கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த மலையாள நாடக, புதின ஆசிரியராவார். இவர் திருவனந்தபுரத்தில் பிறந்து அங்கேயே கல்வி பயின்றார். ‘சந்திர முகீ விலாசம்’ என்னும் நாடகத்தை இவர் கி.பி. 1885–ஆம் ஆண்டில் இயற்றினார். பழைய வடமொழி நாடகமரபை ஒட்டி, ஆங்கில நாடகங்களிலுள்ள சமுதாய விமரிசனப் பாங்கில் இந்நாடகம் அமைக்கப்பட்டது. நடிப்புத்திறன் வாய்ந்த இராமன் பிள்ளை, திருவனந்தபுரம் அரசர் கல்லூரி ஆசிரியர், மாணவர்கள் சில அதிகாரிகள் ஆகியோரோடு சேர்ந்து, தாம் எழுதிய இந்நாடகத்தில் நடிக்கவும் செய்தார். மலையாளத்தில் முதன்முதலாக நடிக்கப்பட்ட சமூக நாடகம் என்னும் சிறப்பும், உடன்காலச் சமுதாய வாழ்க்கையைத் திறனாயும் பாங்கில் அமைந்தது என்னும் சிறப்பும் இந்நாடகத்திற்குரியவாகும். இவர் கி.பி. 1909–இல் ‘குறிப்பில்லாக் களரி’ என்ற ஒரு நகைச்சுவை நாடகத்தை இயற்றினார். இது ஆங்கில உரைநடை நாடக ஆசிரியர்களின் பாணியைப் பின்- பற்றி அமைக்கப்பட்டது, பின்னர்ப் ‘பண்டத் தெப்பாச்சன்’ (பழைய கறுப்பன்), ‘கய்மளச்சன்றெ கடசிக்கை’ (கைமளச்சனுடைய கடைசிக் கை) முதலான பல நகைச்சுவை நாடகங்களை இயற்றியுள்ளார். இவர் தம் நூல்களுள் மார்த்தாண்டவர்மா (1891), தர்மராசர் (1913), இராம ராசா பகதூர் (1920) ஆகியன குறிப்பிடத்தக்கன. இவை கற்பனை கலந்த உண்மை கூறும் இயல்பின.