உடற்கல்வி என்பது ஒரு கல்வி முறையாகும். மனிதனது நல்வாழ்விற்கும் அறிவு வளர்ச்சிக்கும் ஆளுமை மேம்பாட்டிற்கும் வேலைவாய்ப்பிற்கும் சமுதாயத்தில் தலைசிறந்து விளங்குவதற்கும் வாழ்க்கையை இயல்பாக அனுபவிப்பதற்கும் உடற்கல்வி இன்றியமையாதது. உடற்கல்வி என்பது உடலுக்குக் கல்வியாகவும் உடலாற்பெறும் கல்வியாகவும் உடலைப் பற்றிய கல்வியாகவும் இருப்பதால், ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத கல்வியாகவுள்ளது எனலாம். உடற்கல்வியின் நோக்கமாக உடல், உள்ளம், உணர்வு, வலிமை போன்ற பண்புகளால் முழுமையான வளர்ச்சி பெற்று, ஒருங்கிணைந்த ஆளுமைக் குணங்களோடு நாட்டிற்குகந்த நல்ல குடிமக்களை, தலைவர்களை உருவாக்குவதையே கொள்ளலாம். இந்நோக்கங்களைக் குழந்தையின் உடல், உள்ளம் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் படிப்படியாகத் தேவைப்படும் உடல் வளர்ச்சி, உடல் இயக்க வளர்ச்சி, புலன் உணர்வு வளர்ச்சி, சமுதாய வளர்ச்சி ஆகிய நால்வகையான இலக்குகளால் (Goals) அடைய இயலும். இந்திய உடற் கல்வியின் தந்தை என்று போற்றப்படும் கேரி குரோ பக்கு (Harry Crow Buck) என்பார். உடற்கல்வியின் நோக்கங்களாகத் தசைச் சக்திகளின் வளர்ச்சி, நரம்பு, தசை மண்டலங்களின் இணைந்த திறமைகளில் வளர்ச்சி, உடற்கல்வியில் பொது ஆர்வம், குறிப்பிட்ட விளையாட்டில் தனி ஆர்வ வளர்ச்சி, சமுதாய ஈடுபாடு, நன்னடத்தை வளர்ச்சி, உடல்நலப் பழக்கங்கள் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். உடற் கல்வியின் வளர்ச்சி உலகில் விலங்கினமும் மனித இனமும் தோன்றிய காலத்திலேயே உடற்கல்வி தோன்றியுள்ளது. உயிரினங்களுக்கு இயல்பான உடல் அசைவுகளும் விளையாட்டுகளும் சண்டைகளும் உடற்பயிற்சிகளாக அமைந்திருக்கின்றன. இருப்பினும், இந்தியாவில் உடற்கல்வியின் தோற்றத்தினையும் பண்டைய கால வளர்ச்சிகளையும் எடுத்தியம்பும் வண்ணம் சிறந்த சான்றுகளில்லை எனலாம். கிடைத்துள்ள சான்றுகளும் ஒன்றுக்கொன்று முரண்பாடான காலத்தையும் கருத்துகளையும் கொண்டுள்ளன. ஆயினும், உடற்கல்வி முறைகள் கல்விக்கு முன்னரே தோன்றி இருக்க வேண்டும். ஆரியர்கள் காலம் தொடங்கி ஆங்கிலேயர் காலம் ஈறாக, இந்திய வரலாற்றில் உடற்கல்வி முறைகள் இருந்துள்ளமைக்கு ஆதாரங்கள் உள்ளன. ஆரியர்கள் இந்தியாவில் குடியேறியபோது தங்களைக் காத்துக் கொள்ள உடல் வலிமையை நன்கு வேண்டியிருந்தது. வலிமை வளர்த்துக்கொள்ள பெற இவர்கள் ஓட்டம், தாவுதல், மற்போர், அம்பு எய்தல், குதிரை–யானை ஏற்றம், கத்திச் சண்டை, குத்துச் சண்டை, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளைக் கையாண்டனர். புத்தர் காலப் பள்ளிகளில் மாணவரின் உடல் நலத்தேவைக்கு ஏற்ப விற்பயிற்சி, குதிரை வண்டிப் பந்தயம் (Chariot Racing), குத்துச்சண்டை, நடனம் போன்ற உடற்பயிற்சிப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் இந்து, புத்தமதக் கல்வி முறைகள் சிறப்புடன் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் முசுலிம் படையெடுப்புகள் நிகழ்ந்தன. இவர்கள் காலத்தில் உடற்கல்வி சிறப்படையவில்லை எனலாம். எனினும், சுல்தான் பெரோசு சா (Sultan Feroz Shah) ஓட்டப் பந்தயங்களை நடத்தியுள்ளார். உடற்கல்வி முறைகள் இளவரசர்களின் பயிற்சி முறைகளில் இடம்பெற்றிருந்திருக்கின்றன. இப்போது பயன்படுத்தும் கம்புப் பயிற்சி முறைகள் (Pole Drills) முசுலிம் பயிற்சி முறைகளின் வெளிப்பாடேயாகும். ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது, கி.பி. 1854–ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உடுவின் அறிக்கையில் (Woods Report) உடற்கல்வி பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்றன. விக்டோரியா அரசி இந்திய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட்பின், கி.பி. 1875–ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இடம்பெற்றது. அப்போது பள்ளிகளில் உடற்கல்வி படைப் பயிற்சியைப் போல மிகவும் கடுமையாக நடத்தப்பட்டமையால் மாணவர்கள் அதை அதிகம் விரும்பவில்லை. நாகரான் (Nocharan) இந்தியப் பள்ளிகளுக்கான உடற்கல்விப் பாடத்திட்டத்தை முதன்முதலில் வெளியிட்டார். குழு விளையாட்டுகளினால் சமுதாயப் பண்புகள் வளர்கின்றன என்ற உண்மையை உணர்ந்தமையால், கல்வியாளர்கள் தனியொருவர் உடற்கல்வி முறையை மாற்றிக் குழு விளையாட்டுகளுக்குச் சிறப்பிடம் கொடுத்தனர். இதனால்தான் கால்பந்து, ‘கிரிக்கெட்டு’, வளைகோல் பந்து (Hockey), வரிப் பந்து (Tennis) போன்ற குழு விளையாட்டுகளும் தடைகளப் போட்டிகளும் (Track and Field Sports) மிகுதியாக இந்தியாவில் பரவின. கோல்பு (Golf), படகுப்போட்டி போன்ற விளையாட்டுகளும் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. 1920–ஆம் ஆண்டில் அறிவியல் முறையிலான சிறந்த உடற் கல்வியைத் தோற்றுவித்த பெருமை உடற்கல்வித் இந்தியாவின் தந்தை எனப் போற்றப்படும் கேரி குரோ பக்கு என்பவரையே சாரும். இவ்வாண்டில்தான் ஆசியாவிலேயே பயிற்சிப் உடற்கல்விப் பள்ளி முதலாவதான சென்னையில் அவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாண்டிலிருந்துதான் பயிற்சிப் பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் இந்தியாவில் உருவாக்கப் பெற்றனர். 1932–ஆம் ஆண்டில் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விக் கல்லூரியைச் சென்னையில் தோற்றுவித்தவரும் எச்.சி. பக்கே ஆவார். இங்கு உடற்கல்விச் சான்றிதழ்ப் பயிற்சியும் பட்டயப் பயிற்சியும் அளிக்கப்பட்டன. உடற்கல்விப் பட்டப்படிப்பு 1957–ஆம் ஆண்டில்தான் குவாலியரில் உள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்கல்விக் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1960–ஆம் ஆண்டில் பஞ்சாபிலும் 1967–ஆம் ஆண்டு தமிழகத்திலும் உடற்கல்விப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டன. சிவாசி, பஞ்சாபு பல்கலைகழகங்களில் 1963–இல் முதுகலைப் பட்டப்படிப்புத் தொடங்கப்பெற்றது. தமிழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு 1970–ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 1975–ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் கட்டாயப் பாடம் ஆக்கப்பட்டுள்ளது. இதுவே இந்திய வர- லாற்றில் முதலாம் முயற்சியாகும். உடற்கல்வி இந்தியாவில் உயரிய நிலையை அடைந்துள்ளது. பல்கலைக்கழகங்கள் உடற்கல்வியில் எம்.பில்., பிஎச்.டி. போன்ற ஆராய்ச்சிப் பட்டங்களும் அளிக்கின்றன. இன்று உடற்கல்வி பல்வேறு பிரிவுகளைக் கொண்டு ஓர் அறிவியல் துறையாக வளர்ந்துள்ளது. 