கார்பனேட் கனிமமான இது, ஈயக் கார்பனேட்டு(PbCO₃) ஆகும். செவ்வகத் தொகுதியைச் சேர்ந்தசெருசைட்டின் (cerussite) அணுக் கோப்பு இயல்பு அடிப்படை வகையைச் சேர்ந்தது. இதன் ஓர் அணுக் கோப்பில் நான்கு கூட்டணுக்கள் உள்ளன. இக்கனிமத்தின் அணு அமைப்பில், அணுக்களுக்கு இடையே உள்ள தொலைவு முன் பின் வாட்டத்தில் (a) 5.1726 Åஆகவும், பக்க வாட்டத்தில் (b) 8.4800 Å ஆகவும், குத்து வாட்டத்தில் (c) 6.1302 Å ஆகவும் இருக்கும். இதன் படிக அச்சுகளின் விகிதம் a:b:c = 0.60997:1:0.7230 ஆகும். செருசைட் படிகங்கள் பல வடிவங்களில் காணப் படுகின்றன.இவை, பெரும்பாலும் இரட்டுறல் ஆனவை. படிகங்கள் பொதுவாகத் தட்டையாக இருக்கும். அவை (010) முகத்திற்கு இணையாக இருக்கும். சில a–படிக அச்சுக்கு இணையாக நீண்டும், சில பட்டகங்கள் அல்லது பட்டகக் கூம்புகளாகவும் இருக்கும். செருசைட் ஊசிகளைப் போன்றும், மெல்லிய தட்டையாகவும் அரிதாகக் காணப்படும். துகள்களாகவும், திண்மங்களாகவும், இழைகளாகவும், கல் விழுதுகளைப் போன்றும், கெட்டியாகவும் காணப்படும். இதில் கீறல்கள் காணப்படும். செருசைட்டில் (110), (021) முகங்களுக்கு இணையான கனிமப் பிளவுகள் தெளிவாகக் காணப் படும். (010), (012) முகங்களுக்கு இணையான கனிமப் பிளவும் ஓரளவு காணப்படும். இது வளை முறிவு உடையது. மிகவும் நொறுங்கக் கூடியது. இது வைர மிளிர்வு அல்லது கண்ணாடி மிளிர்வு, அரக்கு மிளிர்வு, முத்து மிளிர்வு உடையது. சில சமயங்களில், குறை உலோக மிளிர்வுடன் காணப் படும். இதன் கடினத் தன்மை 3–3.5, ஒப்படர்த்தி 6.55. இது நிறமற்றதாயும், வெள்ளை, சாம்பல் நிறம், புகை நிறம் கொண்டுமிருக்கும். சில சமயங்களில், நீலம், பச்சை, இருண்ட சாம்பல் நிறம் அல்லது கறுப்பு நிறம் உடையது. இதன் கீற்று நிறம், நிறமற்றதாகவோ, வெண்மையாகவோ இருக்கும். செருசைட் நீண்ட அலை வேகமுடைய புற ஊதா ஒளியில் மஞ்சள் நிறக் கிளர் ஒளிர்வு கொண்டது. ஒளி புகும் அல்லது ஒளி கசியும் தன்மை உடையது. செருசைட் இரண்டு ஒளி அச்சுகளை உடைய கனிமம். அதன் ஒளி அச்சுத் தளம் (010) தளத்திற்கு இணையாக இருக்கும். இதன் ஒளி அச்சுக் கோணம் (2V) 9° ஆக இருக்கும். இது எதிர் மறை ஒளிக் குறி உடையது. இதில் ஒளிச் சிதறல் சிகப்பு நிற ஒளியை விட, ஊதா நிற ஒளியில் குறைவாகும். இதன் ஒளி விலகல் எண்கள் α = 1.8036, β = 2.0765 γ = 2.0786. செருசைட் ஆக்சைடு படிவுத் தாரைகளில், இரண்டாம் கனிமமாகக் காணப் படுகிறது. இது அமெரிக்க ஐக்கிய நாடுகள், பென்சில்வேனியா, ஆஃப்ரிக்கா, சாம்பியா, டாஸ்மேனிய, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் கிடைக்கிறது. செருசைட், வெள்ளை ஈயத் தாது என்றும் கூறப் படும். இது ஈயம் தயாரிக்கப் பயன் படுகிறது. —இல. வைத்திலிங்கம் நூலோதி. I. G. Berry and B. Mason, Mineralogy, Second Edition, CBS Publishers and Distributors, New Delhi, 1985.