இது குருயிடே குடும்பத்தைச் சேர்ந்தது. இது பெரிய உடலையும், நீண்ட கழுத்தையும், கால்களையும், 19–20 கழுத்து முள்ளெலும்புகளையும் கொண்டுள்ளது. இதன் அலகு நீண்டும், தலையில் நீளத்திற்குச் சமமாகவும் இருக்கும். புற மூக்குத் துளைகள், அலகின் தொடக்கத்தில் மென்மையான தோலால் மூடப்பட்டுள்ளன. வாலில் 12 இறகுகள் உள்ளன. மார்பு எலும்பு, கத்தி போன்று உட்புறத்தில் காற்றுக் குழல் (tracheae) நிரம்பிக் காணப் படுகிறது. கிரஸ் பல்லாஸ் (Grus Pallas).இவ்வினத்தில், தலையின் உச்சியில் இறகுகளில்லை. ஆனால், அதன் பக்கவாட்டிலும், கழுத்திலும் இறகுகள் உள்ளன. இறக்கை நீண்டும், வால் குட்டையாகவும் உள்ளன. காலின் கீழ்: மூட்டின் கீழ்ப் பகுதி (tibia) இறகு இன்றியும், கால் விரல் (toes) குட்டையாகவும், உறுதியாகவும் அமைந்துள்ளன. விரல்களில், மழுங்கிய, குட்டையான நகங்கள் (Claws) காணப் படுகின்றன. ஆண், பெண் பறவைகளுக்கு இடையே இறகு அமைப்பிலும், நிறத்திலும் வேற்றுமை கிடையாது. கிரஸ் கிரஸ் லில் போர்டி (Grus Grus lil Fordi) . இவ்வினத்தைக் கிழக்கிந்திய கொக்கு (Eastern cranes) என்றும் குறிப்பிடுவர். ஆண் பறவையின் உடல் 45 செ.மீ. நீளமும், இறக்கை 22 செ.மீ. நீளமும், வால் 8 செ.மீ. நீளமும், கணுக்கால் 9.5 செ.மீ. நீளமும், அலகு 4.6 செ.மீ. நீளமும் உள்ளன. தலையின் உச்சி கறுப்பாகவும், பிடப் பகுதிகளுக்கு (occipital) இடையே குறுக்காக ஒரு சிவப்புப் பட்டையுமுள்ளன. அலகின் அடிப் பகுதி பச்சையாகவும், நுனிப் பகுதி மஞ்சள் நிறமாகவும் காணப் படும். கால் கறுப்பாகவும், உள்ளங்கால் மர நிறமாகவும், மெத்தை போன்றுள்ளன. கழுத்தில் கறுப்பும், சாம்பல் நிறமும் கலந்த இறகுகளுள்ள பெண் பறவைகளிலும், பறவைகளைப் போலவே இறகுகள் அமைந்திருக்கின்றன. இளம் பறவை மர நிறத்தை ஒத்துள்ளது. மேலும், இதன் தலை முழுவதும் இறகுகள் உள்ளன. பிறந்த குஞ்சுகளில் பஞ்சு போன்ற மஞ்சள் நிறத் தூவி இறகுகள் (down feathers) மிகுதியாகக் காணப் படுகின்றன. இவ்வகைக் கொக்கு திருவாங்கூர்ப் பகுதியில் மிகுதியாகக் காணப் படும். இது நதிகளில், குறிப்பாக, நீர்த் தேக்கங்களிலும், அணைக் கட்டுகளிலும் தானியக் கழனிகளிலும் விடியலில் இரை தேடப் புறப்படும். வெயில் நேரத்தில், ஒரே ஒரு காலில் நின்று கொண்டு தூங்கும். குறைந்தது 300 பறவைகள் ஒன்று சேர்ந்து, கூட்டம் கூட்டமாக பறந்து போகும். அதற்கே உரிய தாரை (trumpet) போன்ற நீண்ட ஒலியை அடிக்கடி எழுப்பிக் கொண்டே இருக்கும். ஒன்று அல்லது இரண்டு முறை வட்டமிட்டுப் பறந்து, நீண்ட ஒலியை எழுப்பிய பிறகே, நிலத்தில் அமரும். உணவு உண்ணும் போது, மிகவும் கவனமாக இருக்கும். தானியங்களையும், பிற தாவரங்களையும் விரும்பி உண்ணும். இந்திய சாரஸ் கொக்கு (Anligone antigone). <!---- See : https://birdsoftheworld.org/bow/species/sarcra1/cur/introduction----> இதில் ஆண் கொக்கு 145 செ.மீ. உள்ளது. இறக்கை 60 செ.மீ, வால் 25 செ.மீ, கணுக்கால் 30 செ.