1986–87–ஆம் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்றாண்டு இளநிலை அறிவியல் பட்டப்படிப்பு இந்தியாவிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் (New Education Policy) உடற்கல்வி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கல்வி சாரா உடற்கல்வி என்னும் பிரிவிலும் ஒரு மாணவர் பெறும் மதிப்பெண்ணும் அவரது தேர்வினை முடிவு செய்ய உதவும் என்ற நிலை நடைமுறைக்கு வரவிருக்கிறது. பள்ளியிலும் கல்லூரிகளிலும் உடற்கல்வி கட்டாயப் பாடமாக்கப்பட்டுத் தேர்வுக்குரிய பாடமாக்கப்படவுள்ளது. இந்தியாவிலுள்ள தொடக்கப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள் வேலையில் அமர்த்தப்படாததால் முறையான உடற்கல்வி இப்பள்ளிகளில் இடம்பெறவில்லை. தேசிய விழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள் நடைபெறும்போது மாணவர்க்குச் சில உடற்பயிற்சிகளை வகுப்பாசிரியர்கள் கற்பிக்கின்றனர். இது தவிர மாணவர்கள். பள்ளி இடைவேளைகளில் தாமாசு விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். சில நடுநிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் 1975–ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளமையால் உடற்கல்வி வகுப்புகள் முறையாக நடைபெற்று வருகின்றன. உயர்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி கட்டாயப் பாடமாகத் தேர்வுக்குரிய பாடமாக்கப்பட்டுள்ளமையாலும், உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவரின் எண்ணிக்கையைப் பொறுத்து நியமிக்கப்படுவதாலும், இப்பள்ளிகளில் முறையான உடற்கல்விப் பாடத் திட்டங்கள் செயற்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2,886 உயர்நிலைப் பள்ளிகளில் 1975–ஆம் ஆண்டில் உடற்கல்வியைத் தேர்வுக்குரிய கட்டாயப் பாடமாக்கியவர் அன்றைய பள்ளிக்கல்வி இயக்குநராக இருந்த ஆர். பெருமாள் ஆவார். உடற்கல்விப் பாடத்திட்டங்கள் பள்ளிகளிலுள்ள வசதிகளுக்கேற்ப (1) போதுமான விளையாட்டுத்திடல் உள்ள பள்ளிகள், (2) குறைவான விளையாட்டுத்திடல் உள்ள பள்ளிகள், (3) விளையாட்டுத்திடலே இல்லாத பள்ளிகள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உடற்கல்விப் பாட வகுப்புகளும் பங்கேற்கும் வகுப்புகளும் நடைபெறுகின்றன. இவ்வகுப்புகளில் தடைகளப் போட்டிகள், யோகாசனப் பயிற்சி, உருளுதல் போன்ற தனியாள் பயிற்சிகளும் நடைப்பயிற்சி, குழு விளையாட்டுகள் போன்ற குழுப் பயிற்சிகளும் இடம் பெறுகின்றன. தமிழகக் கல்லூரிகளில் புகுமுக வகுப்புகள் இருந்தபோது, அம்மாணவர்களுக்கும் முதலாண்டு பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் கட்டாய உடற்கல்வித் திட்டம் நடைமுறையில் இருந்தது. கல்லூரியில் பெரும்பாலும் ஓர் உடற்கல்வி ஆசிரியர்தாம் பணி செய்கின்றமையாலும், போதிய வசதிகளும் ஊக்கமும் இல்லாமையாலும் உடற்கல்வி சிறப்படையவில்லை. கல்லூரிகளில் குழுக்களை அனைத்துக் கல்லூரி விளையாட்டுப் போட்டிகளுக்கு ஆயத்தம் செய்வதிலேயே உடற்கல்வி ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. குழுக்களின் வெற்றி தோல்வியே கல்லூரியின் உடற்கல்விப் பெருமையை நிலைநாட்டுகின்றன. எனவே, மாணவர்களை விளையாட்டுப் போட்டிகளுக்காகப் பயிற்றுவிப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றது. கல்லூரி ஆண்டு விளையாட்டு விழாக்களையும் சில கல்லூரிகளில் பல விளையாட்டுப் போட்டிகளையும் ஆண்டுதோறும் நடத்துகின்றனர். இவை தவிர மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் உடல்நல ஆலோசனைகளும் உடற்கல்வி ஆசிரியர்களால் தரப் பெறுகின்றன. சில கல்லூரிகளில் உடற்கல்வி பொதுப்பாடம் (Core–Subject) ஆகவும் சிறப்புப்பாடம் (Credit Subject) ஆகவும் உள்ளது. மதுரைப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் உடற்கல்வி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு நான்காம் பாடப்பகுதியாக, தேர்வுக்குரிய பாடமாக நடத்தப்பட்டு மூன்றாண்டுகளுக்குப்பின் நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மாநிலப் பயிற்சிக் கல்லூரிகளில் பி.எட். பட்டப் படிப்பில் உடற்கல்வி பொதுப்பாடமாக – செயல்முறைப் பகுதியாக (Practicals) உள்ளது. பயிற்சி மாணவர்களுக்கு உடற்கல்வி பற்றியும் வகுப்புகள் நடத்துகின்ற முறைகள் பற்றியும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. மகாராட்டிர மாநிலத்திறுள்ள பயிற்சிக் கல்லூரிகளில் உடற்கல்வியும் ஒரு விருப்பப்பாடமாக (Optional Subject) உள்ளது. இம்மாணவர்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களாகவும் பாட ஆசிரியராகவும் பணி செய்ய ஏதுவாக உள்ளது. சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்விப் பயிற்சிக் கல்லூரியும் கோவை மாருதி உடற்பயிற்சிக் கல்லூரியும் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வித்துறையும் அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறையும் உடற்கல்வியில் இளங்கலை, முதுகலை, எம்.பில்., பிஎச்.டி. பட்டப் படிப்புகளைக் கொண்டுள்ளன. இவை உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி மையங்களாக உள்ளன. பல்கலைக்கழகங்களில் உள்ள உடற்கல்வித் துறைகள் பெரும்பாலும் விளையாட்டுக் குழுக்களை அனைத்துப் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளுக்குத் தெரிந்தெடுப்பதும், அவற்றிற்குப் பயிற்சி கொடுப்பதையுமே செய்கின்றன; பல்கலைக்கழகங்களுக்கிடையிலான போட்டிகள் சிலவற்றை நடத்துகின்றன. உடற்கல்விக்காக உள்ள அமைப்புகள் தேசிய உடற்கல்வி விளையாட்டு நிறுவனங்களின் அமைப்பு (Society of National Institutions for Physical Education and Sports) உடற்கல்வி பயிற்சிக் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழக உடற்கல்விப் பயிற்சித் துறைகளுக்கும் பொருளுதவியளிக்கிறது; அவற்றின் செயல்முறைகளைக் கண்காணிக்கிறது. பல்கலைக்கழக மானியக் குழு கல்லூரிகளில் உடற்கல்விக்கு விளையாட்டுத் திடல்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் (Gymnasiums), நீச்சல் குளங்கள், தடைகளப் பந்தயத் திடல்கள், விளையாட்டுக் கருவிகள் போன்றவற்றிற்குப் பொருளுதவி செய்கிறது. குவாலியரிலுள்ள இலட்சுமிபாய் உடற்கல்விக் கல்லூரியும் கேரளாவிலுள்ள அதன் கிளையும் உடற்கல்விப் பயிற்சியையும் ஆய்வுப் பட்டப் படிப்புகளையும் நடத்துகின்றன. அவை சிறந்த உடற்கல்வி மையங்களாகத் திகழ்கின்றன. விளையாட்டுகளின் முன்னேற்றத்திற்காகப் பயிற்சியாளர்களை உருவாக்கும் நேதாசி சுபாசு தேசிய விளையாட்டு நிறுவனம் (Netaji Subbash National Institute of Sports) பாட்டியாலாவில் உள்ளது. இது பல கிளைகளைக் கொண்டுள்ளது. இங்குப் பட்டயக் (Diploma) கல்வியும் விளையாட்டில் முதுகலைக் கல்வியும் (Master of Sports) அளிக்கப்படுகின்றன. இங்குப் பயின்றவர்கள் மாவட்ட விளையாட்டு மையங்களில் பயிற்சியாளர்களாகப் பணியிலமர்த்தப்படுகின்றனர். இந்திய ஒலிம்பிக்குக் கழகம் அனைத்து நாடுகளுக்கிடையிலான போட்டிகளுக்கு இந்திய அணிகளை அனுப்பும் பொறுப்புடையது. மற்றைய மாநில விளையாட்டுக் கழக அமைப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய விளையாட்டு நிறுவனம் பெரும்பான்மையான மக்கள் விளையாட்டைப் பற்றி அறியப் பல செயல்களைச் செய்கிறது; விளையாட்டுகளை மக்கள் மத்தியில் பரப்பவும் அவற்றின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுகிறது. உடற்கல்வியினால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மற்றைய நாடுகளைப்போல உடற்கல்வியும் இந்தியாவில் முழு வளர்ச்சி பெற்ற அறிவியல் துறையாக வளர்ந்துள்ளது. உடற்கல்வியில் பயிற்சி பெறுபவர்கள் தங்களின் கல்வித்தகுதிக்கேற்ப நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் உடற்கல்விப் பயிற்சிக் கல்லூரிகள், பல்கலைக்கழக உடற்கல்வித் துறைகள் போன்ற பலவகையான கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளும் கல்லூரிகளும் அரசு ஒப்புதல் (Recognition) பெற வேண்டுமாயின், உடற்கல்வி இயக்குநர் ஒருவர் பணியில் அமர்த்தப்பட்டு இருக்க வேண்டும். இல்லையேல் ஒப்புதல் மறுக்கப்பட்டுவிடும் நிலையுள்ளது. உடற்கல்வியின் பயன்கள் உடற்கல்வி பொதுவாக நலத்தை வளர்க்கவும், உடல் வலிமையைப் பெருக்கவும், நெஞ்சுறுதியை உண்டாக்கவும், உள்ளம் பக்குவம் அடையவும், மனிதப் பண்புகள் மேலோங்கவும், வாழ்க்கைச் சிக்கல்களை எதிர்நோக்கி வெல்கின்ற மனவலிமை சிறக்கவும், தலைமைப் பண்பும் சமுதாய உணர்வும் சமுதாயப் பண்புகளும் செம்மைப்படவும் உறுதுணையாய் இருக்கிறது. மேலும் இக்கல்வி உடல் தசை உறுதிப்படவும், மனித ஆற்றல் மேம்படவும் உடலின் உள்ளுறுப்புகள் ஒருங்கிணைந்து திறன்படச் செயற்படவும், மனித உடலசைவுகள் அழகுற, சிக்கனமாகச் செயற்படவும் பயன்படுகிறது. கல்லியின் நோக்கமான முழு வளர்ச்சி பெற்ற நன்மக்களை உருவாக்குவதில் இக்கல்வி பயன்படுகிறது. கூட்டு, தலைமை, கோட்பாடுகளை மதித்தல், இணைந்து செயல்படும் குழு உணர்வு, தன்னம்பிக்கை, பிறர் திறமைகளை மதித்தல், நேர்மை, உணர்ச்சிகளை அடக்கும் பக்குவம், வெற்றியில் செருக்கின்மை, பணிவு, அறிவுடைமை போன்ற தன்னுடைமைச் செல்வங்கள் வளர வாய்ப்பு அளிக்கின்றது. விளையாட்டுத் திறன்களில் உயர்ந்து விளங்கி நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறவும் துணை செய்கிறது. இக்கல்வி தன்னைப் பற்றித்தான் மதிப்பாய் எண்ணுகின்ற (Self–Esteem) பண்பையும், சிறு வயதுமுதல் தனது ஆழ்மனத்தில் பதிந்துகிடக்கும் உயர் நோக்கங்களை அடையும் பண்பினையும் (Self–Actualization) வளர்க்கின்றது; சமுதாய ஒப்புதல் (Social Recognition) பெறச் செய்கின்றது. விசய் அமிர்தராசு, கபில்தேவ், பி.டி. உசா போன்றவர்கள் விளையாட்டுத் திறனால் உலக நாடுகளில் மதிக்கப்படுகின்றனர் என்பதே சிறந்த எடுத்துக்காட்டாகும்.பொன்.சூ. துணை நூல்கள் Charles, A. Bucher, Foundations of Physical Education and Sports, The C.V. Mosby Company, London, 1983. Thomas, J.P., Organisation of Physical Education, Gnanodaya Press, Madras, 1959.