கடந்த நூற்றாண்டின் இறுதியில், நைட்ரஜன் பயிரினங்களுக்கு முதனிலை ஊட்டச் சத்துகளுள் ஒன்று என்றும், கரிம வகை உரங்களில் நைட்ரஜன் மைய இடம் பெற்றுள்ளது என்றும் தெரிய வந்தன. சிலி உப்பு (Chile Saltpetre) எனப் படும் சோடியம் நைட்ரேட் முதன் முதலாகப் பயன் படுத்தப் பட்ட வேதி நைட்ரஜன் உரமாகும். அடுத்து, நிலக்கரி வளிமத் தயாரிப்பில், உடன் விளை பொருளாகக் கிடைக்கும் அம்மோனியம் சல்ஃபேட் நைட்ரஜன் உரமாகப் பயன் பட்டது. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், மின் வில்லைக் கொண்டு, சூழ்வெளி நைட்ரஜனை நிலைப் படுத்தும் ஆய்வின் விளைவாகக் கால்சியம் சயனமைடும், நைட்ரிக் அமிலமும் தயாரிக்கப் பட்டன. இன்று பெரும்பாலான நைட்ரஜன் உரங்கள் அம்மோனியாவை அடிப்படையாகக் கொண்டவை. ஹேபர் முறையில் காற்றிலுள்ள நைட்ரஜனும், நில வளிமம் மற்றும் பெட்ரோலியத்திலிருந்தும் பெறப் பட்ட ஹைட்ரஜனும் இணைக்கப் பட்டு, அம்மோனியா தயாரிக்கப் படுகிறது. அம்மோனியம் சல்ஃபேட்டில் 21% நைட்ரஜன் உள்ளது. நிலக்கரி வளிமத்தைச் சல்ஃப்யூரிக் அமிலத்தால் கழுவி (Scrubbing), பின் ஆவியாக்கி, படிகமாக்கிப் பிரித்து, உலர்த்தி, அம்மோனியம் சல்ஃபேட்டைப் பெறலாம். அம்மோனியாவை சல்ஃப்யூரிக் அமிலத்தால் முறித்தல் தற்கால முறையாகும். நைலான் தயாரிப்பில், மூலப் பொருளாகப் பயன் படும் காப்ரோலாக்ட்டம் எனும் வேதித் தயாரிப்பில் உடன் வினைப் பொருளாக உருவாகும் அம்மோனியம் சல்ஃபேட் பெருமளவில் விற்பனையாகிறது. மெர்ஸ்பெர்க் வினை (Merseberg reaction) மூலமும், அம்மோனியம் சல்ஃபேட்டைத் தயாரிக்கலாம். CaSO_4 2H_2O + (NH_4)2CO_3 \Leftrightarrow CaCO_3 + (NH_4)_2 SO_4 + H_2O கால்சியம் நைட்ரேட். இதில் 15% நைட்ரஜன் உள்ளது; சுண்ணாம்புக் கல்லை நைட்ரிக் அமிலத்துடன் வினைப் படுத்தி இதனைப் பெறலாம். CaCO_3 + 2HNO_3 \rightarrow Ca(NO_3)_2 + H_2O + CO_2 இது நீர் உறிஞ்சும் தன்மையுடையதால், சேமிப்புக் கிடங்குகளில், சிறப்பு உத்திகளைப் பின்பற்ற வேண்டும். அம்மோனியம் நைட்ரேட் (NH₄NO₃). இது 35% நைட்ரஜன் அடக்கம் கொண்டது; அம்மோனியாவை நைட்ரிக் அமிலத்தால், நடு நிலையாக்கிப் பெறப் படுகிறது. நைட்ரோபாஸ்ஃபேட் உரத் தயாரிப்பில் உடன் விளைவாகும் கால்சியம் நைட்ரேட்டை அம்மோனியாவுடனும், கார்பன்டை ஆக்சைடுடனும் வினைப் படுத்தலாம். Ca (NO_3 )_2 + NH_3 \div CO_2 + H_2O \rightarrow 2NH_4 NO_3 + CaCO_3 திண்ம நிலையிலும், உருகிய நிலையிலும் அம்மோனியம் நைட்ரேட் (குறிப்பாக, கரிம வகை மாசுப் பொருள் கலந்திருக்கையில்) வெடிக்க வல்லது. அம்மோனியம் நைட்ரேட்டைக் கால்சியம் கார்பனேட்டுடன் கலந்து, நைட்ரஜன் அடக்கம் 26%க்கு மேலிடாது கவனித்துக் கொண்டால், வெடிக்கும் வாய்ப்பைத் தவிர்க்கலாம். யூரியா (H₂NCONH₂). இதன் நைட்ரஜன் அடக்கம் 46.65%. 1828இல் முதன் முதலாக ஊலர் என்பாரால் அம்மோனியம் சயனேட்டின் மாற்றிய வினை (isomerisation) வாயிலாகத் தயாரிக்கப் பட்டது. அம்மோனியாவையும், கார்பன் டைஆக்சைடையும் நேரடியாக வினைப் படுத்தி, யூரியா தயாரிக்கப் படுகிறது. இரண்டாம் வினை 170–200% வெப்ப நிலை வரம்பிலும், வளி 160-250 அழுத்தத்திலும் நிகழ்த்தப் படுகிறது. நீர்ம நிலை அம்மோனியாவைப் பயன் படுத்தும முறை தற்போது வழக்கிலுள்ளது. அம்மோனியம் உப்புக்களும், நைட்ரேட் உப்புக்களும், நீரில் கரை திறன் மிக்கவை ஆதலால், மழை நீரால் அடித்துச் செல்லப் படுவதற்கான வாய்ப்பு கூடுதலாம். ஆனால், பல வகை மண்ணில், அம்மோனியம் அயனிகள் விரைவாக நிலை நிறுத்தப் படுவதால் இவ்வாய்ப்பு பெரிதும் குறைக்கப் படுகிறது. யூரியாவையும், ஃபார்மால்டிஹைடையும் வினைப் படுத்தி, யூரியாஃபார்ம் உரங்களைத் தயாரித்தும், யூரியா மீது கந்தகப் பூச்சு அளித்தும், நீரில் மெல்லக் கரையும் ஐசோப்யூடிலிடீன் யூரியா போன்ற நைட்ரஜன் சேர்மங்களைத் தயாரித்தும், மண்ணில் நைட்ரஜன் கலப்பினை நிகழ்த்தலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். D.M.Considere (Ed.) Chemical and Process Technology Encyclopedia, McGraw–Hill Book Company, Newyork, 1984.