மீ. அலகு 17 அங்குலம் நீளமுள்ளன. அலகின் அடிப் பகுதி இளம் பச்சையாகவும், நுனிப் பகுதி கறுப்பாகவும், தலையின் உச்சி சிறு நீட்சிகளைப் போன்ற மொட்டுகளுடன் சாம்பல் நிறத்துடனும், கழுத்து இளஞ் சிவப்பாகவும், கரு விழி ஆரஞ்சு நிறத்துடனும், கால்கள் செந்நிறமாகவுமுள்ளன. தொண்டை மற்றும் கன்னப் பகுதிகளில் (cheeks) கறுப்பு இறகுகள் உள்ளன. இவ்விறகுகள் காதுக்கருகில் மிகுந்து காணப் படுகின்றன. ஆண் கொக்கிற்கும், பெண் கொக்கிற்கும் அனைத்துப் பண்புகளும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளன. இளம் கொக்குகளின் உடல் முழுவதும் சாம்பல் நிற இறகுகள் உள்ளன. பிறந்த குஞ்சுகளின் மேல் புறம் மர நிற இறகுகளும், கீழ்ப் புறம் வெண்மை இறகுகளும் காணப் படுகின்றன. இப்பறவை சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கோதாவரியின் வட பகுதியிலும் மிகுதியாக வசிக்கிறது. குறிப்பாக, விளை நிலங்களுக்கு அஅருகில் வாழ்கிறது. பகலில் இரை தேடி, மாலை நேரத்தில் நீர் நிலைகளுக்கு வந்து, அங்கேயே இரவுப் பொழுதைக் கழிக்கிறது. சில எப்போதும் இணை இணையாக நீர் நிலைகளில் வாழ்கின்றன. குளிர் மற்றும் இலையுதிர் காலங்களில் இரண்டு அல்லது மூன்று இளங் கொக்குகளுடன் காணப் படும். துணையை இழந்தால், பெரிதும் துன்பமடையும் பண்பையும் பெற்றுள்ளது. தவளை, பல்லி, சிறிய ஊரும் உயிரினங்கள், வேர், நீர்த் தாவரங்கள் ஆகியவற்றை விரும்பி உண்ணுகிறது. நெடுந் தொலைவிற்குக் கேட்கும் அளவிற்கு ஒலியை எழுப்புகிறது. ஜுலை, ஆகஸ்டு செப்டம்பர் மாதங்களில் கூடு கட்டி வாழும். வடிவத்தில் பல வண்ணப் புள்ளிகளைக் கொண்டுள்ளது. ஆந்திரோபாய் டெஸ் வெயிலோட். (Anthropoides vieillot). <!---- https://www.gbif.org/species/2474935 ----> இச்சிற்றினம் இந்தியக் கொக்குகளிலேயே மிகவும் சிறியதாகும். டெமாய் செல்லி( Demoiselle) <!---- https://en.wikipedia.org/wiki/Demoiselle_crane----> வகைக் கொக்கு இறகுகளையும், விரலிடைச் சவ்வுப் பகுதிகளையும் (webs) பெற்றுள்ளது. மார்பு எலும்பில் நீண்ட, வெண்மையான இறகுகள் முன் புறம் நீட்டிக் கொண்டுள்ளன. ஆண் கொக்கின் நீளம் 75 செ.மீ. அளவும், இறக்கையின் நீளம் 47 செ.மீ. வாலின் நீளம் 17 செ.மீ. அளவும், கணுக்காலின் நீளம் 17 செ.மீ. அளவும், அலகின் நீளம் 6.5 செ.மீ. அளவும் இருக்கும். அலகின் அடிப் பகுதி மங்கிய பச்சை நிறமாகவும், நுனிப் பகுதி வெளுத்த சிவப்பு நிறமாகவும் உள்ளன. கால்களும், விரல்களும், கறுப்பு நிறமுடையன. தலை, முகம், கழுத்து, மார்புப் பகுதிகளில் கறுப்பு இறகுகளுமுள்ளன. காம்பிறகுகள் கறுப்பு நிறமானவை. பெண் கொக்கில், இப்பண்புகள் அனைத்தும் ஒரே வகையாக இருக்கின்றன. இக்கொக்கு, குளிர் காலத்தில் பெருமளவில் காணப் படுகிறது. கர்நாடக மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள கொள்ளேகால் பகுதியில் மிகுதியாக வாழ்கின்றன. வானில் அடிக்கடி வட்டமிட்டுக் கொண்டே ‘சூர்… சூர்… .சூர்…’ என ஒலி எழுப்பியவாறு செல்லும். விடியலில், தோட்டங்களில் பெருமளவில் இரை தேடும். இரவில் நதியோரங்களில், மணல் பகுதிகளில் உறங்கும். சில சமயங்களில், தவளைகளை விரும்பி உண்ணும். மே, ஜுன், மார்கழி மாதங்களில் தெற்கு ஐரோப்பிய நாடுகளிலும், வட ஆசியப் பகுதிகளிலும் இனப் பெருக்கம் செய்யும். மைய வட இந்தியா, பாகிஸ்தான், அஸ்ஸாம், மியான்மர் பகுதிகளில் இக்கொக்கு வாழ்வதாகக் கூறுகின்றனர். —உ. கருப்பணன் துணை நூல். Salim Ali, The Book of Indian Birds, Bombay Natural History Society, Bombay 1955.