கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் கி.பி. 1886-இல் திருச்சியில் பிறந்தார். சீரங்கத்தைத் தம் இருப்பிடமாகக் கொண்டார். இவர் தம் 18–ஆம் வயதிலேயே பாலபாசுகரன் என்னும் புனைபெயரில் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். ‘பிரசாநுகூலன்’ என்னும் பெயரில் 1904–இல் ஒரு சொந்தப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். அதன் 25–ஆம் ஆண்டு நிறைவு விழாவினைச் சென்னையில் கொண்டாடினார். சேலம் நகரில் ‘திராவிடாபிமானி’ என்னுமொரு பத்திரிகையை 1907–இல் தொடங்கிப் பல ஆண்டுகள் நடத்தி வந்தார். ஆனந்தகுண போதினி ஆசிரியராக 1926–இல் விளங்கினார். அப்பத்திரிகை பின்னர் ‘அமிர்தகுண போதினி’ எனப் பெயர் மாற்றம் பெற்றுச் சிறப்புற நடைபெற்றது. பணம், சரசுவதி என்னும் பெயர்களிலும் இவர் பத்திரிகைகள் நடத்தியுள்ளார். இவர் ஆனந்த கதாகல்பம், அதிசயசிந்தாமணி, கதிமோகனரஞ்சிதம், அமிர்தவல்லி போன்ற பல புதினங்களை எழுதியுள்ளார். கமலாபாய் கதை, பரிமளா, வித்தியாநவந்தம், சனகாமோகன சாதுரியம், நாகரிக பாரிசாதம், சுகுமாரதிலகம், ஆசையின் முடிபு, தகாதயுத்தி, காணாமற்போன ராகவலு, இரஞ்சித ரத்தினம், புராதன சரித்திர விவரங்கள் முதலியனவும் இவர் தம் நூல்களாகும். இவர் 1935–இல் திருவரங்கத்தில் காலமானார்.