பட்டுப் பூச்சி
paṭṭup pūcci
பட்டுப் பூச்சிகளின் உடலிலிருந்து உண்டாகும் மெல்லிய இழை வடிவான நார்ப் பொருளே பட்டு ஆகும்.
பட்டுப் பூச்சிகளின் உடலிலிருந்து உண்டாகும் மெல்லிய இழை வடிவான நார்ப் பொருளே பட்டு ஆகும். ஏறக் குறைய 500 விதமான பூச்சிகளில் மல்பெரிப் பட்டுப் பூச்சியே (Bomhyn mori) பட்டு உற்பத்தியில் இன்றியமையாதது.
பட்டு. நான்கு வகையான பட்டுப் பூச்சிகளிலிருந்து கிடைக்கிறது. அவற்றில், முசுக்கொட்டைப் பட்டு என்பது சில மல்பெரி அல்லது கம்பளிப் பூச்சியின் இலைகளை உண்டு வாழும் பட்டுப் பூச்சியின் கூட்டிலிருந்து கிடைக்கிறது. இப்பூச்சி கணுக்காலித் தொகுதியில், இன்சென்டா எனும் பூச்சி வகுப்பில், செதிற்சிறகி (lepidoptera) வரிசையில் பாம்பிசீயா என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. முசுக்கொட்டைப் பட்டுப் பூச்சி மங்கலான வெண்ணிறத்தில் குட்டையாகவும், தடித்தும், பின் புறம் மொட்டையாகவும், இருக்கும். பெண் பூச்சி ஆணை விடச் சற்றுப் பெரியதாகவும், நீளமாகவும், இருக்கும். இதன் இறக்கைகள் குட்டையானவை. வலுவில்லாதவை. முன் வளைந்து, அரிவாள் வடிவிலிருக்கும். பின் இணை உடலின் இறுதி வரையில் நீண்டிருப்பதில்லை. இப்பூச்சியின் இளவுயிரி சாம்பல் நிறமாக அல்லது மங்கலான வெண்ணிறமாக மேலே சாதாரண கம்பளிப் பூச்சிகளுக்கு இருப்பது போன்ற மயிர் பெறாமல் இருக்கும். இது முழு வளர்ச்சியடையும் போது, 7.5–9 செ.மீ. நீளமிருக்கும். இதைச் சார்ந்த ஏனைய இனங்களின் இளவுயிரிகளை விட, இது மெலிந்திருக்கும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகிறது.----> இதன் உடலில் தலையும், அதை அடுத்து 3 கண்ட மார்பும், அதன் பின்னால், 12 கண்ட வயிறும் இருக்கும். இரண்டாம் மார்புக் கண்டம் புடைத்துக் கொண்டிருக்கும். வாலில் ஒரு சிறு முள் போன்ற கொம்பு அல்லது நீட்சி இருக்கும். மார்பில் 3 இரட்டைக் கால்கள் உண்டு. வயிற்றில் 5 இரட்டையான தடித்த சதை நீட்சிகள், முனையில் கொக்கி போன்ற மயிருடன் இருக்கும். முதல் 3 இணைக் கால்கள் மட்டுமே முதிர் பூச்சி நிலையிலும் இருக்கும்.
