அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்
acantā ōviyaṅkaḷum ciṟpaṅkaḷum
மகாராட்டிர மாநிலத்தில் ஔரங்காபாத்து நகரத்திற்கு 104 கி.மீ.
மகாராட்டிர மாநிலத்தில் ஔரங்காபாத்து நகரத்திற்கு 104 கி.மீ. தொலைவில் அசந்தா என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரையடுத்து வண்ண ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த முப்பது பௌத்தக் குகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சில முடிக்கப்பெற்ற நிலையிலும் வேறுசில முடிக்கப் பெறாத நிலையிலும் உள்ளன. இவை சயாத்திரி மலைத் தொடரின் ஒரு செங்குத்தான பாறையில் ஓர் அருவியை அடுத்து அரைவட்டமாகக் குடைந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்குகைகள் கி.மு. 200 முதல் கி.பி. 650 வரை வெவ்வேறு காலங்களில் உருவாக்கப்பட்டிருக்கலாம். அடர்ந்த காடுகளுக்கு இடையே மறைந்திருந்த இக்குகைகள் கி.பி. 1819–ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் காணப்படும் சிற்பங்களும் ஓவியங்களும் பெரும்பாலும் புத்தரின் வாழ்க்கையை விளக்குவனவாக இருக்கின்றன. சிற்பங்கள் வாகடக மன்னர்கள் காலத்துச் சிற்பக் கலையைப் பற்றி அறிய உதவுகின்றன. கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு முன் நிலவிய ஈனயானக் கருத்துக்கள் புத்தரின் உருவச் சிலை அமைப்பதைத் தடுத்தன. ஆனால் கி.பி. 5-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பௌத்தர்களிடையே நிலவிய மகாயானக் கருத்துகள் சிற்பக் கலையை ஆதரித்தன. புத்தரின் சிற்பங்கள் பல அசந்தாக் குகைகளில் காணப்படுகின்றன.
அசந்தாக் குகைகளின் சுவர்களில் காணப்படும் வண்ண ஓவியம் சுதை ஓவியம் எனப்படும். நெல், உமி, காய்கள், நார், புல் ஆகிய பொருள்கள் நேர்த்தியான மணலுடன் கலக்கப்பட்ட ஒரு வெண்ணிறப் பூச்சு, ஓவியத்தின் அடித்தளமாக அமைகிறது. முதல் குகை ஓர் அழகிய பௌத்த விகாரம் ஆகும், பௌத்தத் துறவிகளின் இருப்பிடமே விகாரம் எனப்படும். இதில் பல அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் காணப்படுகின்றன. சித்தார்த்தர் உலக இன்பங்களைத் துறக்கக் காரணமாயிருந்த நான்கு நிகழ்ச்சிகளையும் இங்குச் சிற்பங்களாகக் காணலாம். ஒரே தலையும் நான்கு உடல்களும் கொண்ட மானின் உருவமும் காணப்படுகின்றன. இவற்றைத் தவிரப் பல சுவரோவியங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் இளவரசர் சித்தார்த்தரும் அவர் மனைவி அசோதரையும் கையில் தாமரை மலருடன் அருகில் இருப்பதாகத் தீட்டப்பெற்ற ஓவியமும் ஒன்றாகும். மன்மதனின் உருவமும் சாதகக் கதைகளிலிருந்து பல நிகழ்ச்சிகளும் இங்குச் சுதை ஓவியங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. சாளுக்கிய மன்னன் புலிகேசி பாரசீகத் தூதர்களை வரவேற்கும் காட்சியும், ஒரு காளைச் சண்டைக் காட்சியும் சுவரோவியங்களாகக் காணப்படுகின்றன. அவலோகிதேசுவரர் (போதிசத்துவர்) ஓவியம் ஒன்றும் காணப்படுகிறது. இது வைணீகம் என்னும் முறையைச் சேர்ந்த ஓவியமாகும். விட்டுணு தருமோத்தரம் என்னும் பண்டைய வடமொழி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள நால்வகை ஓவிய முறைகளுள் வைணீகம் ஒன்றாகும். இது கவிதைத் தன்மை பொருந்திய ஓவியங்களைக் குறிக்கும். அவலோகிதேசுவரர் உருவம் காதணிகளையும் அழகிய முத்துச்சரத்தையும் அணிந்து ஒரு நீல அல்லி மலரைக் கையில் ஏந்தியுள்ளது. மங்கலான வண்ணப் பூச்சும் அழுத்தமான வண்ணப் பூச்சும் மாறி மாறித் தீட்டப்பெற்று இவ்வோவியத்தில் இருளும் ஒளியும் சேர்ந்தாற் போன்ற காட்சி அமைந்திருக்கிறது. அசந்தா ஓவியங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்தது அவலோகிதேசுவரர் ஓவியமே ஆகும். அசந்தா வண்ண ஓவியக் கலைக்கு உலகப் புகழ் கிடைத்தது இந்த ஓவியத்தினால்தான் என்று கூறலாம். இதனைத் தவிர, மன்மதன் தோல்வி, களியாட்டக் காட்சிகள், காதற்காட்சிகள், சிபி, நாகர், சாதகக் கதைகள் போன்ற ஓவியங்கள் இங்குச் சிறப்பாக விளங்குகின்றன.
இரண்டாம் குகையும் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த முகப்பும் தூண்களும் நிறைந்த ஒரு பௌத்த விகாரம் ஆகும். இங்கு அரண்மனைக் காட்சிகள், இந்திரலோகம், சிராவத்தியின் சாதனை, சாந்திவாதி, மைத்திரிபாலா கதைகள், கூரையின் அடிப்பரப்பு வேலைப்பாடுகள் முதலியன தலைசிறந்த ஓவியங்களாகும். இங்குப் புகழ்பெற்ற பஞ்சிகை, அரிதி ஆகிய பெண்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூன்றாம் குகை முடிக்கப்பெறாத நிலையில் உள்ளது.
நான்காம் குகை முடிக்கப்பெறாத விகாரம் ஆகும். இது கி.பி. 7–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இதன் முகப்பில் மலர் பறிக்கும் இளம் பெண்களின் சிற்பங்களைக் காணலாம். இதில் எட்டுத் தூண்கள் உள்ளன. இங்குப் புத்தரின் பெரிய உ உருவச் சிலையும் வச்சிரபாணி, பத்துமபாணி என்னும் போதி சத்துவர்கள் புடைசூழ அறிவுரை கூறும் புத்தரின் மாபெரும் உருவமும் காணப்படுகின்றன. இங்குள்ள சுவரோவியங்கள் எல்லாம் பெரும்பாலும் அழிந்து விட்டன.
ஐந்தாம் குகை முடிக்கப் பெறாத விகாரம் (பௌத்த மடம்) ஆகும். ஆறாம் குகை இரண்டு அடுக்குகள் உள்ள விகாரமாகும். இங்கும் சுவரோவியங்கள் அழிந்துவிட்டன. தாழ்வாரத்தின் இரு ஓரங்களிலும் உள்ள சிறிய அறைகளில் புத்தரின் படிமங்கள் இருக்கின்றன. ஏழாம் குகை இரண்டாம் குகையைப் போன்ற விகாரம் ஆகும். இங்குப் புத்தரின் படிமங்கள் காணப்படுகின்றன. சாதகக் கதைகளின் நிகழ்ச்சிகள் இங்குச் செதுக்கப்பட்டுள்ளன.
எட்டாம் குகை ஒரு சிதைந்த விகாரமாகும். ஒன்பதாம் குகையில் வரிசையாக 23 தூண்கள் காணப்படுகின்றன. இதுவே மிகப் பழமையான குகை என்று கருதப்படுகிறது. இதில் காணப்படும் சுவரோவியங்கள் கி.மு. முதலிரண்டு நூற்றாண்டுகளில் தீட்டப்பெற்றவை ஆகும். இது சைத்தியம் எனப்படும் வழிபாட்டுக் கூடத்தின் வடிவில் உள்ளது.
பத்தாம் குகையும் ஒரு வழிபாட்டுக் கூட்டத்தின் வடிவில் உள்ளது. இங்குப் போதி மர வழிபாடு, சாதகக் கதை நிகழ்ச்சிகள் ஆகியன ஒவியங்களாகக் காட்சியளிக்கின்றன.
பதினோராம் குகை ஒரு சிதைந்த விகாரம் ஆகும். பன்னிரண்டு பதின் மூன்றாம் குகைகள் பௌத்தத் துறவிகளின் மடம் போன்று உள்ளன. பதினான்கு பதினைந்தாம் குகைகளும் பௌத்த மடங்களாகும். பதினாறாம் குகையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவை கி.பி. 500-இல் ஏற்பட்டனவாக இருக்கலாம். சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களின் முகப்பில் பல சாதகக் கதை நிகழ்ச்சிகள் விளக்கம் பெற்றுள்ளன. பதினேழாம் குகை, கல்வெட்டுகள் நிறைந்த விகாரம் ஆகும். இங்குள்ள ஓவியங்கள் புத்தரின் முற்பிறவியை விளக்குகின்றன. சாதகக் கதைகளும் அவதானக் கதைகளும் (புத்தரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் அருஞ்செயல்களும்) விளக்கம் பெற்றுள்ளன.
பத்தொன்பதாம் குகை அழகிய வழிபாட்டுக் கூடம் ஆகும். இங்கு அழகிய முகப்பும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்களும் காணப்படுகின்றன. இது ஏறத்தாழ கி.பி. 550–ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம். வழிபாட்டுக் கூடத்தில் புத்தரின் படிமங்கள் காட்சியளிக்கின்றன. இது மகாயானச் சிற்பக்கலையின் வளர்ச்சியைக் காட்டுகிறது. இதன் முகப்பில் ஓவியத் தலைகள் அமைந்த பலகணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை ஆந்திரச் சிற்ப வகையைச் சார்ந்தவையாக இருக்கலாம். புகழ் பெற்ற ஓவியமான அசோதரை–இராகுலன் முன் புத்தர் ஓடு ஏந்திப் பிச்சையெடுக்கும் ஓவியம் இங்குக் காணப்படுகிறது. 20, 21, 22, 23, 24, 28, 29–ஆம் குகைகள் விகாரங்களாகும். முப்பதாம் குகை முடிவு பெறவில்லை.
26–ஆம் குகை வழிபாட்டுக் கூடம் ஆகும். தூபியில் இங்குக் காணப்படும் ஓவியத்தில் புத்தர் பிரலம்ப பாத ஆசனத்தில் அமர்ந்திருப்பதாகக் (நாற்காலியில் அமர்வது போன்று) காட்டப்பட்டுள்ளது. பூத்து நிற்கும் இருசாலை மரங்களுக்கிடையில் வலப்புறம் சாய்ந்து பாதத்தின் மீது பாதம் வைத்துக்கொண்டு ததாகதர் (புத்தர்) வீட்டுநிலை (நிருவாணம்) அடைகிறார். அவர்தம் மாணவர் சுற்றியிருந்து அழுகின்றனர். கந்தருவரும் தேவரும் இன்னிசை பொழிந்து கொண்டிருக்கின்றனர். இச்சிற்பம் அசந்தாச் சிற்பக் கலையின் பெருமைக்குச் சான்றாக விளங்குகிறது.என்.எஸ்.இரா.
துணை நூல்கள்
Calambur Sivarama Murthy, “The Art of India”, Indian Book House, Bombay.
Calambur Sivarama Murthy, “Indian Painting”, National Book Trust of India, New Delhi, 1970.
Krishna Chaitanya, “The Mural Tradition,” Abinay Publication, New Delhi, 1976.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 163)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kr5xtxey/
தமிழ்“அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kr5xtxey/APA
Oliyon Research. (2026). அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kr5xtxey/MLA
"அசந்தா ஓவியங்களும் சிற்பங்களும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kr5xtxey/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment