உதவுகின்றன.
அமைப்பு மொழியியலின் முதன்மையான குறிக்கோள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில், இனத்தின் மொழியை விளக்குதல்; பேச்சு வழக்கை விளக்குதல்; சொற்களின் பொருளைவிட எளிதில் உணர்ந்து, நிறுவக்கூடிய மொழியின் அமைப்பை விளக்குதல்; முறையான புறவயம் சார்ந்த செய்முறைகளைக் கையாண்டு ஆராய்ந்து ஓர் இலக்கணத்தை உருவாக்குதல், வருமுறைக் கூறுகளால் (Distributions) விளக்குதல்; மொழியை ஒலியனியல், உருபனியல், தொடரியல் எனப் பல நிலைகளாகப் பிரித்து ஆராய்தல் ஆகியனவாகும்.
இக்குறிக்கோள்களைத் தெளிவுறுத்த ஒவ்வொரு நிலையிலும் வரும் மிகச் சிறிய கூறுகளையும் விளக்க வேண்டும். மேலும் அக்கூறுகளைப் பாகுபாடு செய்ய வெண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வருகிற கூறுகளை இணைக்கத் தேவையான விதிகளையும் தர வேண்டும்.
சான்று
ஒலியனியலின் சிறுகூறு ‘ஒலியன்கள்’, /க/ என்பது மூன்று சூழல்களில் மூன்று விதமாக ஒலிக்கப்படுகிறது. சொல்முதலிலும் (கப்பல்), மெய் இரட்டித்தலிலும் (பக்கம்), வல்லினமெய் மயக்கங்களிலும் (கடற்கரை) (k) என்றும்; மெல்லினத்துடன் வரும்போது, (தங்கம், கண்கள்) (g) என்றும்; சொல் நடுவில் தனி உயிர்மெய்யாக வரும்போது (பகல், அகம்) (h) என்றும் ஒலிக்கப்படுகிறது, எனவே, /க/ மூன்று ஒலிகளின் தொகுப்பாகும். இதுவே ஒலியன் எனப்படுகிறது.
இவ்வாறு ஆராயும் ஒவ்வொரு நிலையும் அடுத்த உயர்நிலைக்கு அடிப்படையாகிறது. இத்துடன் வருமுறைகளையும் தரவேண்டும், மூன்று வருமுறைகள் உள்ளன. அவை, துணை நிலையாக வழங்கல் (Complementary), உறழ்வு நிலையாக வழங்கல் (Contrastive), கட்டில்லாமல் வழங்கல் (Free Variation) என்பனவாகும். இவ்வாறு ஆராய்வதற்குப் பதிலீடு செய்தல் (Substitution), அண்மை உறுப்புப் பகுப்பாய்வு (Immediate Constituent Analysis) என்று இரண்டு உத்திகள் உள்ளன.
மயக்கம்
ஒரு சொல் அல்லது ஒரு தொடர் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களைத் தருதல் பொருட் பன்மையாகும். பொருள்கள் பலவாகக் கிடைப்பதன் விளைவே பொருள் மயக்கம் (Ambiguity), தொடர்களின் அமைப்பால் நேர்ந்தபொருள் மயக்கம் அமைப்பு மயக்கம் (Structural Ambiguity) எனப்படுகிறது. ஒலி (அல்லது எழுத்து), தொடரமைப்பு, சொல் ஆகிய மூன்றின் காரணமாகப் பொருள்மயக்கம் ஏற்படலாம்.
‘புலிகொல் யானை’ எனும் தொடரில் அமைப்பு மயக்கம் உள்ளது. ‘புலியைக் கொன்ற யானை’, ‘புலியால் கொல்லப்பட்ட யானை’ என்று இரு பொருள்கள் வருகின்றன. பொருள் மயக்கத்திற்குக் காரணம் இரண்டாம் வேற்றுமை உருபான ‘–ஐ’, மூன்றாம் வேற்றுமை உருபான ‘–ஆல்’ ஆகிய இரண்டும் மறைந்து நின்று பொருள் தருவதே என்பது தொல்காப்பியர் கருத்தாகும். இக்கால மொழியியலார் இதை வேறுவகையாக ஆராய்கின்றனர்.
இவ்வாறு பொருள்மயக்கம் ஏன் வருகிறது என்பதற்குரிய தெளிவான காரணத்தை மரபு இலக்கணமும், விளக்க மொழியியலும் (Descriptive Linguistics) தரவில்லை. இந்நிலையில் இவற்றைச் சிறப்பாக மாற்றிலக்கணமே (Transformational Linguistics) விளக்குகிறது.
