அகத்திணை மாந்தரின் பேச்சாக அமைந்த சொற்கள் தமக்குரிய பொருளினின்று சிறிது வேறுபட்டு இசைத்தல் செய்யுள்நெறி மரபாகும். இவ்வாறு பொருள் வேறுபட்டிசைப்பினும் சொல்வடிவம் திரிவதில்லை. அம்முறைமை பற்றிக் காதல் காரணமாகத் தோன்றும் மக்களின் இன்ப துன்ப உணர்வுகளை அஃறிணைப் பொருள்களிடம் சார்த்திப் பேசுவது செய்யுள் மரபாகும். இவ்வாறு பேசும் பேச்சில் திணை உணர்வதற்குத் துணையாக விலங்கு, பறவை முதலிய கருப்பொருள்களின் பண்பையும் செயலையும் புனைந்து பேசுதலே இறைச்சியாகும். ‘இறைச்சி’ என்னும் சொல்லின் பொருள், அகத்திணை மாந்தர் பேசும் சொற்களுள் திணை விளக்கத்திற்ஞரிய பொருள் தங்கியிருத்தல் என்பதாம். இறை–தங்குதல்; சி – தொழிற்பெயர் விகுதி. இதனை இறைச்சிப் பொருள் என்றும் வழங்குவர். இதன்கண் வேறு குறிப்புப் பொருள் தோன்றின் அது இறைச்சியிற் பிறக்கும் பொருள் எனப்படும். இவ்விறைச்சி அமைந்து தோன்றுதற்கு அடிப்படைப் பொருள் பெரும்பான்மையும் மா, மரம், புள், நீர், நிலம், பூ முதலியவாக ஐவகை நிலத்திலும் தோன்றும் கருப்பொருள்களாகும். இறைச்சியை அமைத்துப் பேசுங்கால், இத்தகைய அஃறிணைப் பொருள்களுக்கு உயர்திணையாகிய மக்களின் பண்பும் செயலுமாகிய ஒழுகலாறுகளைச் சார்த்திப் பேசுதல் இலக்கண மரபாகும். இனி, இறைச்சியானது செய்யுளில் கருப்பொருளைச் சிறப்பித்துப் புனைந்துரையாக வருதலேயன்றி, சில இடங்களில் கூறுவோரது உள்ளக் குறிப்பினை உள்ளுறையாகக் கொண்டும் வரும். இங்ஙனம் இறைச்சிப் பொருள் பற்றித் தோன்றும் உள்ளுறைக் குறிப்பினை உள்ளுறை வகையுள் ‘உடனுறை’ என்னும் உள்ளுறை வகையாகக் கூறுவர் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் உள்ளுறைப் பொருள், கருப்பொருள்களின் புனைவாகக் கூறப்படுவனவற்றின் பண்பொடும் செயலொடும் ஒன்றுபட்டு உடனாகி நிற்றலின் ‘உடனுறை’ எனப்பட்டது. இவ்வுள்ளுறைப் பொருள் பெரும்பான்மையும் காதல் பற்றியதாகவே அமையும். இறைச்சியுள் குறிப்புப் பொருளை அமைத்துச் செய்யுளியற்றுவதும் அவ்வுள்ளுறைக் குறிப்பைத் தெரிந்துணர்வதும் அறிஞர்க்கே இயல்வதாகும். உள்ளுறை உவமம் வேறு; இறைச்சியிற் பிறக்கும் பொருளாகிய உடனுறை என்பது வேறு. தலைவர் சென்ற வழியில் பெண் யானைகளின் பசியைப் போக்கும் பொருட்டு, நீண்ட தும்பிக்கையைக் கொண்ட ஆண் யானைகள் மென்மையான கிளைகளோடு நிற்கும் யாமரப் பட்டைகளை உரித்துக் கொண்டிருக்கும் அன்புடையனவாம் என இடைச்சுரத்தில் உள்ள கருப்பொருள்களின் செயலைச் சுட்டும் வருணனை, ‘நின்பால் விருப்பமுடைய தலைவர் விரைவில் மீள்வார்’ என்னும் தோழியின் விருப்பத்தைப் புலப்படுத்தி நிற்பதையறியலாம். குறுந்தொகைப் பாடலில் (37) ‘யானை யாமரத்தின் பட்டைகளை உரிக்கும் என்ற இறைச்சியாகிய கருப்பொருட் புனைவு யானையின் காதலன்பினைச் சுட்டி, தலைவர் விருப்பம் மிகவுடையராதலால் விரைவில் மீண்டு வருவார்’ எனக் கூறித் தலைவியை ஆற்றியிருத்தல் வேண்டுமெனத் தோழி வற்புறுத்தியமை காணலாம். இதில் உள்ளுறை உவமம் கோடற்குரிய குறிப்பு ஏதுமின்றி, அவ்விறைச்சிப் பொருள் பாலைத்திணையை விளக்கி நிற்பதை அறியலாம். ச.பா.