ஐரோப்பாவிலுள்ள பட்டுப் பூச்சியில் ஓர் ஆண்டுக்கு ஒரு தலைமுறையே உண்டாகும். ஜப்பானில் ஆண்டுக்கு 2 தலைமுறைகளும், இந்தியாவில் 6 தலைமுறைகளும் உண்டாகின்றன. ஒற்றைத் தலை முறை நாடுகளில், கோடையின் தொடக்கத்தில் பட்டுக் கூட்டிலிருந்து வெளி வரும் பூச்சிகள் முட்டையிட்டு விட்டு, 3 அல்லது நான்கு நாள்களில் இறந்து விடும். ஒரு பெண் பூச்சி 200–500 முட்டைகள் இடும். அதற்கென்றே வைத்திருக்கும் காகிதத் துண்டுகளில் முட்டை இடும் படி அமைத்திருப்பர். இந்த முட்டைக் காகிதங்களே (egg card) குளிரறைகளில் சேமித்து வைத்து, வசந்த காலம் வந்ததும், முசுக்கொட்டை, தளிர்த்துப் பச்சை இலைகள் உண்டானதும், முட்டைகளை அவையப் பெட்டிகளில் இப்புழுக்கள், பொரிந்த 5 வாரம் வரையிலும், இலையைத் திண்று வளரும். ஒரு நாளில் ஒரு புழு, தன் எடை அளவுள்ள இலையைத் தின்று வளரும். அதன் வளர்ச்சிக் காலத்தில், 4 முறை தோலுரிக்கும். 5 வாரம் ஆன பின்னர், 7.5 செ.மீ. நீளமுள்ள புழுக்கள் கூடு கட்டத் தொடங்குகின்றன. என்றாவது ஒரு நாள் புழு இரையெடுக்காமல், தலையை உயர்த்திக் கொண்டு, குச்சி போன்ற ஆதரவைத் தேடி முன்னும், பின்னும் சாய்ந்தாடும். அப்போது அப்புழுக்களைச் சந்திரிகை எனும் அறைகளடங்கிய தட்டுகளில் இட வேண்டும். புழு கூட்டைப் பின்னத் தொடங்கும் இக்காலத்தில், புழு வளர்ப்போர் தூய்மையைக் கையாள வேண்டும். கூடு கட்டும் புழுக்களுக்குக் கூடுதல் ஒளி இருக்கக் கூடாது.
பட்டுச் சுரப்பி. இப்பூச்சிகளில் பட்டை உற்பத்தி செய்பவை, உமிழ் நீர்ச் சுரப்பிகளேயாகும். பக்கத்திற்கொன்றாக, இரு சுரப்பிகளில் இருந்து, பிசின் போன்ற நீர்மம் வெளி வரும்.இரண்டு சுரப்பிகளின் முனைகளும், ஒன்று சேர்ந்து, கீழுதட்டிலுள்ள ஒரு துளை வழியாக வெளியே திறக்கும். புழு முதிர்ச்சியடையும் போது, இந்தச் சுரப்பிகளின் பையைப் போன்ற பகுதியில், தெளிவான பிசுபிசுப்பான சுரப்பி நிறைந்திருக்கும். வெளியே வந்து காற்றில் பட்டதும், இப்பிசின் கெட்டியான இழையாகி விடுகிறது.
இவ்விழை இரண்டு நுண்ணிழைகளை ஒட்டிக் கொண்டு உருவாகும். உள்ளிழை பைப்ராயின் எனும் புரதத்தினாலும், வெளி உறை செரிசின் எனும் புரதத்தாலும் ஆக்கப் பட்டுள்ளன. இதனால், பட்டின் இழையைக் கொளுத்தினால், பறவைகளின் இறக்கையைப் பொசுக்கினால் போன்று நாற்றம் வரும். இந்த நாற்றத்தின் மூலம், செயற்கைப் பட்டினின்று இயற்கைப் பட்டை பிரித்தறியலாம்.
இளவுயிரி கூடு நெய்யும் போது, ஒரே நேரத்தில் இரண்டு சுரப்பிகளிலிருந்து தொடர்ச்சியாக ஒரே நூலாகச் சுற்றிக் கொள்ளக் கூடிய இரண்டு இழைகளை வெளியே பீச்சிக் கொண்டே போகும். இழை 800–1200 மீ. நீளமிருக்கும். ஒழுங்கான வரிசையில், தொடர்ச்சியாக ஏறக் குறைய வளைவுகள் உண்டாகும் படி, மூன்று நாள்களுக்கு அசைத்துக் கொண்டு பின்னும், இவ்வாறு வெளி வரும் நூல் இரண்டு சுரப்பிகளில் இருந்து வருவதால், இரண்டு நுண்ணிய இழைகள் இருக்கும். ஏனைய இரண்டு சுரப்பிகள் ரெசின் போன்ற பொருளை உண்டாக்குகின்றன. அப்பொருள், நூற்கும் பட்டு இழை வெளி வருவதற்கு உதவுவதோடு, வெளி வந்த இழைகள் ஒன்றாக ஒட்டிக் கொள்ளவும் உதவுகிறது.
கூடுகட்டி 10–12 நாள்கள் ஆன பிறகு, உள்ளே இருக்கும் பூச்சி வெளிவரத் தொடங்கும். அது கூட்டின் ஒரு முனையைத் துளைத்து, இழைகளை ஒதுக்கி வழி செய்து கொண்டு, வெளி வரும். வந்தவுடன், ஆணும், பெண்ணும் கூடும். பிறகு பெண் 4–6 நாள்களில் முட்டையிடும். பட்டிழையை நுண்ணோக்கியால் பார்த்தால், அது தட்டையாக ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இட்ட இரு நுண்ணிழைகள் பெற்றிருக்கும். இந்த அடை வடிவக் கூடுகள் வெண்மையாகவோ, மஞ்சளாகவோ இடையில் சற்று ஒடுங்கியிருக்கும். இனங்களுக்கேற்பக் கூடுகளின் எடை வேறு படும். அவை 2.5–3.8 செ.மீ. அங்குல நீளமும் 1.3–2.5 செ.மீ. அகலமும் இருக்கும். வெளியே கடினமான, உறுதியான ஓடு போன்ற பகுதியும், அதற்கு வெளியே தளர்ச்சியான, அங்குமிங்கும் ஓடும் பஞ்சு போன்ற இழைகளுள்ள பகுதியும் இருக்கும். அனைத்திற்கும் உள்ளே அடுக்குகள் மிக நெருக்கமாகவும், மிகச் செறிவாகவும் ஒரு தோற்படம் போலக் காணப் படும். இந்த உட்பகுதியுள்ள இழைப் பகுதியை நூலாகச் சுற்றிக் கொள்ள முடிவதில்லை. ஒரு கூடு உள்ளிருக்கும் கூட்டுப் புழுவுடன் 15.50 கிராம் எடையிருக்கும். 300–600 கூடுகள் 0.5 கி.கி. நிறையை ஏற்படுத்தும். ஒரு கூட்டிலிருந்து 1200 மீ. நீளமுடைய பட்டு இழை கிடைக்கும். 11 கி.கி. பட்டுக் கூட்டிலிருந்து 1 கி.கி. பட்டு எடுக்கலாம்.
பட்டுப் பூச்சி கூடு கட்டி முடித்த பின்னர், அக்கூண்டுகளைக் கொதி நீரிலோ, வெளியிலோ வைத்து, உள்ளிருக்கும் கூட்டுப் புழுவைக் கொன்று விட்டுப் பின்னர்ப் பட்டிழையைப் பிரித்தெடுத்துப் பட்டாக்குவர். இல்லையெனில், கூட்டுப் புழு முதிர்வடைந்து, கூட்டில் ஒரு பகுதியைத் துளையிட்டு வெளி வரும். அத்தகைய கூடுகள், இழைப் பிரித்தலுக்குப் பயன்படா. பட்டிழைக்காக மட்டுமன்றிப் பட்டு நரம்பிற்காகவும், பட்டுப் பூச்சிகள் வளர்க்கப் படுகின்றன. முழு வளர்ச்சியடைந்த பட்டுப் புழுவை 10% அசிடிக் அமிலத்தில் முக்கிக் கொன்று, புழுவின் கீழுதட்டை வெட்டிய பின், சுரப்பியிலிருக்கும் பொருளைக் கடினமான இழையாக இழுத்துப் பட்டு நரம்பு தயாரிக்கப் படுகின்றது.
பட்டுப் பூச்சியைப் பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. பெப்ரைன் எனும் நோயே, மிகுதியும் பட்டுப் புழுக்களைத் தாக்கிக் கொல்வதாகும். இந்நோய் நொசீமா,பாம்பைசிஸ் எனும் ஒரு செல் உயிரியால் பரவுகிறது. இதனால், புழுக்கள் நிறம் மாறி, உணவின்றி இறந்து விடுகின்றன. மஸ்கார்டின் என்பது பட்டுப் புழுவைத் தாக்கும் மற்றொரு நோய். இது, பவேரியா பேசியானா எனும் காளான்களால் ஏற்படுகிறது. பிளாசெரி (flecherie) என்பது நுண்ணுயிர் நோயாகும். இதனால், புழுப் பருவம் மிகுதியாகப் பாதிக்கப் படுகிறது.
கிராசரி (grasserie) என்பது வைரஸ் நுண்ணுயிரியால் ஏற்படும் நோயாகும். இதனால், கடைப் புழுப் பருவத்தில் பாதிப்பு மிகுதி. இத்தகைய நோய்களைத் தடுப்பதற்கு நோயற்ற முட்டைகளும், புழுக்களுக்குச் சரியான உணவும், தூய இருப்பிடமும், பொருத்தமான வெப்ப நிலையும் இன்றியமையாதவை.
ஆமணக்குப் பட்டுப் பூச்சி. இது பட்டு உற்பத்தி செய்யும் பூச்சிகளில் ஒன்றாகும். பல்வேறு பட்ட 500 வகைப் பூச்சிகள் பட்டு உற்பத்தி செய்தாலும், மக்கள் ஆடையாக நெய்து உடுத்தப் பயன் படும் பட்டு பல வகை அந்துப் பூச்சிகளின் மூலமே கிடைக்கிறது. சீன நாட்டு மல்பெரி எனும் முசுக்கொட்டை மர இலையை உண்டு வாழும் அந்துப் பூச்சிகளே (Bombyx mori) உலகிலேயே பெருமளவில் பட்டு அளிப்பவையாகும். ஆயினும், உலகெங்கும் பல்வேறு வகைக் காட்டுப் பட்டுப் பூச்சிகளிலிருந்தும், பட்டு உற்பத்தியாகிறது. இந்தியாவில் உள்ள அத்தகைய ஒரு பட்டுப் பூச்சியே ஆமணக்குப் பட்டுப் பூச்சி ஆகும். இது பிலோசாமியா ரிசனை (Philosamia riccini, B.) அல்லது அட்டாகஸ் ரிசைனை (Attacus ricini, D.) என்று குறிப்பிடப் படுகிறது.
முசுக்கொட்டைப் பயிரை நம்பியிராது, ஆமணக்கு, பப்பாளி, காட்டாமணக்கு, மர வள்ளி போன்ற தாவரங்களின் இலைகளை உண்டு வாழக் கூடிய வளர்ப்புப் பட்டுப் பூச்சி இது ஒன்றே ஆகும். இது ஒரு பல பயிருண்ணி (polyphagous) ஆகும். இது ஒரு முழுமையான வளர்ப்புப் பூச்சியேயானாலும் காடுகளிலும் காணக் கூடியது.
ஆமணக்குப் பட்டுப் பூச்சி, கணுக்காலித் தொகுதியில் அறுகால் பூச்சி வகுப்பில், லெப்பிடாப்டிரா எனும் செதிற்சிறகி வரிசையில் பாம்பிகாய்டியா எனும் பெருங் குடும்பத்தில் சடுர்னிடே எனும் குடும்பத்தைச் சார்ந்தது.
பருத்த உடலைப் பெற்றுள்ளது. கருமையான உடலும், வெண் பகுதிகளடங்கிய கரும் பழுப்பு நிற இறக்கைகளும் உள்ளன. ஆண் பூச்சி பெண் பூச்சியை விடச் சற்று சிறியதாகவும், ஆணின் உணர் கொப்புக் கிளைகள் சற்று நீளமாகவும் காணப் படும். இறக்கைகளில் உள்ள வெள்ளை வண்ணக் கோடுகள், ஆண் பூச்சிகளில் மிகுதியாகக் காணப் படுகின்றன. இரு பால் பூச்சிகளிலுமே, இறக்கைகளின் நடுவில், பிறை போன்ற வெண் புள்ளிகள் உள்ளன. மேலும், முன் இறக்கைகளின் வெளிப் புற முனையில் கண் போன்ற கரும் புள்ளி இருப்பது, சற்று அச்சமான தோற்றத்தை உருவாக்கக் கூடியது. உணர் கொம்புகள் மிகவும் அடர்ந்த இரு சீப்பு அமைப்புடையவை.கீழுதட்டுப் பால்ப்புகள் (lobal palps) மிகச் சிறியவை. பி.ரிசைனை (P.ricini) எனும் அந்தும், பி.சின்தயா (P.cynthia) எனும் அந்தும் அஸ்ஸாமிய ஆமணக்குப் பட்டுப் பூச்சிகளாகக் கருதப் படுகின்றன. இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் மிகக் குறைவு; பூச்சிகளின் நிறங்களில் காணப் படும் சில மாற்றங்களைத் தவிர, இரண்டும் ஒன்று போலவுள்ளன. ஆயினும், பி.சின்தயா தற்போது காடுகளில் மட்டுமே காணப் படுகிறது. பி.ரிசைனை மட்டும் வளர்ப்புப் பூச்சியாக்கப் பட்டுள்ளது.
ஒரு தாய்ப் பூச்சி ஏறத் தாழ 120 முதல் 1200 முட்டைகளை ஒரே இடத்தில் கூட்டமாக இடுகிறது. இம் முட்டைகளிலிருந்து 10 நாள்களுக்குள் இளம் புழுக்கள் வெளி வருகின்றன. வெளி வரும் கம்பளிப் புழுக்கள் பசுமையாகவும், பழுப்புத் தலையுடனும், உடலில் பல சிறு முனைப்பு (tubercle) சிறு முன் மயிர்கள் (Still hair) உள்ளவையாகவும் விளங்கும். முழு வளர்ச்சி அடைந்த கம்பளிப் புழு 8 செ.மீ. நீளம் உடையது. அது 17–25 நாள்களில் புழுப் பருவத்தைக் கடக்கிறது. இப்பருவத்தில், பயிர்களின் இலைகள் இவற்றிற்கு உணவாகின்றன. வளர்ச்சியடைந்த புழுக்கள் எங்கு வேண்டுமானாலும், கூடு கட்டும் திறனுடையவாதலால், முசுக்கொட்டைப் பட்டுப் புழுவுக்குத் தேவையான தனிப் பட்ட சந்திரிகைகள் போன்ற அமைப்புகள் இதற்குத் தேவையில்லை.
ஆமணக்குப் பட்டுக் கூடு மிகவும் இறுக்கமாகப் பின்னப் படுவதில்லை. பட்டு இழைகள் வெண்மையாக அல்லது செங்கல் சிவப்பாக இருந்து வந்தன. ஆனால், முழுமையான உள் இனக் கலப்பு (total inbreeding) முறையினால் வெள்ளை நிறக் கூடுகள் மட்டுமே உண்டாக்கக் கூடிய இனம் பிரிக்கப் பட்டுச் சிவப்பு கூட்டுச் சந்ததிகள் வெளியேற்றப் பட்டு விட்டன. ஆமணக்குப் பட்டு இழைகள் மல்பெரிப் பட்டு இழையைப் போன்ற ஒரே இழையாக இராமையால், நேரடியாக நூற்கப் படுகின்றன. இதே காரணத்தினால், கூட்டுப் புழு முழு வளர்ச்சியடைந்து, பட்டுப் பூச்சியாக வெளி வருகின்றது. மல்பெரிப் பட்டைப் போன்று, கூட்டுப் புழு கொல்லப் படுவதில்லை. இதனால், குறுகிய காலத்தில், ஆமணக்குப் பட்டுப் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், அடுத்த சந்ததிக்காகக் கூடுகளைத் தனியாக ஒதுக்கவும் தேவையில்லை.
வளர்ச்சியடைந்த பூச்சி, பட்டுக் கூட்டை விட்டு வெளி வருவது ஒரு நுட்பமான செயலாகும். பல சடுர்னிடே அந்துகளில் முன் இறக்கையில், இரு முள்கள் உள்ளன. முது நிலை நிறைவுயிரிப் பூச்சி கூட்டை விட்டு வெளி வரு முன், தன் இறக்கையால் கூட்டைக் கிழித்து விடும். மேலும், மல்பெரிப் பட்டுப் பூச்சி தன்னால் சுரக்கப் படும் ஒரு நீர்மத்தால், கூட்டின் ஒரு முனையைக் கரைத்துக் கூட்டை விட்டு வெளி வரும். ஆனால், ஆமணக்குப் பட்டுப் பூச்சி அவ்வாறு செய்வதில்லை. இதன் கூடு, கட்டப் படும் போதே, வெளி வருவதற்கு ஏற்றதாக, ஒரு பக்கத்தில் வளர்க்கப் பட்ட இழையினால் மூடப் பட்டுள்ளது. இதனால், வெளியிலிருந்து கூட்டினுள் செல்வது கடினம். ஆனால்,பூச்சி உள்ளிருந்து வெளி வரும் போது, இழைகள் நகர்ந்து விலகி வழி விடுகின்றன. பூச்சி வெளி வந்த பின், கூடு உள் வெளி மாற்றம் செய்யப் பட்டு, கூட்டின் உள்ளிருக்கும் கூட்டுப் புழுவின் தோல் வெளியேற்றப் படுகிறது. பின்னர், கூடு குளிர் நீரில் 18 மணி நேரத்திற்கு ஊற வைக்கப் பட்டு, 45 நிமிடங்கள் வெப்பமான சோடா நீரில் கழுவப் பட்டு, உலர வைக்கப் பட்டு இழையாக நூற்கப் படும்.
ஆமணக்குப் பட்டுக் கூட்டில் உள்ள பட்டின் எடையைக் காண, ஒரு வளர்ந்த புழு முதல், பூச்சி வரை எடை போடப்படுமேயானால், கீழ்க் காணுமாறு அமைகிறது.
முழு வளர்ச்சியடைந்த புழு 126.0 கிராம். கூடு, கூட்டுப் புழு வெளி வரு முன் 47.4 கிராம். கூட்டுப் புழு வெளி வந்த பின் 8.2 கிராம். கூட்டுப் புழுவின் தோல் 1.1 கிராம். எனவே, எஞ்சியுள்ள பட்டு இழையின் எடை 7.7 கிராம் மட்டுமே. 26 கிராம் எடையுள்ள முட்டைகள் 1600 புழுக்களையும், 4 கிலோ எடையுள்ள பட்டையும் அளிப்பதற்கு, உணவுப் பயிராக 1/2 ஹெக்டேர் நிலத்தில், விளைந்த ஆமணக்குப் பயிர் தேவைப் படுகிறது. ஒரு ஆமணக்குப் பட்டுப் புழு, ஒரு பவுண்டு பட்டு அளிக்க 75 முதல் 90 பவுண்டு வரை இலைகளை உணவாக எடுத்துக் கொள்கிறது. ஒரு முழுமையாக வாழ்க்கைச் சுழற்சிக்கு, ஆமணக்குப் பூச்சி கோடையில் 80 நாள்களும், குளிர் காலத்தில் 85 நாள்களும் எடுத்துக் கொள்ளும். ஆமணக்குப் பட்டுப் பூச்சி ஒர் ஆண்டில் 5–6 தலைமுறைகள் உண்டாக்கக் கூடிய பன்முறைச் சுழற்சியுள்ள ஒரு பூச்சியினமாகும். இத்தகைய ஆமணக்குப் பட்டுப் புழு, மாறுபடும் வெப்ப நிலையையும், ஈரப் பதத்தையும் தாங்கக் கூடியது. இது சாதாரணச் சம வெளி முதல் 1.5 கி.மீ. உயரம் வரையிலும் மிகவும் வெற்றிகரமாக வாழக் கூடியது. ஆனால், நீர் தங்கும் இடங்கள் இதன் வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.