வழுவற்ற வாக்கியங்களை உருவாக்குவதனை விளக்குவதாலும் அதற்குத் தேவையான விதிகளைத் தருவதாலும் மட்டும் ஒரு மொழியின் இலக்கணம் சிறப்படைந்து விடுவதில்லை. அது விளக்க வேண்டிய பகுதிகள் மிகுதியாக உள்ளன. சில வாக்கியங்களுக்கு ஒரே அமைப்பு இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் இருப்பது; வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டிருந்தாலும் ஒரே பொருளைத் தருவது; வாக்கிய அமைப்புகள் வேறுபட்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பது போன்ற பலவற்றையும் இலக்கணம் விளக்க வேண்டும்.
ஒரு கூற்றில் (Utterance) அமைந்திருக்கும் இலக்கணக் கூறுகளையும் அவற்றின் இயல்புகளையும் ஒன்றுக்கொன்றுள்ள தொடர்புகளையும் அமைப்பு விளக்குகிறது. இவ்வாறு அமைகின்ற வாக்கியத்திற்கு ‘அகஅமைப்பு’ (Deep Structure), ‘புறஅமைப்பு’ (Surface Structure) என இரண்டு அமைப்புகள் உள்ளன என மாற்றிலக்கணம் கூறுகிறது. அகஅமைப்பில் மாற்று விதிகள் (Transformational Rules) செயற்பட்டுப் புற அமைப்பு வருகிறது. இப்புற அமைப்பே தாம் பார்க்கும் அல்லது கேட்கும் வாக்கியமாகும். சில வேளைகளில் இரண்டு அல்லது மேற்பட்ட அக வாக்கியங்களிலிருந்து ஒரேயொரு வாக்கியத்தையோ தொடரையோ மாற்றுவிதிகள் வருவிப்பதுண்டு. இவ்வாறு இரண்டு அடிப்படை வாக்கியங்களிலிருந்து வருகிற ஒரு வாக்கியத்தில் பொருள் மயக்கம் இருக்கும், இது அமைப்பொற்றுமை (Constructional homonemity) எனப்படும்.
‘புலிகொல் யானை’ இருபொருளைத் தருவதற்கு, ‘புலி யானையைக் கொன்றது’; ‘யானை புலியைக் கொன்றது’ எனும் இரண்டு அக வாக்கியங்களிலிருந்து அத்தொடர் வந்ததுதான் காரணமாகும்.
இதைப்போன்றே ‘நான் ஓர் அழகான பெண்ணையும் ஆணையும் பார்த்தேன்’ என்ற வாக்கியத்தில் அழகான எனும் பெயரடை ‘பெண்’ எனும் பெயருக்கு அடையாக வந்தால் ஒரு பொருளையும், பெண் - ஆண் எனும் இரு பெயர்களுக்கும் அடையானால் இன்னொரு பொருளையும் தருகிறது. இங்கும் இவ்வாறு பொருள் மயக்கம் ஏற்பட்டதற்கு வாக்கியத்தின் அகஅமைப்பு வேறுபாடுகளே காரணம் ஆகும். விளக்க மொழியியலார் இதைப் போன்ற வாக்கியங்களின் பொருள் மயக்கத்தை அண்மை உறுப்புப் பகுப்பாய்வால் (Immediate Constituent Analysis) விளக்குவர்.
ஒலி காரணமான பொருள் மயக்கத்திற்குச் ‘செம்பொன்பதின்றொடி என்னும்’ சொற்றொடரைக் கூற- லாம். ‘செம்பு + ஒன்பதின் + தொடி’; ‘செம்பொன் + பதின் + தொடி’ என இருவகையாகப் பிரிப்பதற்கு ஒலியும் புணர்ச்சியும் காரணமாகும்.
சொல் காரணமான பொருள் மயக்கத்திற்குப் ‘படி’ எனும் சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அது பெயராக வரும்போது ‘படிக்கட்டு’; ‘அளவு’ என்றும், வினையாக வரும்போது ‘படித்தேன்’ ‘படிந்தது’ என்றும் இரு பொருள்களைத் தரும்.
பொருள் மயக்கத்தை நீக்குவதற்குப் பல வழிகள் கூறப்பட்டுள்ளன. அமைப்பு மயக்கத்தைப் போக்க, மறைந்து நின்று பொருள்தரும் இலக்கணக் கூறுகளை வெளிப்படையாகத் தருதல், பேசுவோரது கருத்தைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு தெளிதல், வாக்கிய அமைப்பின் சூழலுக்கேற்றவாறு புரிந்து கொள்ளுதல் முதலியன தேவையாகும்.
அமைப்பு மயக்கமே இலக்கணங்கள் சுட்டும் ‘சிலேடை’ தரும் பொருள் வேறுபாட்டிற்குக் காரணம் ஆகும்.பி.ந.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 526)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4hnfkts/
தமிழ்“அமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4hnfkts/APA
Oliyon Research. (2026). அமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m4hnfkts/MLA
"அமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/m4hnfkts/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment