சங்கப் புலவர்களுள் ஒருவர். கிடைத்தற்கரிய கல்வியை எளிதில் பெற்றுப் புகழ் சிறக்க வாழ்ந்தமையால் அடைநெடுங்கல்வியார் என்னும் பெயர் இவருக்கு ஏற்பட்டது எனக் கருத இடமுண்டு. சில பதிப்புகளில் அடைநெடுங்கல்வியார் என்றும், அண்டர் நடுங்கல்லினார் என்றும், அண்டர் நெடுங்கல்லியார் என்றும் இவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. பகைவர் பற்றிச் சென்ற தம் ஆனிரைகளை மீட்கும் போரில் துறக்கம் எய்திய வீரர்களுக்கு நடுகல் நட்டு, ஆயர் சிறப்புச் செய்ய, அவ்வாறு நடப்பட்ட கல்லை ‘அண்டர் நடுங்கல்’ என இவர் பாராட்டிப் பாடிய பாடல் தொடரால் அண்டர் நடுங்கல்லினார் என இவர் அழைக்கப்பட்டிருத்தல் கூடும். இவர் பாடிய மூன்று பாடல்கள் புறநானூற்றில் 283, 344, 345–ஆம் பாடல்களாக அமைந்துள்ளன. இருபாடல்கள் காஞ்சித் திணையில் மகட்பாற் காஞ்சித் துறையிலும் (புறம். 344, 345), ஒருபாடல் தும்பைத்திணைப் பாடாண்பாட்டுத் துறையிலும் (புறம். 283) உள்ளன. இரு பாடல்கள் இடையே குறைபட்டுள்ளன (புறம். 283, 344) போரில் பகைவர் எறிந்த வேல்கள் தன் உடலெங்கும் பாய்ந்து ஊடுருவப் பெற்ற நிலையில் வீழ்ந்து கிடக்கும் வீரனுக்கு, ஆரக்கால்கள் சூழச் செருகப்பட்டுத் தோன்றும் வண்டி உருளின் குடத்தை உவமையாகக் கூறியிருப்பது (புறம். 283) சிறப்பாக உள்ளது. இப்பாடலில் ‘வலம்புரி கோசர்’ என வெற்றி மிக்க கோசர் பற்றிய குறிப்பும் இடம் பெற்றுள்ளது. மகட்கொடை வேண்டி வருவோர், பெண்ணைப் பெற்றவருக்குப் பெண்ணின் நிறையளவு (எடையளவு) பொன்னை நிறுத்துத் தருதலும் உண்டு என்பது இவரது பாடலினின்றும் (புறம். 344) புலனாகிறது. மகட்கொடை வேண்டி வந்தோர் நால்வகைப் படைகளோடு வந்து நின்ற போதிலும் நிறைந்த பொருள் தருவதாகக் கூறிய போதிலும் வந்தவர் குடிமை, ஆண்மை முதலிய பண்புகளில் பொருந்தாதவராயின், தம் மகளைக் கொடுக்கப் பெண் வீட்டார் மறுப்பர் என்னும் பழந்தமிழர் பண்பினை இவர் பாடல் (புறம். 345) குறிப்பிடுகிறது.வே.கா.