ஆமணக்குப் பட்டுப் பூச்சி வளர்ப்பிற்கு ஆமணக்குப் பட்டு வளர்ப்பு (ericulture) என்று பெயர். இவ்வகைப் பட்டு வளர்ப்பு சிக்கனமானாலும், எளிதில் மேற்கொள்ளக் கூடியதுமாகும். சூழ்நிலை சரியாக அமையுமானால், இப்புழுக்களை ஆண்டு முழுவதும் வளர்க்கலாம். இந்தியாவில், அஸ்ஸாம் மாநிலத்தின் மலைப் பகுதிகளில் குடிசைத் தொழிலாகப் பரவியிருந்த, இந்த ஆமணக்குப் பட்டு வளர்ப்பு தற்போது ஒரிசா, மேற்கு வங்கம், மத்தியப் பிரேதசம், தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப் பட்டுத் தமிழ்நாட்டில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில், ஒரு முதன்மைத் தொழிலாகச் செய்யப் பட்டுள்ளது. வறண்ட காற்று இராமையும், குறைந்த வெப்பமும், ஈரப் பதமும் தேவைப் படுவதால், தென் இந்தியாவில் மேற்குக் கடற்கரைப் பகுதிகள் ஆமணக்குப் பட்டு வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலை காணப் படுகிறது.
மர வள்ளிக் கிழங்குகள் பெரியனவாகவும், எடை கூடுதலாகவும் இருக்க, 5 மாதத்திற்குப் பின் அவற்றின் இலைகள் அவ்வப்போது உதிர்க்கப் படுகின்றன. அந்த இலைகள் ஆமணக்குப் பட்டு வளர்ப்பிற்குப் பயன் படுத்தப் படுகின்றன. ஆமணக்குப் பட்டு வளர்ப்பு மர வள்ளிப் பயிரில் மேற்கொள்ளப் படுமேயானால், விவசாயிகளுக்கு அது ஒரு பருவ காலத் துணை வருவாயாக அமையும். விவசாயிகளின் குறைந்த கவனமே அதற்குப் போதுமானது. மேலும், பட்டுப் பூச்சியைத் தாக்கக் கூடிய பல்வேறு நோய்களை எதிர்க்கும் ஆற்றலை ஆமணக்குப் பட்டுப் பூச்சிகள் கொண்டுள்ளமையால், ஆமணக்குப் பயிரை உண்ணும் ஆமணக்குப் பட்டுப் பூச்சிகள் பெரியன வாகவும், மிகுபட்டுள்ள கூட்டை அளிப்பவையாக இருந்தாலும் கூட, அறிவியல் ஆய்வுகளின் படி மர வள்ளிச் செடியில் வளர்க்கப் படும் பட்டுப் பூச்சிகள் ஆமணக்குப் பயிரை உண்ணும் பூச்சிகளுக்கு ஈடு கொடுப்பது அறியப் பட்டுள்ளது. —முத்து. வரதராசன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 444)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/knbk74zc/
தமிழ்“பட்டுப் பூச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/knbk74zc/APA
Oliyon Research. (2026). பட்டுப் பூச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/knbk74zc/MLA
"பட்டுப் பூச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/knbk74zc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment