சைவ சித்தாந்தத்தில் ஞானம் நான்கு படிகளாக நிகழும் என்றும், அவை கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை என்பன. அவற்றுள் நிட்டையே முடிந்த நிலை என்றும் சொல்லப்படுகின்றன. இந்த நிட்டை நிலையை அடைந்தோர் அதனின்று மீளாது அசைவின்றி நிற்றல் வேண்டும். ஆயினும், அது சிலருக்கு இயலாமல் நிட்டையில் செல்வதும் மீள்வதுமான ஓர் அலைவு நிலை உண்டாகும். அந்த அலைவு நீங்கி நிலையான நிட்டை நிலையை அடைவதற்குச் சொல்லப்படும் வழியே உபாய நிட்டை எனப்படுகின்றது. உபாய நிட்டையாவது சீவான்மா பரமான்மாவினிடத்தில் அழுந்தித் தன்னை மறந்து இருக்கும் நிலையில், அசைவின்றி நிற்கமாட்டாமல் பழைய பழக்க வாசனையால் சூக்கும, தூல உடம்புகளாகிய கருவிகளில் முன்போலவே பொருந்தி, தன்னையும் உலகத்தையும் கண்டு இன்ப துன்ப மயக்கங்களை அடையும் நிலை தோன்றுமாயின், அருளாசிரியர் அறிவுறுத்த அருள்மொழிகளை நினைந்து, பாச, பசு, பதிகளாகிய முப்பொருளின் இயல்புகளை மறவாது உணர்ந்து நிற்றலேயாகும். அங்ஙனம் உணர்தற்கு வழியாக உள்ளத்திலே வைத்து உணர்தற்குரிய ஒரு குறிப்பொருள் அருளாசிரியரால் காட்டவும் படும். அக்குறியின் வழி அறிவை நிலை பெறுத்தலும், பின்பு அக்குறியை விடுத்து உலகெங்கும் சிவத்தை அகண்டப் பொருளாக உணர்ந்து நிற்றலும் ஆகிய இவையே உபாய நிட்டையாகும். சி.அ.