இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு
ilīkē, ilūyicu caimūr pācaṭṭu
மானிடவியல், தொல்லுயிரியல், தொல்லியல் முதலான துறைகளில் சிறந்த ஆய்வுகளை மேற் கொண்ட அறிஞர்; ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கும் முந்தைய மனித நிலைகளை முதன் முதலாக ஆய்ந்தவர்.
மானிடவியல், தொல்லுயிரியல், தொல்லியல் முதலான துறைகளில் சிறந்த ஆய்வுகளை மேற் கொண்ட அறிஞர்; ஆப்பிரிக்காவின் வரலாற்றுக்கும் முந்தைய மனித நிலைகளை முதன் முதலாக ஆய்ந்தவர். இவர் கென்யா நாட்டில் நைரோபியின் அருகிலுள்ள சுபெட்டி என்னுமிடத்தில் 1903–ஆம் ஆண்டு பிறந்தார்.
இலீகே
முதல் உலகப் பெரும் போராலும், கென்யா நாட்டில் தாய் தந்தையர் குடியேறியிருந்தமையாலும், தம் தாய்நாடான இங்கிலாந்தில் தொடர்ச்சியாகப் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் மேற்கொள்ள இயலாமற் போயிற்று. கென்யாவில் இருந்த காலத்தில் இலீகே (Lewis Seymour Bassat Leakay) கிக்கூயு கிளை மொழியையும், 1923–ஆம் ஆண்டில் கனடா நாட்டின் தொல்லுயிரியலார் டபுள்யு.இ. குட்லருடன் ஆய்வுப் பணியின் உதவி புரியும் பொழுது சுவாகிலி என்னும் கிழக்கு ஆப்பிரிக்கக் கிளை மொழியையும் கற்றார். இப்பணியின் பொழுதே தொல்லுயிரியலில் மிகவும் ஆர்வங் கொண்டு புதைபடிவங்களை ஆராய்வதில் மூழ்கினார்.
இதன் பின்னர், கிழக்கு ஆப்பிரிக்கத் தொல்லியல் ஆய்வுக் களப்பணிகளை 1926, 1927, 1928–29, 1931–32 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்டார். இந்த ஆய்வுப் பணியே, கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதிகளில் தொல்லியல், தொல்லுயிரியல் ஆகியவற்றின் அறிவினை முதன்முதலாக உலகுக்கு அறிவித்தது. தான்சானியாவில் ஓல்டுவாய் சார்சு (Olduvai George) என்னும் இடத்தில் தனது ஆய்வைத் தொடங்கினார். இவ்விடமே இவரது புகழ்பெற்ற கண்டுபிடிப்புகளுக்கு அமைவிடமாய் இருந்தது. இங்குக் கிடைத்த ஓமினிடு (Hominid) மண்டை ஓடுகளை ஆராய்ந்து அவற்றிற்குச் சின்சேன்திரபசு (Zinjanthropus) எனப் பெயரிட்டார். இதனை இக்காலத்தில் ஆத்திரலோபித்திகசு என அறுதியிட்டுள்ளனர். எனினும் இலீகே, சின்சேன்திரபசுவை மனிதனின் நேரான மூதாதையர் அல்லர் என முடிவு செய்தார். இக்காலத்திலேயே சின்சேன்திரபசுவிற்கு இணையாக வாழ்ந்திருக்கும் என ஊகிக்கும் ஓமோ ஏபிலிசு (Homo Habilis) என்னும் மண்டையோட்டைக் கிழக்கு ஆப்பிரிக்காவில் இலீகே கண்டெடுத்தார். இது சின்சேன்திரபசுவைக் காட்டிலும் வளர்ச்சி பெற்ற இக்கால மனிதனுக்கு ஓரளவு நெருங்கிய மூதாதையராக இருக்க முடியும் எனக் கூறினார். பெரும்பாலான அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லையாயினும் இவர்தம் ஆய்வுகள், இக்கூற்றை ஆராய அடித்தளமாக அமைந்ததை அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
இவ்வாய்வுக்குப் பின் இவர் கேம்பிரிட்சு, எடின்பரோ, பர்மிங்காம் முதலான பல்கலைக் கழகங்களில் ஆய்வாளராகவும் சிறப்பு விரிவுரையாளராகவும் பணியாற்றினார். இக்காலங்களில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் திரட்டே 1961–ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட ‘ஆப்பிரிக்காவில் மனிதனின் முன்னேற்றமும் படிமுறை வளர்ச்சியும்’ ஆகும். இந்த வெளியீட்டுக்குப் பின்னர், அடுத்தடுத்துக் கலிபோர்னியா, ஏல், இலினாய், கார்னல், நைரோபி முதலான பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகவும் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றி இத்துறைகளில் தொடர்ந்து முன்னோடி ஆய்வுகளை மேற்கொண்டார்.
இவரது ஐம்பது ஆண்டுக்கால ஆராய்ச்சியினால் இன ஒப்பாய்வியல், உயிரினலியல், வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய தொல்லியல் தொல்சூழ்நிலையியல் (Palaeoecology) முதலான துறைகளில் ஆய்வுகள் மிகுந்தன. பல முன்னோடிக் கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட இவருக்குப் பல சிறப்புப் பட்டங்கள் அளிக்கப்பட்டன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 429)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khvkc54v/
தமிழ்“இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/khvkc54v/APA
Oliyon Research. (2026). இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/khvkc54v/MLA
"இலீகே, இலூயிசு சைமூர் பாசட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/khvkc54v/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment